சிறுவர்மணி

மழையே மழையே வருக!

20th Jun 2020 05:00 PM | சி.விநாயகமூர்த்தி

ADVERTISEMENT

ஆழி நீரே ஆதவனால் 
ஆவியாக மாறி 
மேலே திரியும் மேகமாகி 
மிதக்கும் வான வெளியில்!

வெட்டும் மின்னல் வீசும் காற்று 
முட்டும்போது கரையும்!
பட்டு மேகம் கருமையாகும் 
கொட்டும்போது மட்டும்!

சின்னஞ்சிறிய துளிகளாகச் 
சிதறினாலும் யாவும் 
ஒன்று சேர்ந்து மழையென்றாகி
உருளும் நதிகள் ஆகும்!

நீரில்லாமல் மீன்கள்இல்லை
நிலமும் விளைவதில்லை!
பாரில் வாழும் உயிர்களுக்குப் 
பருகும் நீரும் இல்லை!

ADVERTISEMENT

பச்சைப் புல்லும் முளைப்பதில்லை
பாடல் உண்டு குறளில்!
உச்சிமேகம் கரைந்திடாமல் 
உழவும் தொழிலும் இல்லை!

காயும் நிலங்கள்... மழையில்லாமல் 
கடவுள் பூசை நிற்கும்!
எடுத்துக் கூறும் குறள் மதித்து 
இர(ற)ங்கி வருவாய் மழையே!

மாரி என்ற மழையை வள்ளல் 
பாரி என்பார் கபிலர்!
வாரி வழங்கும் வான் சிறப்பை 
வள்ளுவமும் வாழ்த்தும்!

மாமழையைப் போற்றுகின்றார் 
பாமழையில் இளங்கோ!
பூ மழையும் நல்லவர்க்காய் 
பொழியும் என்றாள் ஒளவை!

தீங்கில்லாமல் பொழிய வேண்டும்
திங்கள் மூன்று மாரி!
பாங்குடன் பாடி வைத்தாள் 
பாவை ஆண்டாள் அன்று!

அருவி ஆடை , மலைகள்அணிய 
உருகி வருக மழையே!
கருகிடாமல் பயிர்கள் தழைக்க 
பெருகி வருக நதியே!

ADVERTISEMENT
ADVERTISEMENT