சிறுவர்மணி

தன்னம்பிக்கை!

13th Jun 2020 08:17 PM | கே.பி.பத்மனாபன்.

ADVERTISEMENT

கதைப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி என்ற அனைத்திலும கலந்துகொண்டு பரிசு பெறும் நாவரசனுக்கு ஒரேயொரு வருத்தம். தன்னால் பேச்சுப் போட்டியில் மட்டும் கலந்துகொள்ள முடியவில்லையே என்று. காரணம் அவனுக்கு கொஞ்சும் திக்குவாய். மற்றவர்களின் கேலிப்பேச்சைத் தவிர்ப்பதற்காக அவன் யாருடனும் அதிகமாகப் பேச மாட்டான். ஆதலால் தனது நேரத்தைப் பல நூல்களை வாசித்துத் தன் அறிவை வளர்ப்பதில் செலவழிப்பான்.

அவனது வருத்தத்தை போக்க அவனது தாயார், ""கவலைப் படாதே கண்ணு,..... மத்த விஷயங்களிலே உன் திறமையைக் காட்டினா போதும். ஒவ்வொரு
வருக்கும் ஏதாவது ஒரு குறை இருக்கத்தான் செய்யும். அதே சமயம் வேறே ஏதாவது ஒரு திறமை இருக்கும். அந்தத் திறமையை வளர்த்துட்டா குறை தெரியாமலே போகும்.நம்பிக்கைதான் முக்கியம்!'' என்று அன்பாக நாவரசனுக்கு உரம் ஊட்டுவார். அம்மா சொன்னால் அவனுக்கு வேதவாக்கு!

பள்ளியில் அறிவிக்கப்பட்ட எல்லாப் போட்டிகளிலும் கலந்து கொள்ளத் தன் பெயரைப் பதிவு செய்த நாவரசனுக்கு, பேச்சுப் போட்டியின் தலைப்பைப் பார்த்ததும் பேச வேண்டும் போல் இருந்தது. ஆனால் தன் இயலாமையை எண்ணி மிகவும் வருந்தினான். ஏனெனில் அந்தத் தலைப்பு "அம்மா!'

மாலையில் வீட்டுக்கு வந்ததும் அம்மாவிடம் தன் வருத்தத்தை அழுதவாறே கூறினான். அவனது அம்மா, "" உன் கருத்தைச் சொல்ல நீ ஏன் தயங்க வேண்டும்?.... பேச்சுப் போட்டியில் கருத்துகளுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். உன்னால் முடிந்த அளவுக்கு தைரியமாகப் பேசிப் பாரேன்!.....

ADVERTISEMENT

ஏன் தயங்குகிறாய்? பரிசு பெறுவது முக்கியம் இல்லை. பங்கு பெறுவதும் நமது நல்லெண்ணங்களை மற்றவர்கள் அறியச் செய்வதும்தான் முக்கியம். தயங்காமல் போட்டியில் கலந்துகொள்.'' என்று ஊக்கமளித்ததும் அவன் பேச்சுப் போட்டிக்கும் தன் பெயரைப் பதிவு செய்தான்.

பேச்சுப் போட்டியில் அவனது பெயர் கடைசியாக இடம் பெற்றதில் அவனது மனதுள் ஒருவித மகிழ்ச்சி ஏற்பட்டது. மற்றவர்களின் உரைகளை அவன் கூர்ந்து கவனித்தான். அதில் பலர் எழுதி மனப்பாடம் செய்து ஒப்பித்ததைக் கண்டான். நாவரசனுக்கு அத்தகைய உதவியின்றியே தன்னால் பேச முடியும் என்ற நம்பிக்கை இருந்தது.

நாவரசன், அவனுக்கு முன்பாகப் பேசியவர்களின் ஒரே மாதிரியான கருத்துக்களைத் தவிர்த்தான். ஆங்காங்கே சற்று திக்கினாலும் நல்ல புதிய கருத்துக்களோடு தெளிவாகப் பேசினான். மேலும் இந்தப் போட்டியில் கலந்துகொள்ள தன் அம்மா கூறிய வார்த்தைகளை அற்புதமாக எடுத்துரைத்தான். அதில், ""பரிசு முக்கியமல்ல!..... பங்கு பெறுவதுதான் முக்கியம்!..... நம் நல்ல எண்ணங்களை மற்றவர்கள் அறியச் செய்வதுதான் முக்கியம்!....'' என்று கூறிய வார்த்தைகள் அனைவரது கரகோஷத்தையும் எழுப்பியது! அம்மாவின் உயர்வான மகத்துவத்தை அங்கு கூடியிருப்பவர்கள் அனைவரும் மனமுருகி உணர்ந்தனர். அவனது திக்கல்கள் யாருக்கும் குறையாகத் தோன்றவில்லை..

தலைமை வகித்த அறிஞர், ""பேச்சுப் போட்டியில் அனைத்து மாணவர்களும் சிறப்பாகப் பேசினர். அதில் நாவரசனின் பேச்சில் நல்ல உயர்ந்த கருத்துக்கள் அதிகமிருந்தன. தனது திக்கல்களையும் பொருட்படுத்தாமல் மேடையேறித் தன் கருத்துக்களை ஆணித்தரமாகப் பேசியதற்காகவும், அவனது தன்னம்பிக்கைக்காகவும், அவனுக்கே முதற்பரிசு எனத் தேர்வு செய்கிறேன்!....மேலும் அவனது பேச்சுத் திறமையை வளர்க்க இது மாதிரி போட்டிகளில் கலந்துகொண்டு நிறையப் பேசிப் பழகினால் திக்கல்கள்கூட குறைந்துவிடும்! அவனுக்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும்!''

பரிசுடன் மகிழ்ச்சியோடு வீட்டுக்கு வந்த நாவரசன் அம்மாவைக் கட்டிப்பிடித்துக்கொண்டு, ""நீ இல்லேன்னா இந்தப் பரிசை நான் வென்றிருக்க முடியாதும்மா!' என்றான்.

அவனது தாய் அன்புடன் அவன் தலையைக் கோதிவிட்டாள்!

ADVERTISEMENT
ADVERTISEMENT