சிறுவர்மணி

தமிழோடு விளையாடு!

25th Jan 2020 11:13 AM

ADVERTISEMENT

எஸ்.ஆர்.ஜி.சுந்தரம்

அரங்கம்
 காட்சி - 1

இடம் - கடற்கரைச் சாலை, மாந்தர் - உமாபதி, விக்னேஷ், சரண், நவீன்.
 (காலை வேளையில் நால்வரும் நடைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்கள்)
 விக்னேஷ் : டேய், நவீன், நம்ம குரூப் நல்ல குரூப்! ஒரே தெருவிலே இருக்கோம்! ஒரே ஸ்கூல்லே அதுவும் ஒரே கிளாஸிலே படிக்கிறோம்!
 நவீன் : ஆமாம் விக்னேஷ்! கொஞ்ச நாள்லே நாம கிரிக்கெட் டீம் கூட ஆரம்பிச்சுடலாம்! இதே பீச் மணல்லே பிராக்டிஸ் பண்ணிக்கலாம்!
 சரண் : பெஸ்ட் ஐடியா!
 உமாபதி : எங்க வீட்டுக்குப் பக்கத்திலே ஒரு காலி கிரவுண்ட் இருக்கு.... ஃபுட் பால் விளையாட நல்ல இடம்.
 நவீன் : இப்படி நாம ஒண்ணா சேர்ந்து நடைப்பயிற்சி செய்யறது என் மம்மி டாடிக்குக் கூட ரொம்ப சந்தோஷம்!
 சரண் : எங்க மம்மி டாடிக்குக் கூட ...
 (பின்புறம் ஒரு பெரியவர் வந்து கொண்டிருக்கிறார்)
 பெரியவர் : பிள்ளைகளே கொஞ்சம் நில்லுங்க....
 சரண் : யார் நீங்க? குல்லா, கோட்டு, போர்வையோட வாய், மூக்கு, காது எல்லாத்தையும் மூடிக்கிட்டு இருக்கீங்களே?
 விக்னேஷ் : ஏதாவது வழி கேட்கணுமா?
 பெரியவர் : நான் உங்களுக்கெல்லாம் வழி சொல்றவன் தம்பி! என் உடம்புக்குப் பனி ஆகாது! அதான் இப்படி!
 நவீன் : அலர்ஜின்னு சொல்லுங்க...
 பெரியவர் : ஏன், உடம்புக்கு ஆகாதுன்னு தமிழ்லே சொன்னா நல்லா புரியுது இல்லே?
 சரண் : சரி, எதுக்கு எங்களை நிக்கச் சொன்னீங்க?
 பெரியவர் : ஒரு ஐந்து மணித்துளிகள் உங்களோடு பேசணும் தம்பி!
 நவீன் : ஐந்து மணித்துளிகள்னா?
 விக்னேஷ் : மணிங்கறது நேரம்,.... துளிகள்னா?.... சரி, சார்!... நீங்க என்ன பேசணும்? எங்களுக்கு டைம் ஆயிடும்!
 பெரியவர் : இன்னிக்கு ஞாயிற்றுக் கிழமைதானே! என்ன அவசரம்?
 உமாபதி : எங்க மம்மி டாடி கவலைப்படுவாங்க!....
 (பெரியவர் சிரிக்கிறார்)
 விக்னேஷ் : எதுக்கு சிரிக்கிறீங்க?
 பெரியவர் : நீங்க சாக்லேட் கலந்த சர்க்கரைப் பொங்கல் சாப்பிட்டிருக்கீங்களா?
 நவீன் : ஐயய்ய... சாக்லெட் கலந்த சர்க்கரைப் பொங்கலா? நல்லாவே இருக்காது!
 பெரியவர் : சரி, அவியலோடு சாம்பாரைக் கலந்து சாப்பிட்டா அது எப்படி இருக்கும்?
 சரண் : அது எப்படி சார் நல்லா இருக்கும்? இந்த மாதிரி உணவுக் கலப்படம் யாருக்கும் பிடிக்காது!
 பெரியவர் : ஆமாம்!.... சர்க்கரைப் பொங்கல், அவியல், இதையெல்லாம் தனித்தனியே சாப்பிட்டவங்களுக்கு இந்த மாதிரிக் கலப்படம் பிடிக்காதுதான்! ஆனா, உங்களுக்கு மட்டும் பிடிக்கும் போலிருக்கு!
 உமாபதி : என்ன சார் சொல்றீங்க?
 பெரியவர் : உணவுக் கலப்படம் பிடிக்காதுங்கறீங்க,..... ஆனா மொழிக் கலப்படம் மட்டும் பிடிச்சிருக்கா?
 விக்னேஷ் : நாங்க எங்கே கலப்படம் பண்ணோம்? தமிழிலேதானே பேசிக்கிட்டு வர்றோம்!
 பெரியவர் : என்ன கலப்படம்னு தெரியாம பேசிக்கிட்டிருக்கீங்க!.... அதான்!.... குரூப் தமிழா? குழு தமிழா?,,,,... கிளாஸ் தமிழா? வகுப்பு தமிழா?.....ஐடியா தமிழா? யோசனை தமிழா?.... ஃபுட்பால் தமிழா? கால்பந்து தமிழா? .... எக்ஸர்சைஸ் தமிழா? பயிற்சி தமிழா?
 நவீன் : ம்...ம்... இரண்டாவதா சொன்னதுதான் தமிழ்!
 பெரியவர் : ஒரு நிமிஷப் பேச்சிலே நீங்க எவ்வளவு ஆங்கில வார்த்தைகளைக் கலந்து பேசியிருக்கீங்க? இது மொழிக் கலப்படந்தானே?
 சரண் : இப்படித்தான் சார் எல்லாரும் பேசறாங்க!
 பெரியவர் : ம்.... அப்போ சர்க்கரைப் பொங்கல்லே சாக்லெட் கலந்து எல்லாரும் சாப்பிட்டா நீங்களும் சாப்பிடுவீங்களா? நீ ஜப்பான் மொழி படிக்கறே.... நீ ஜெர்மன் மொழி படிக்கறே,.... நீ பிரெஞ்சு மொழி படிக்கறே.... கொஞ்ச நாள்லே இந்த மொழி வார்த்தைகளையும் தமிழோடு கலந்து பேசப் போறீங்க.... அப்போ தமிழ் மொழியோட ருசி, கலப்பட சர்க்கரைப் பொங்கல், கலப்பட அவியல் மாதிரிதான் இருக்கப் போவுது!....
 சரண் : சார், நாங்க படிக்கற மொழியைப் பத்தி சரியா சொல்றீங்க.... நீங்க யாரு?
 பெரியவர் : அதை சமயம் வரும்போது சொல்றேன்..... சரி, இப்போ இந்தச் சின்னக் கையகராதியை வெச்சுக்குங்க.... பேச்சு மொழியிலே நீங்க இப்போ பேசிக்கிட்டு வர்ற ஆங்கிலச் சொல்லுக்கெல்லாம் சரியான தமிழ்ச்சொல் இதுலே இருக்கு!.... இதை நல்லாப் படிச்சுட்டு கலப்பட வார்த்தை இல்லாத தமிழைப் பேசிப் பாருங்க...... அப்போதான் தமிழோட ருசி தெரியும்!..... நான் வரேன்!
 விக்னேஷ் : டேய், பெரியவர் சொன்னதும் சரிதான். நம்மை அறியாம எவ்வளவு ஆங்கில வார்த்தைகளைக் கலந்து பேசிக்கிட்டிருக்கோம்!....
 நவீன் : ஒண்ணு செய்வோம்!.... இந்தச் சின்னக் கையகராதியை ஒரு மாசத்திலே படிச்சு முடிச்சுடுவோம்.... அப்புறம் இந்த நடைப்பயிற்சிக்கு வரும்போது கலப்படம் இல்லாத தமிழ்லே பேசிப் பார்ப்போம்!
 சரண் : அப்படி ஆங்கிலக் கலப்படம் இல்லாம யார் பத்துநாள் தொடர்ந்து பேசியிருக்காங்களோ அவங்களுக்கு, "தமிழ்க்கனி' ன்னு பேர் வெச்சு பார்ட்டி கொடுப்போம்!
 உமாபதி : டேய், பார்ட்டி ஆங்கில வார்த்தை.... அதுக்கு என்னடா தமிழ்?
 விக்னேஷ் : அகராதியைப் பாத்துக்குவோம்.... ஆனா, "தமிழ்க்கனி' பட்டம் தருவது பெஸ்ட் ஐடியா!
 சரண் : டேய், "நல்ல யோசனை' ன்னு சொல்லுடா!
 உமாபதி : அப்போ நீதான் எதிர்காலத் தமிழ்க்கனியா"
 (சிரிப்பலைகள்)
 காட்சி - 2
 இடம் - தமிழேந்தி வீடு, மாந்தர் - தமிழேந்தி, நவீன், சரண், உமாபதி, விக்னேஷ்.
 (ஒரு மாதம் கழித்து ---- நால்வரும் தமிழேந்தியைப் பார்க்க வருகிறார்கள்)
 தமிழேந்தி : டேய், என்னடா நாலு பேருமா ஒண்ணா வந்திருக்கீங்க.... வாங்க...
 நவீன் : தமிழேந்தி, நீ ஆங்கிலம் கலக்காத நல்ல தமிழ் பேசறே! பல போட்டிகள்லே சுத்தமான இலக்கணத் தமிழ்லே பேசி, பரிசு, பட்டம் வாங்கியிருக்கே! நீ எங்களுக்கு ஒரு ஹெல்ப் பண்ணணும்!
 தமிழேந்தி : ம்....ஹெல்ப் எதற்கு? உதவி வேண்டும் என்று சொல்லுங்கள்.
 சரண் : சரி, நாங்களும் உன்னை மாதிரி சுத்தத் தமிழில் பேச ஆசைப்படறோம்!
 தமிழேந்தி : (கேலிச்சிரிப்புடன்) நீங்களா? சுத்தத் தமிழா?.... கடினம்.... கடினம்.... முதலில் உங்கள் பேச்சுத் தமிழில் ஆங்கிலம் கலக்காமல் பேசிப் பழகுங்கள்.
 உமாபதி : அதற்காகத்தான் உன் உதவி கேட்க வந்துள்ளோம்.
 தமிழேந்தி : சரி, நான் என்ன செய்ய வேண்டும்?
 விக்னேஷ் : நாங்கள் தினமும் கடற்கரைச் சாலையில் நடைப்பயிற்சி செய்கிறோம்.... அப்பொழுது நிறையப் பேசிக்கொண்டே நடப்போம்....
 நவீன் : அதுலே ஆங்கிலச் சொல் கலந்து பேசினா நீ
 எடுத்துக் காட்டி கரெக்ட் செய்யணும்!
 தமிழேந்தி : கரெக்ட் வேண்டாம்! சரி செய்யணும்னு சொல்.
 சரண் : பத்து நாள் நீ எங்களோடு வரணும்.... பத்து நாளும் யார் ஆங்கிலச் சொல் கலக்காம பேசறாங்களோ அவங்களுக்கு நீ "தமிழ்க்கனி' ன்னு பட்டம் கொடுக்கணும்!
 தமிழேந்தி : (கேலிச்சிரிப்புடன்) கவலைப்படாதீங்க,..... அந்தத் தமிழ்க்கனிப் பட்டம் உங்க யாருக்கும் கிடைக்காது. உங்க யாருக்குமே தமிழ்க்கனி பட்டம் கிடைக்கலேன்னா அதை எனக்குக் கொடுக்கணும்! சம்மதமா?
 உமாபதி : ஆனா, நீயும் ஒரு ஆங்கிலச் சொல்கூட கலக்காம பேசியிருக்கணும்!
 தமிழேந்தி : டேய், எனக்குத் தூக்கத்திலேகூட ஆங்கிலச் சொல் வராது!
 விக்னேஷ் : சரி, நாளைக்காலை திருவள்ளுவர் சிலை கிட்டே வந்துடு! வரோம்!
 காட்சி - 3
 இடம் - கடற்கரைச்சாலை, மாந்தர் - தமிழேந்தி, நவீன், சரண், விக்னேஷ், உமாபதி.
 (ஒன்பது நாட்கள் நடைப்பயிற்சி நேரப் பேச்சுப் பயிற்சி போட்டி நடந்து முடிந்து விட்டது. இன்று பத்தாம் நாள்)
 தமிழேந்தி : என்ன நண்பர்களா! ஒன்பது நாட்களாக நடந்து முடிந்த சொற்பயிற்சியில் நீங்கள் ஒருவர்கூடத் தேறவில்லை. நீங்கள் எல்லோருமே பேச்சில் ஆங்கிலச் சொல் கலந்து பேசி தோற்றுவிட்டீர்கள். இன்று பத்தாம் நாள்! கடைசி நாள்! இன்னும் நான்தான் ஆங்கிலம் கலக்காமல் பேசி உங்கள் தமிழ்க்கனி பட்டத்தைப் பெறப்போகிறேன். நவீன், நமது பள்ளிக்கூடத்தில் உனக்கு ரொம்பப் பிடித்த இடம் எது?
 நவீன் : ஒன்று லைப்ரரி, இன்னொன்று எலிஃபண்ட் என்ட்ரன்ஸ்.
 தமிழேந்தி : இவற்றை நூலகம், யானை வாயில், என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும்?
 நவீன் : ஆமாம்! கரெக்ட்!
 தமிழேந்தி : "சரி' என்று சொல்லவேண்டியதுதானே! நவீன் அங்கே பார்!
 நவீன் : ஹா! பியூட்டிஃபுல்! எவ்வளவு பெரிய நிலா! எல்லோரும் அங்கே பாருங்கள்! மூன் ரைஸ்!
 தமிழேந்தி : எவ்வளவு அழகு! சந்திரோதயம்! என்று சொல்லியிருக்கக்கூடாதா! ஒரு நிமிடப் பேச்சிலேயே ஐந்து ஆங்கிலச் சொற்களைக் கலந்து விட்டாய்! சரி! விக்னேஷ், நீ என்ன யோசித்துக் கொண்டிருக்கிறாய்?
 விக்னேஷ் : நாளைக்கு ஒரு மாறுவேடப் போட்டியில் கலந்து கொள்ளப் போகிறேன்! என்ன மாதிரி டிரெஸ் நன்றாக இருக்கும்னு திங்க் பண்ணிக்கிட்டிருக்கேன்!
 தமிழேந்தி : என்ன மாதிரி உடை நன்றாக இருக்கும்னு யோசித்துக் கொண்டிருக்கிறேன்..... இதுதானே சரி விக்னேஷ்!.... கவனமாகப் பேசியிருந்தால் சரியாகப் பேசியிருப்பாய்! இல்லையா?
 விக்னேஷ் : ஷ்யூர்!.... ஷ்யூர்!
 தமிழேந்தி : (கேலியாகச் சிரித்தபடி) ஆமாம் உண்மைதான்! என்ற பதிலைக்கூட சொல்லமுடியாதா? சரி, உன் சட்டைப் பையில் பேனா நன்றாகக் காட்சியளிக்கிறது!
 விக்னேஷ் : ஆமாம்! இதை எனக்கு என் அங்கிள் கிஃப்டாகக் கொடுத்தார்.
 தமிழேந்தி : தவறு விக்னேஷ்! "மாமா கொடுத்த அன்பளிப்பு' என்று சொல்லத் தோன்றவில்லையா? நீயும் ஒரு நிமிடப் பேச்சிற்குள் ஐந்து ஆங்கிலச் சொற்களைக் கலந்து விட்டாயே!
 உமாபதி : டேய், நவீன், விக்னேஷ் நீங்க கொஞ்சம் யோசிச்சுப் பேசியிருந்தா சரியான தமிழ்ச்சொல் ஞாபகத்திற்கு வந்திருக்கும்! எல்லாம் ஈஸியான சொற்கள்தான்!
 (மற்ற எல்லோரும் சிரிக்கிறார்கள்)
 தமிழேந்தி : நீயாக வந்து வலையில் மாட்டிக்கொண்டு விட்டாய்! எளிய அல்லது சுலபமான சொற்கள்தான் என்று சொல்லியிருக்கலாம்! சரி உங்க வீடு எங்கே உள்ளது உமாபதி?
 உமாபதி : உங்க தெருவுக்குப் பின் தெருதான் தமிழேந்தி! அடுக்கு மாடிக் கட்டடம். லிஃப்ட் கூட இருக்கு. மொட்டை மாடியிலே சன் ரைஸ் பார்க்க அழகா இருக்கும்!
 தமிழேந்தி : ம்...அப்புறம்?
 உமாபதி : கீழே அழகா கார்டன்! அதுலே விதவிதமா ஃப்ளவர்ஸ்!
 தமிழேந்தி : உமாபதி, மின் தூக்கி, சூரிய உதயம், அழகான தோட்டம், விதவிதமாப் பூக்கள், இப்படிச் சொல்ல ஏன் முடியவில்லை? நீயும் தோற்றுவிட்டாய்! கவலைப்படாதே!
 சரண் : சபாஷ்! நீங்க மூணுபேரும் அவுட்! நான்தான் லாஸ்ட்! ஐயய்யோ! தப்பு, தப்பு!
 தமிழேந்தி : சொல்லியாகிவிட்டது! தப்பிக்க முடியாது சரண்! மூன்று பேரும் தோல்விதான்! நான்தான் கடைசியாக உள்ளேன்! இப்படிச் சொல்லியிருக்கலாமே!
 சரண் : சரி, சற்று நேரம் நாம் அமர்ந்து பேசலாமா?
 தமிழேந்தி : ஓ!.... இங்கேயே உட்காருவோம்!
 சரண் : இங்கே வேண்டாம். அதோ பீச் மணல்ல போட் கிட்டே உட்கார்ந்து பேசுவோம். ஒரு போட்டோவும் எடுத்துக்கலாம்!
 தமிழேந்தி : சரண், கடற்கரை மணல், படகு புகைப்படம் இந்த சொற்களைக்கூட பயன்படுத்த முடியாதா? நீங்க நால்வருமே தேர்ச்சி பெறவில்லை. ஆங்கிலம், கலக்காமல் பேசுவது எப்படி? ங்கறதைப் பத்தி ஒரு இளைஞர் பத்திரிகையிலே எழுதப் போறேன். ஒரு தொலைக்காட்சிகூட என்னைக் கூப்பிட்டிருக்காங்க....
 விக்னேஷ் : எதுக்கு?
 தமிழேந்தி : எதுக்குடா சாப்பிடவா கூப்பிடுவாங்க,.... என்னை இண்டர்வியூ பண்ணத்தான்!
 (எல்லோரும் சிரிக்கிறார்கள்)
 தமிழேந்தி : எதுக்குடா சிரிக்கிறீங்க?
 உமாபதி : பேட்டி எடுக்கத்தான்னு சொல்லாம இண்டர்வியூன்னு நீயோ சொல்லிட்டியே!
 சரண் : போ, உனக்கு நாங்க தர இருந்த தமிழ்க்கனி பட்டமும் போச்சு!
 பெரியவர் : (பின்புறமிருந்து) ஆமாம்! யானைக்கும் அடி சறுக்கியாச்சு!
 விக்னேஷ் : சார் நீங்களா?
 பெரியவர் : ஆமாம். எல்லாத்தையும் நானும் கேட்டுக்கிட்டுத்தான் வரேன்.... தமிழேந்தி நீ பல பட்டம் வாங்கியிருக்கலாம்... அதுக்காக அளவுக்கு அதிகமான தன்னம்பிக்கை அதாவது நாம தவறே செய்யமாட்டோம்கிற மனோபாவம் கூடாது.
 உமாபதி : சார் இன்னிக்கும் நீங்க குல்லா, கோட்டோடு வந்திருக்கீங்க.... எங்க எல்லாரைப்பத்தியும் தெரிஞ்சுக்கிட்டுப் பேசறீங்க, நீங்க யாரு?
 பெரியவர் : சரி, இப்ப தெரிஞ்சுக்குங்க... (காது, மூக்கைச் சுற்றியிருந்த துணியை எடுத்துவிடுகிறார்.)
 உமாபதி : டேய், நம்ம புதிய தமிழாசிரியர்! வணக்கம்! (எல்லோரும் வணக்கம் சொல்கிறார்கள்)
 பெரியவர் : பிள்ளைகளே! உங்கள் முயற்சி நல்ல முயற்சி! இதை விட்டுவிடாதீர்கள்! இப்படியே "கன்டின்யூ' பண்ணுங்கள்!
 சரண் : சார், நீங்களே கன்டின்யூன்னு சொல்லிட்டீங்களே!
 (எல்லோரும் சிரிக்கிறார்கள்)
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT