சிறுவர்மணி

குறள் நெறிக் கதைகள்! எது நிலையான செல்வம்?

25th Jan 2020 11:07 AM | லக்ஷ்மி பாலசுப்ரமணியன்

ADVERTISEMENT

ஞானி ஒருவர் ஒவ்வொரு ஊராகப் பயணம் செய்து கொண்டே இருந்தார். மக்கள் அவரை அணுகி தமது ஐயம் நீங்கப் பெற்றனர். அப்படி ஒரு முறை அவர் பயணம்செய்து கொண்டிருக்கும் வழியில் மிகவும் சோகமாய்க் கண்களில் நீர் வழிய ஒருவன் அமர்ந்து இருப்பதைக் கண்டார். அவன் மேல் பரிவு கொண்டார் ஞானி. அவன் அருகில் சென்று,
"உன் பெயர் என்னப்பா?'' என்று கேட்டார்.
"சித்தார்த்தன்'' 
"அப்பனே, ஏன் கண் கலங்குகிறாய்? உனக்கு என்ன பிரச்சினை? என்னிடம் கூறினால் நான் ஏதாவது ஒரு தீர்வை வழங்க முடியுமா? என முயற்சி செய்கிறேன்!'' என்று கூறினார்.
இதுவரை எவருமே தன்னிடம் பரிவுடன் பேசி அறிந்திராத அவன், கண்ணீர் மல்க, "அய்யா! என் செல்வம் முழுவதையும் நான் இழந்து விட்டேன்! நான் எந்தத் தொழில் செய்தாலும் அதில் லாபமே இல்லை! என் குடும்பத்தைக் காப்பாற்ற எனக்கு வழி தெரியவில்லை! என் உயிரை மாய்த்துக் கொள்ள லாம் போல இருக்கிறது!'' என்றான்.
அவன் நிலை கண்டு வருந்திய ஞானி, "அப்பனே தொலைந்த இடத்தில் தான் நீ பொருளைத் தேட வேண்டும்! அதோ அங்கு ஊர்ந்து செல்லும் எறும்புகளைப் பார்! அவை நமக்கு எத்தனைப் பாடங்களைக் கற்றுத் தருகின்றன?''
சித்தார்த்தன் ஞானியை உற்று நோக்கி, "எத்தனை பாடங்கள்?... என்னென்ன பாடங்கள்?''
"கூர்ந்து கவனி,....அவை நடை போடும் பாதையில் ஏதேனும் தடை வந்தாலோ அல்லது யாரேனும் தடுத்தாலோ...'' 
"பின் வாங்கிவிடுமா?'' என்று கேட்டான் சித்தார்த்தன்.
ஞானி சிரித்துக்கொண்டே, "அவசரப்படாதே!.... தடைகள் வந்தால் அவை, ஒன்று, அவற்றின் பாதையை மாற்றிக் கொள்ளும்,.... அல்லது அந்தத் தடை மீதே ஏறிக் கடக்கும்!....இதன் மூலம் எடுத்த காரியத்தை முடிக்காமல் எக்காரணம் கொண்டும் பின் வாங்கக் கூடாது என்பதை நாம் அறியலாம்!'' 
"ஏன் அப்படிச் செய்கின்றன?....அது ஆபத்தில்லையா?''
"ஆபத்தை அவை எதிர்கொள்கின்றன.... மழைக்காலத்தில் அவைகள் இப்படி உணவைத் தேட இயலாது!'' 
"அப்படியானால் மழைக்காலத்தில் அவை உணவுக்கு என்ன செய்யும்? பாவம் பட்டினியால் இறந்து போகுமா?'' என்று கேட்டான் சித்தார்த்தன். 
ஞானி புன்னகையுடன் சித்தார்த்தனை நோக்கி, "கோடை காலத்தில் மழை காலத்திற்கான உணவை அவை சேமிக்கத் தொடங்குகின்றன. அதன் மூலம் காலத்தைக் குறை கூறிக் கொண்டு உட்கார்ந்து இருக்காமல் தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற கருத்தை அவை நமக்கு உணர்த்துகின்றன... நேரம் சரியில்லை.... காலம் சரியில்லை... என்று மனிதர்கள் புலம்புவதைப்போல் அவை புலம்புவதில்லை!''
"எறும்புகள் மழை காலத்தில் கோடை காலத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கும். இதன் அர்த்தம் என்ன தெரியுமா?'' 
"என்னங்க ஐயா?'' 
"தற்போதைய கஷ்ட காலம் நிரந்தரமல்ல.... விரைவில் நல்லகாலம் பிறக்கும்... என்று அவை நம்பிக்கை கொள்கின்றன!'' 
"அப்படியானால் அவை மழைக்காலத்தில் புற்றுக்கு வெளியே வரவே வராதா?'' என்று கேட்டான் சித்தார்த்தன்.
" சரியாகச் சொன்னாய்.... வராது!.... இப்படிக் கோடையில் புற்றுக்கு வெளியிலும், மழைக் காலத்தில் புற்றுக்கு உள்ளேயும் வாசம் செய்து கொண்டு தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும். இதன் மூலம் எப்பொழுதும் நம்பிக்கையோடு இருக்க வேண்டும் என்ற பாடத்தை நாம் அவற்றிடம் இருந்து கற்றுக் கொள்ளலாம்.'' 
"ஒரு எறும்பு என்ன அப்படி பெரியதாகச் சேமித்துவிட முடியும்?''
"அப்படிச் சொல்லாதே!.... அவை கூட்டாக முயற்சி செய்பவை!.... ஒற்றுமைக்கு உதாரணமாக இருப்பவை!.... ஒழுங்காக வரிசையில் செல்பவை!..... உற்சாகம், சுறுசுறுப்பு, ஒற்றுமை, ஒழுங்கு இவைகளைத் தங்கள் வாழ்க்கை முறையாகக் கொண்டவை! ஒவ்வொரு சிறு எறும்பும் தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சேகரிக்கும். ஒரு சிரு துரும்பு அளவு உணவுப் பொருளையும் அலட்சியம் செய்யாது. இதன் மூலம் வாய்ப்புகள் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் நாம் அவற்றை இழந்து விடாமலும் அலட்சியம் செய்யாமலும் முழுமையாகப் பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே ஆகும்.
"ஒரு எறும்பின் வாழ்க்கையில் இத்தனை விஷயங்கள் இருக்கின்றனவா? ஆச்சரியமாக இருக்கிறது ஐயா!''
" எறும்புகளின் மூலம் நான் கற்றுக் கொண்ட பாடத்தை உனக்குச் சொல்ல விரும்புகிறேன்.... அவை என்ன தெரியுமா?... பின் வாங்காதே! முன்னோக்கிப் பார்! நம்பிக்கையோடு செயல் படு! கிடைக்கும் எல்லா வாய்ப்புகளையும் முயன்று பார்! 
ஊக்கத்தை ஒருக்காலும் இழந்து விடாதே!....இப்பொழுதைய உனது துன்பம் நிரந்தரம் அல்ல! ஏனெனில் இருளின் முடிவில் நிச்சயம் விடியல் உண்டு!' என்று கூறி முடித்தார்.
இதுவரை குழப்பத்தால் துன்பப் பட்டுக் கொண்டிருந்த சித்தார்த்தன் மனம் தெளிந்து ஒரு புதிய உற்சாகத்துடன் ஞானிக்கு நன்றி கூறி விட்டுத் தன் இல்லம் நோக்கிப் புறப்பட்டான்.... அவன் மனம் எறும்புக்கும் நன்றியைக் கூறியது! 
இதே கருத்தைத் தான் வள்ளுவரும் "ஊக்கம் உடைமை" அதிகாரத்தில், 
"உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.' -" என்கிறார்.
இதன் பொருள் - கையில் இருக்கும் செல்வங்கள் நிலைத்து நில்லாமல் அழிந்தாலும் ஊக்கம் உடைமையே ஒருவனுக்கு நிலையான செல்வம் ஆகும் என்பதே!
 

ADVERTISEMENT
ADVERTISEMENT