சிறுவர்மணி

 உலகில் ஏன் இத்தனை மொழிகள்?

25th Jan 2020 11:23 AM

ADVERTISEMENT

அங்கிள் ஆன்டெனா

 கேள்வி:
 உலகில் ஏன் இத்தனை மொழிகள்?

 பதில்: பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர், நமது முன்னோர்கள், உலகின் பல்வேறு பாகங்களிலும் தனித்தனி சிறு குழுக்களாக வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு தங்களைப் போலவே வேறு நாடுகளிலும் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்பது கூடத் தெரியாது.
 இப்படிச் சிறு குழுக்களாக வாழ்ந்து வந்தவர்கள் தங்களுடன் உள்ளவர்களிடம் தங்கள் எண்ணங்களைப் பரிமாறிக் கொள்வதற்குப் பலவிதமான ஒலிகளைத்தான் பயன்படுத்தி வந்தார்கள். இந்த ஒலிகள் நாளடைவில் சரியாக வளர்ச்சியடையாத மொழிகளாக மாறின. ஏன், சித்திர எழுத்துக்களைக்கூடப் பயன்படுத்தி ஒருவருக்கு ஒருவர் தங்கள் எண்ணங்களைப் பரிமாறிக் கொண்டனர். இப்படிப்பட்ட சிறிய குழுக்களுக்குள் சில ஒலிகள் மொழிகளாக நாளடைவில் மாறின.
 உலகில் மற்ற பகுதிகளில் வசித்தவர்களும் தங்களுக்கென்று பிரத்யேகமான மொழிகளையும் ஒலிக்குறிப்புகளையும் உருவாக்கிக் கொண்டனர்.
 இதனால் பல்வேறு பகுதிகளில் பல்வேறு விதமான மொழிகள் தோன்ற ஆரம்பித்தன. ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாத பல குழுக்களுக்கிடையே பல்வேறு விதமான மொழிகள் தோன்ற ஆரம்பித்தன. நாளடைவில் பரிணாம வளர்ச்சியில் இப்படிப் பல்வேறு மொழிகள் தோன்றி வளர்ச்சி பெற்றன.
 அக்காலத்தில் நமது தமிழர்கள் பேசிய தமிழை நாம் இப்போது கேட்க நேர்ந்தால் அதுகூட நமக்குப் புரியாததாகத்தான் இருக்கும். இப்படி உலகில் பல்வேறு மொழிகள் தோன்றுவதற்கு வளர்ச்சிதான் காரணம்.
 அடுத்த வாரக் கேள்வி
 புலி ஏன், எப்பொழுதும் பின்பக்கமாகவே தாக்குகிறது?
 பி.கு.: இந்தப் பகுதிக்கு வாசகமணிகளும் கேள்விகளை அனுப்பலாம். இதுவரை இந்தப் பகுதியில் வெளிவராத கேள்விகளாக இருந்தால், நிச்சயம்
 நல்ல பதில் கிடைக்கும்.
 
 -ரொசிட்டா

ADVERTISEMENT
ADVERTISEMENT