சிறுவர்மணி

கருவூலம் - சத்தீஸ்கர் மாநிலம்

25th Feb 2020 11:34 AM

ADVERTISEMENT

சத்தீஸ்கர் மாநிலம் பற்றிச் சுருக்கமாக அறிந்து கொள்வோமா?
சத்தீஸ்கர் மாநிலம் 2000 - ஆம் ஆண்டு, நவம்பர், 1 - ஆம் தேதி மத்தியப் பிரதேச மாநிலத்தின் பதினாறு தென்கிழக்கு மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு உருவாக்கப்பட்டது! ராய்ப்பூர் மாநகரமே இம்மாநிலத்தின் தலைநகரமாகும்!
உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், ஓடிசா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் ஆகியவை சத்தீஸ்கர் மாநிலத்தைச் சூழ்ந்துள்ள அண்டை மாநிலங்கள். நிர்வாக வசதிக்காக இம்மாநிலம் 27 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்தியும், சத்தீஸ்கரியும் இம்மாநில மொழிகளாகும்.
இந்தியாவின் 10 - ஆவது பெரிய மாநிலமான சத்தீஸ்கர் 1,35,191 ச.கி.மீ. பரப்பளவைக் கொண்டது. இந்தியாவின் பரப்பளவில் இது 4.11 % ஆகும். 
ஆறுகள்!
மாநிலத்தின் முக்கிய நதி மகாநதி. சத்தீஸ்கரின் கங்கை என அழைக்கப்படுகிறது. மகாநதியின் மொத்த நீளம் 851 கி.மீ. அதில் 286 கி.மீ. பாய்வது இம்மாநிலத்தில்தான். சிவநாத், அர்பா, ஜோங்க், ஹஸ்தேவ் போன்றவை மகாநதியின் துணையாறுகள் ஆகும். மகாநதியும் அதன் கிளை நதிகளும் மாநிலத்தின் நீராதாரத்தில் 53.48 % பங்கு வகிக்கின்றன. 
மகாநதியைத் தவிர கோதாவரி, கங்கை, நர்மதை ஆகிய நதிகளும் இம்மாநிலத்தின் முக்கிய நீர் ஆதாரங்களாகும். இவற்றைத் தவிர, இந்திராவதி, ஸோன், ஆகிய நதிகளும் சத்தீஸ்கர் மாநிலத்தை வளமாக்குகின்றன. 
காடுகள்!
சத்தீஸ்கர் மாநிலத்தில் 59,772 ச.கி.மீ. நிலப்பகுதி வனமாக உள்ளது! அதாவது 44.21 % நிலம் காடுகளைக் கொண்டது! மூன்று தேசியப் பூங்காக்களும், 11 வனவிலங்கு சரணாலயங்களும் இம்மாநிலத்தில் உள்ளன. 
கனிம வளம்!
நாட்டின் சிமென்ட் உற்பத்தியில் 20 சதம் சத்தீஸ்கரில்தான் நடைபெறுகிறது. நிலக்கரி உற்பத்தியும் அதிகம். இரும்புத் தாது உற்பத்தியில் நாட்டில் மூன்றாவது இடத்தையும், வெள்ளீய உற்பத்தியில் முதலிடத்தையும் வகிக்கும் மாநிலம். சுண்ணாம்பு, டோலமைட், பாக்ûஸட் போன்றைவையும் இங்கு அதிகமாகக் கிடைக்கின்றன. 
2017 -2018 -இல் 1425 லட்சம் டன் நிலக்கரியும், 348 லட்சம் டன் இரும்புத் தாதுவும், 352 லட்சம் டன் சுண்ணாம்புக்கல்லும் உற்பத்தி செய்யப்பட்டிருக்கின்றன. குவார்ட்ஸ், பளிங்கு, வைர உற்பத்தியும் மாநிலப் பொருளாதாரத்திற்கு வளம் சேர்க்கின்றன. 

வேளாண்மைத் தொழில்!
வேளாண்மைத் தொழில் மாநிலத்தின் 4828 ஹெக்டேர் பரப்பளவில் நடைபெறுகிறது. மாநிலத்தின் 80 சதம் மக்கள் வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த சிறு தொழில்களையே நம்பியுள்ளனர்.
நெல், நவதானியங்கள், எண்ணெய் வித்துகள் போன்றவை மாநிலத்தின் முக்கிய வேளாண்மைப் பயிர்கள் ஆகும். இந்தியாவின் "அரிசிக் கிண்ணம்!'' என்று அழைக்கப்படும் மாநிலம் சத்தீஸ்கர்!
பண்டைய கால மற்றும் இடைக்கால வரலாறு!
பண்டைய காலங்களில் இந்தப் பகுதி "தட்சிண கோசலம்' என அழைக்கப்பட்டது! மேலும் ராமாயணம், மகாபாரதம் போன்றவற்றில் இப்பகுதியைப் பற்றி குறிப்புகள் காணப்படுகின்றன. 
ஆறாம் நூற்றாண்டு முதல் பனிரெண்டாம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் இந்நிலப்பகுதியை ஷரப்புரியர், நாகவன்சி, போன்ற ஆட்சியாளர்கள் ஆட்சி செய்தனர். 
11 - ஆம் நூற்றாண்டில் சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதியின் மீது சோழப் பேரரசின் முதலாம் ராஜேந்திர சோழன் மற்றும் முதலாம் குலோத்துங்க சோழன் ஆகியோர் படையெடுத்தனர். 
ஆங்கிலேயர் மற்றும் விடுதலைக்குப் பிந்தைய காலம்!

ADVERTISEMENT

சத்தீஸ்கர் மராத்தா ஆட்சியாளர்கள் கீழ் (நாக்பூர் பான்லே) கி.பி. 1741 முதல் 1845 வரை இருந்தது. 
பின்னர் 1845 முதல் 1947 வரை பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் ஆளுகையின் கீழ் "மத்திய மாகாணத்தின்' ஒரு பகுதியாக இருந்தது. இக்காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சிக்குக் கட்டுப்பட்ட சில சுதேச அரசுகளும் இங்கு இருந்தன. 
இந்நிலப்பகுதி மாநில மறு சீரமைப்புச் சட்டத்தின்படி 1956 முதல் 44 ஆண்டுகளுக்கு நாக்பூரைத் தலைநகரமாகக் கொண்ட பழைய மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 
20 - ஆம் நூற்றாண்டு தொடக்கத்திலிருந்தே சத்தீஸ்கர் தனி மாநிலக் கோரிக்கை இருந்து வந்தது. 1970 - ஆம் ஆண்டில் இக்கோரிக்கை எழுச்சி பெற்றது. 1990 - இல் இக்கோரிக்கை வலுவடைந்த நிலையில் 2000 - ஆம் ஆண்டு நவம்பர் 1 - இல் தனி மாநிலமானது.
காண வேண்டிய முக்கிய இடங்கள்!
அச்சனக்மர் வனவிலங்கு சரணாலயம்!

பிலாஸ்பூர் மாவட்டத்தில் இந்த சரணாலயம் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்தில் சிறுத்தைப் புலிகள், வங்கப் புலிகள் மற்றும் காட்டெருமைகள் உட்பட பல விலங்கினங்கள் காணப்படுகின்றன. 558 ச.கி.மீ. பரப்பளவு கொண்ட இச்சரணாலயத்தில் பல்வேறு மரவகைகளும், காட்டுத் தாவரங்களும் உள்ளன. 
சித்திரகூட அருவி!
பஸ்தர் மாவட்டத்தில் உள்ள மேற்கு ஜெகதல்பூரில் இந்த அருவி உள்ளது. இங்கு இந்திராவதி ஆறு 29 மீ. உயரத்திலிருந்து அருவியாக விழுகிறது. இந்தியாவின் அகலமான அருவியும் இதுவே! அதனால் "இந்தியாவின் நயாகரா' என்றும் அழைக்கப்படுகிறது.
இந்திராவதி தேசியப் பூங்கா!
பிஜப்பூர் மாவட்டத்தில் இப்பூங்கா அமைந்துள்ளது. இந்தப் பூங்கா 2800 ச.கி.மீ. பரப்பளவு கொண்டது. இந்த மாநிலத்தில் இந்த தேசியப் பூங்காவில் மட்டுமே புலிகள் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

 

தீரத்கர் அருவி!
பஸ்தர் மாவட்டத்தில் "கங்கேர் காட்டி' எனும் இடத்தில் உள்ள அருவி இது. 91 மீட்டர் உயரத்திலிருந்து கங்கேர் ஆறு அருவியாகக் கீழே இறங்குகிறது. இங்குதான் குதும்சர் குகைகள் மற்றும் கைலாஷ் குடா போன்றவை உள்ளன. பறவைகளும் எழிலான வனப்பகுதியும் சூழ்ந்த ரம்மியமான இடம் இது!
கங்கர் காதி தேசியப் பூங்கா
பஸ்தர் மாவட்டத்தில் ஜெகதல்பூர் அருகில் இந்தப் பூங்கா அமைந்துள்ளது. 34 கி.மீ. நீளமுள்ள அழகிய கங்கர் பள்ளத்தாக்கு செங்குத்தான சரிவுகள், பீடபூமிகள் பள்ளத்தாக்குகள் மற்றும் நீரோடைகள் என பலவகையான நில அமைப்புகளைக் கொண்டுள்ளது. இதன் சராசரி அகலம் 6 கி.மீ. ஆகும்.
200 ச.கி.மீ. பரப்பளவு கொண்ட இந்தத் தேசியப் பூங்காவினூடே கங்கர் நதி செல்கிறது. பல்வேறு வகையான பாலுட்டிகளும், நூற்றுக்கும் மேற்பட்ட பறவை வகைகளும், 90 க்கும் மேற்பட்ட வண்ணத்துப்பூச்சி வகைகளும், பல்வேறு பூச்சி வகைகளும், புலி, சிறுத்தை, மான் போன்ற பல்வேறு விதமான காட்டு விலங்குகளும் இங்குள்ளன. இப்பூங்காவில் 16 நீர்வீழ்ச்சிகள் உள்ளன. நவம்பர் முதல் ஜூன் வரையிலான மாதங்கள் இங்கு சுற்றுலா செல்வதற்கு ஏற்ற காலமாகும்.
தண்டகாரண்யம்!
இராமாயண இதிகாசத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தண்டகாரண்யம் வனப்பகுதி இதுதான்! இங்கு ராமர் 14 ஆண்டு வனவாசத்தின்போது சீதை மற்றும் லட்சுமணனுடன் சில காலம் கழித்தார். இங்குதான் மாரீசன் தங்க மானாக வந்த நிகழ்வும், ராவணன் சீதையை ஏமாற்றிக் கடத்திச் சென்ற நிகழ்வும் நடந்ததாக ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுமார் 90,000 ச.கி.மீ. பரப்பளவு கொண்ட அடர்ந்த காட்டுப்பகுதி இது. மேற்கே அபுஜார் மலை, கிழக்கே கிழக்குத் தொடர்ச்சி மலை மற்றும் சத்தீஸ்கர், மகாராஷ்டிரம், ஒடிசா, ஆந்திரா மாநிலங்களின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள காட்டுப் பகுதிகளை உள்ளடக்கியது. சத்தீஸ்கர் தனி மாநிலமாக உருவானபோது ஏழு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. இவ்வனப்பகுதியில் வாழும் நான்கில் மூன்று பகுதியினர் மலைவாழ் பழங்குடி மக்கள் ஆவர். ராமாயணத்தின் ஆரண்ய காண்டத்தில் இப்பகுதி பற்றி பல தகவல்கள் உள்னன. 
கோட்டும்சர் குகை!

கோட்டும்சர் குகை ஜகதல்பூருக்கு அருகில் கங்கர் பள்ளத்தாக்கு தேசிய பூங்காவில் அமைந்துள்ளது. இது கோலாப்பூர் ஆற்றின் துணை நதியான காங்கர் ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளது. இது சுண்ணாம்பால் உருவான சுண்ணாம்புக் குகை ஆகும்! கடல் மட்டத்திலிருந்து 560 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. ஒரு மலைச் சரிவில் உள்ள செங்குத்துப் பிரிவே குகையின் முக்கிய நுழைவாயில் ஆகும். குகையின் பிரதான சுரங்கப்பாதை கிட்டத்தட்ட 200 மீட்டர் நீளமானது. அதில் சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக குகையின் இறுதிவரை கான்கிரீட் பாதை அமைக்கப்பட்டுள்ளது. பல பக்கவாட்டு மற்றும் கீழ் நோக்கிச் செல்லும் பாதைகளும் உள்ளன. இந்தக் குகை மழைக் காலங்களில் அடிக்கடி வெள்ளத்தால் சூழப்படுகிறது. 
இக்குகையில் ஆண்டு முழுவதும் நீர் தேங்கியிருக்கும் பல குளங்கள் உள்ளன. இந்தியாவின் முதல் மற்றும் உலகின் இரண்டாவது மிக நீண்ட இயற்கைக் குகை ஆகும்! ஜகதல்பூரில் அவசியம் பார்க்க வேண்டிய இடங்களில் இக்குகையும் ஒன்று!
தொடரும்....
தொகுப்பு : கே.பார்வதி, திருநெல்வேலி டவுன்.

ADVERTISEMENT
ADVERTISEMENT