சிறுவர்மணி

மரங்களின் வரங்கள்!

15th Feb 2020 03:47 PM

ADVERTISEMENT

நோயின்றி வாழ உதவும் - தான்றி மரம் 

குழந்தைகளே நலமா?
நான் தான் தான்றி மரம் பேசறேன். எனது தாவரவியல் பெயர் டெர்மினாலியா பெல்லாரிக்கா அதாவது டெர்மினேலியா என்பதாகும். நான் கம்ப்பிரேடசியே குடும்பத்தைச் சேர்ந்தவன். நான் உறுதியான வேர்களுடன் பிராமாண்டமான தோற்றத்துடன் கூடிய  பெரிய மரமாவேன். 120 அடி கூட வளருவேன். என் தண்டின் அடிப்பகுதியின் சுற்றளவு 10 அடி வரை கூட இருக்கும்.  நான் தமிழ்நாட்டில் மலைப்பகுதிகளில் காணப்படுவேன்.  என் பூக்கள் மஞ்சள் நிறத்தில் மலரும். பின் உருண்டை வடிவிலான காய்கள் தோன்றி,  பின் சாம்பல் நிறமாகும்.  என் பழங்கள் கசப்பும், துவர்ப்பும் உடையவை. 

வடமொழியில் என்னை விபீதகி என்று அழைப்பாங்க.  நாள்தோறும் தான்றி உண்டால் நோய் தோன்றாது  என்பது இதன் பொருள். 

என் இலைகள் பெரியதாக 15 – 25 செ..மீ. வரை நீளமாக கிளைகளின் நுனிகளில் கொத்தாக இருக்கும்.  என் பழங்கள் துவர்ப்பு சுவை நிரம்பியவை. இது மூளை மற்றும்  உடலை பலப்படுத்துவதுடன், வயிற்றுக் கோளாறுகளுக்கும்,  கண் எரிச்சலைக் குறைக்கவும், காய்ச்சல், அஜீரணத்திற்கும் மிகவும் ஏற்றது.  என் பூக்கள் சிறியதாக நெருடலான மணத்துடன், சிறிய காம்புகளில் வெளிறிய பச்சை நிறத்துடன் இருக்கும். என் பழங்கள் 4 செ.மீ. வரை நீளமாக, நீள்வட்ட வடிவத்தில் பழுப்பு நிறத்தில் காணப்படும்.  என்னை பொதுவாக மேற்கு இந்தியாவின் வறண்ட பகுதிகளைத் தவிர அனைத்து இடங்களிலும் காணலாம். 

ADVERTISEMENT

என் மரக்கட்டைகள் ஈரத்தைத் தாங்கக் கூடிய தன்மை கொண்டவை. படகுகள், விவசாயப் பெருமக்களுக்கு தேவையான உபகரணங்கள் செய்ய பெரிதும் பயன்படுறேன்.  என் மரத்தின் பட்டை துணிகள் மற்றும் தோலுக்கு சாயமேற்றப் பயன்படுகிறது.  தான்றிக்காயை கர்ஷம், அக்ஷம் என்று அழைப்பாங்க.  ஏன்னா இது மகா விருக்ஷம் ஆகும். 

 ஆனால், குழந்தைகளே, தான்றிக்காயின் உள்ளிருக்கும் கொட்டையை நீக்கி காயின் மேல்தோலை மட்டுமே மருத்துவத்திற்கு பயன்படுத்த வேண்டும். இதை ஆங்கிலத்தில் "பெட்டா நட்ஸ்' எனறு சொல்வாங்க.  இதில் விட்டமின் ஏ, பி1, பி2, சி ஆகிய சத்துகளும், "கல்லிக்' அமிலமும் உள்ளது. கல்லிக் அமிலம் கணையத்தில் உள்ள செல்களைத் தூண்டி இன்சுலினைச் சுரக்கச் செய்து இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது.  

மேலும், தான்றிக்காயிலுள்ள எலாஜிக் அமிலம், செபுலினிக் அமிலம், கல்லிக் அமிலம் ஆகியவை செல்களின் டி.என்.ஏ-வில் மாற்றங்கள் ஏற்படுவதைத் தடுத்து, புற்றுநோய் வராமல் காக்கின்றன. 

இரத்தமூலம் குணமாக தான்றிக்காய் கொட்டையை நீக்கி, தோலை கருகாமல், இலேசாக வறுத்து, தூள் செய்து, மோருடன் கலந்து குடித்து வந்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும். இதையே சிறிதளவு வெல்லம் கலந்து காலை, மாலை குடித்து வந்தால் மலச்சிக்கல், குடல் பலமின்மை, காய்ச்சல், பித்தம், தலைவலி, சீதபேதி ஆகியவை குணமாகும்.  இது உறுதி.

பல் வலியா, ஈறு வலியா சோர்வடையாதீங்க, தான்றிக்காய் தூளால் பல் துலக்குங்க அல்லது நீரிலிட்டு சர்க்கரை கலந்து குடித்து வந்தால் பல், ஈறு வலி இருந்த இடம் தெரியாது.

அந்தக் காலத்தில் கிராமப் புறங்களில் புண், சிரங்குகள் குணமாக என் காயை நீரிலிட்டு இழைத்து, பசையாக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் பூசுவாங்க, புண்களும், சிரங்களும் பறந்து ஓடிடும். அக்கியில் பூசினால் எரிச்சல் தணிந்து குணமாகும். கண் பார்வை தெளிவடைய தான்றிக்காய் துளை நீருடன் கலந்து குடித்தால் நல்லது.  தான்றிக்காய் எண்ணெய்  சோப்பு தயாரிக்கவும், கூந்தல் வளரவும் இப்போ பயன்படுத்தறாங்க.

அம்மை நோய் குணமாக வேண்டுமா, தான்றிக்காய் தோலை சேகரித்து சூரணம்  செய்து தேனில் கலந்து சாப்பிடுங்க. என் பழத்தின் சாறு சிறந்த கிருமிநாசினி.  தோல் பதனிடவும் பயன்படுத்தலாம்.   என் இலைகள் கால்நடைநடைகளுக்கு விருந்து. குறிப்பா, கறவை மாடுகளின் பால் பெருக்கத்துக்கு இது சிறந்த தீவனம்.

புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான் மலை, தான்றீஸ்வரம் விலக்கு, அருள்மிகு தான்றீஸ்வரர்,  சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, பஞ்சபூதேஸ்வரம் அருள்மிகு ஸ்ரீமஹா பஞ்சமுக ப்ரத்யங்கிராதேவி திருக்கோவில்களில்  தலமரமாக இருக்கேன்.

நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம். 
(வளருவேன்)

- பா.இராதாகிருஷ்ணன்

ADVERTISEMENT
ADVERTISEMENT