சிறுவர்மணி

முத்துக்கதை!: பரிசுக்கு நன்றி!

1st Feb 2020 09:15 PM | - ரமணி

ADVERTISEMENT

பள்ளி ஆண்டு விழா கொண்டாட்டத்தை ஒட்டி லட்சுமியின் பள்ளியில் பல போட்டிகள் நடைபெற இருந்தது. அதில் லட்சுமி பாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்திருந்தாள். தேசபக்திப் பாடல்கள் பாட வேண்டும் என்று விதி இருந்தது.

லட்சுமியின் அப்பா ரவி அலவலக விஷயமாய் வெளியூர் சென்றிருந்தார். எனவே அவரால் லட்சுமிக்கு உதவி எதுவும் செய்ய முடியவில்லை. அம்மா பாட்டு சொல்லித்தர யாராவது கிடைப்பார்களா என்று தொலைபேசியில் விசாரித்துக் கொண்டிருந்தார்.

போட்டிக்கு இன்னும் பத்து நாள் அவகாசம் இருந்தது.

அன்று பள்ளி விடுமுறை. வேலைக்காரி சாந்திக்கு உடம்பு சரியில்லை. அவளுடைய பெண் ராணியைப் பாத்திரம் தேய்க்க அனுப்பியிருந்தாள். ராணியும் லட்சுமியின் பள்ளியில்தான் படிக்கிறாள். ஒன்பதாம் வகுப்பு.

ADVERTISEMENT

லட்சுமி தன் அம்மாவிடம் பானுவிடம், என்ன பாட்டு பாடலாம் என்று ஆலோசனை செய்து கொண்டிருந்தாள். பாரதியாரின் பாடல்கள் சிலவற்றை அம்மா கொண்டு வந்தாள். ஆனால் அம்மாவுக்கு பாடல் பயிற்சியெல்லாம் கிடையாது. யு ட்யூபில், பாரதியின் சில பாடல்களை அம்மா போட்டுக் காண்பித்தார். லட்சுமிக்கு கொஞ்சம் தாகமாக இருந்தது. தண்ணீர் குடிக்கலாம் என்று அடுப்படிக்குச் சென்றாள். அங்கே பாத்திரத்தைத் தேய்த்துக் கொண்டிருந்த ராணி பாரதியின் பாட்டு ஒன்றை முணுமுணுத்துக் கொண்டிருந்தாள். அவளுக்குக் குரல் நன்றாக இருந்தது.

""அம்மா இங்கே வாயேன்!.... ராணி ரொம்ப நல்லாப் பாடுறாம்மா!'' என்று அம்மாவைக் கூப்பிட்டாள் லட்சுமி.

அங்கு வந்த அம்மா, ராணியை உரக்கப் பாடச் சொன்னாள். ராணியும் பாடினாள். அற்புதமாக இருந்தது. ராணிக்கு நல்ல குரல்! ""தாயின் மணிக்கொடி பாரீர்'' என்ற பாட்டு!

""பட்டுத் துகிலெனலாமோ? - அதில் பாய்ந்து சுழற்றும் பெரும் புயற்காற்று...'' என்ற வரி அப்படியே நம் தேசியக் கொடி பட படவெனச் சுழன்று பறக்கும் காட்சி கண் முன்னே நின்றது! அப்படி ஒரு தேச உணர்வு!

அம்மா ராணியிடமே தினம் ஒரு மணி நேரம் அந்தப் பாட்டைக் கற்றுக் கொள்ளச் சொன்னாள். ஆண்டுவிழா நிகழ்ச்சிக்கு லட்சுமியின் பெற்றோர்களும் வந்திருந்தார்கள். விழாவில் லட்சுமி அந்தப் பாட்டைப் பாடினாள். ஒரே கைதட்டல்! நிகழ்ச்சியின் முடிவில் லட்சுமிக்கு முதல் பரிசை வழங்கினார்கள். அதை எடுத்துக்கொண்டு லட்சுமி அம்மாவை நோக்கி விரைந்தாள்! அம்மா லட்சுமியை ராணியிடம் அழைச்சுக்கிட்டுப் போனாங்க... அவளிடம் கோப்பையைக் கொடுத்து நன்றியையும், வணக்கத்தையும் சொல்லச் சொன்னாங்க''

""நானே அதைத்தான் செய்யணும்னு நினைச்சேன்மா!'' என்றாள் லட்சுமி.

நல்ல குரல் வளம் இருக்கிற ராணிக்கு முறையாக சங்கீதம் கற்றுத்தர நினைக்கிறாள் அம்மா. இப்போது லட்சுமியும், ராணியும் முறையாக கர்நாடக சங்கீதம் பயில்வதற்காக ஒரு பாட்டு டீச்சர் கிட்டே போகிறார்கள். லட்சுமியோடு, ராணிக்கும் அப்பா ஃபீஸ் கட்டுகிறார்.

ராணி பின்னாளில் நல்ல பாடகியாக வருவாள் என்பதில் லட்சுமிக்கோ, அம்மாவுக்கோ சந்தேமே இல்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT