பாரி ஆண்ட பறம்பு மலை
பைந்தமிழ்க் கபிலர் நடந்த மலை
ஊரின் நடுவே உயர்ந்த மலை
உழவும் தொழிலும் சிறந்த மலை!
தேனும் தினையும் விளைந்த மலை
தேவை யாவும் தீர்த்த மலை
வானம் தீண்ட வளர்ந்த மலை
வளங்கள் எல்லாம் சுமந்த மலை!
முல்லைக் கொடிகள் படர்ந்த மலை
மூவேந்தர்கள் வளைத்த மலை
இல்லை என்று சொல்லாமல்
இரவலர் தம்மைக் காத்த மலை!
ADVERTISEMENT
அங்கவை சங்கவை பிறந்த மலை
அவ்வைப் பாட்டி இருந்த மலை
திங்கள் ஒளியில் மிதந்த மலை
திசைகள் போற்றும் பறம்பு மலை!
முல்லைக் கொடிக்குத் தேரீந்த
மன்னன் பாரி அரசாண்ட
எல்லை இல்லாப் பறம்புக்கு
இன்றே நாமும் போவோமா?