காட்டு விலங்கும் நாட்டு விலங்கும்!

ஏழாம் வகுப்பில் வந்து புதிதாக சேர்ந்திருந்த ராமசாமிக்கு அந்த வகுப்பு மாணவர்களுடன் ஒத்துப்போக முடியவில்லை.
காட்டு விலங்கும் நாட்டு விலங்கும்!

ஏழாம் வகுப்பில் வந்து புதிதாக சேர்ந்திருந்த ராமசாமிக்கு அந்த வகுப்பு மாணவர்களுடன் ஒத்துப்போக முடியவில்லை. வகுப்பு ஆசிரியரிடம் தினமும் "அவன் சரியில்லை, இவன் சரியில்லை' என்று ஏதாவது குறை சொல்லிக் கொண்டே இருந்தான்.
 "சார் என்னை இந்த பெஞ்சிலிருந்து வேறு பெஞ்சுக்கு மாத்திடுங்க சார்?''
 "ஏன்... என்ன ஆச்சு?''
 "பக்கத்தில் இருக்கும் கார்த்திக் என்னை அடிக்கடி கிள்ளிகிட்டே இருக்கான். கேலி செய்யறான். அவன் பக்கத்தில் என்னால உட்கார முடியாது சார்''
 "சரி' என்று கூறிய ஆசிரியர், அவனை முதல் பெஞ்சிலிருந்து மூன்றாவது பெஞ்சுக்கு மாத்தினார்.
 ஒருவாரத்திற்குப் பிறகு... ஒருநாள்.
 ""சார் பக்கத்துல உட்கார்ந்திருக்கும் பாஸ்கரும் சங்கரும் என்னைப் படிக்கவிடாம தொல்லை பண்ணிகிட்டே இருக்காங்க சார். எப்பப் பார்த்தாலும் பேசிகிட்டும் சிரிச்சிகிட்டும் இருக்காங்க... இவங்களோட என்னால உட்கார முடியாது சார். என்னை வேறு பெஞ்சுக்கு மாத்திடுங்க....''
 ராமசாமியை ஏற இறங்கப் பார்த்துவிட்டு உடனே, கடைசி பெஞ்சில் போய் அவனை உட்காரச்
 சொன்னார்.
 மூன்று நாள்களுக்குப் பிறகு, வகுப்பு ஆரம்பிக்கும்போதே எழுந்து நின்றான் ராமசாமி.
 "ஏன் எழுந்து நிற்கிறே... இன்னிக்கு எங்க மாத்தணும் உன்னை? இதே வேலையாப் போச்சு உனக்கு...''
 "சார் இந்தப் பீட்டர் என்னைப் பத்தி இல்லாததையும் பொல்லாததையும் அவன் ஃபிரண்ட்ஸ்கிட்ட சொல்லி கோள் மூட்டி விட்றான் சார். இந்த சுரேஷ் ரொம்ப பொய் சொல்றான் சார்... இவங்களோட என்னால உட்கார முடியாது சார். வேறு எங்காவது என்னை அனுப்பிடுங்க...''
 "உன்னை வேறு எங்காவது இல்லை... கிளாசைவிட்டே, ஏன் இந்தப் பள்ளிக்கூடத்தை விட்டேதான் அனுப்பணும். ஆமாம்...உனக்குக் காட்டு விலங்குகளைப் பத்தித் தெரியுமா?''
 "தெரியும் சார்''
 "அந்த விலங்குகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு குணம் இருக்கும். அதுவாவது தெரியுமா?''
 "படிச்சிருக்கேன் சார்''
 "சொல்லு பாக்கலாம்...''
 "நரின்னா தந்திரம், யானைன்னா நன்றியை மறந்த குணம், குரங்குகள் அடுத்தவதொந்தரவு தரும், புலி, சிங்கமெல்லாம் தன் பசிக்காக பிற விலங்குகளைக் கொன்று சாப்பிடும், பாம்பிடம் விஷமிருக்கும்...''
 "போதும்..நிறுத்து... இப்படிக் காட்டில் வாழும் ஒவ்வொரு விலங்குக்கும் ஒவ்வொரு குணம் இருந்தாலும், அவை அனைத்தும் அந்தக் காட்டிலேயேதான் ஒற்றுமையாக வாழ்கின்றன. காட்டைவிட்டு ஓட நினைக்கவில்லை இல்லையா? அப்படித்தான் நாட்டில் வாழும் மனிதர்களும் ஒவ்வொரு குணங்களைக் கொண்டவர்கள். அவர்களை விட்டு ஒதுங்கி, விலகி நிற்காமல், யார் யார் எந்ததெந்த குணங்களோடு இருக்கிறார்களோ, அவர்களை அந்தந்த குணங்களோடு ஏற்றுக்கொள்ளப் பழகினால், நீ எந்த பெஞ்சும் மாறவேண்டியதில்லை. இந்தப் பள்ளி மட்டுமல்ல... நீ பெரியவனாக வளர்ந்து எந்த அலுவலகத்துக்குப் பணிக்குப் போனாலும் அங்கும் இப்படித்தான் மனிதர்கள் பல குணங்களோடுதான் இருப்பார்கள். அவரவர் குணங்களோடு அவர்களை ஏற்றுக்கொண்டு நீ அன்புடன் வாழப்பழகு''.
 ராமசாமி தலைகுனிந்தபடி, தன் புத்தகப் பையைத் தூக்கிக்கொண்டு, எழுந்துபோய் முதல் பெஞ்சில் இருந்த கார்த்திக்கின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டான்.
 -இடைமருதூர் கி.மஞ்சுளா
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com