வியாழக்கிழமை 19 செப்டம்பர் 2019

கைமேல் பலன்..!

DIN | Published: 08th September 2019 08:10 AM

அரசன் ஒருவன் சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவனாக இருந்தான். எதற்கெடுத்தாலும் ஜோசியரைக் கூப்பிட்டு ஆலோசனைகளைக் கேட்பார்! அரண்மணை ஜோதிடர் இந்த நம்பிக்கை மேல் குளிர்க்காய்ந்து கொண்டிருந்தார்! தான் எதைச் சொன்னாலும் அரசர் நம்பி விடுவார் என்பதில் அவருக்கு கர்வம் மேலிட்டது! ஒரு நாள் அரசர், அரண்மனையில் அமர்ந்திருந்தார். அவரைப் பார்க்கச் சென்றார் ஜோதிடர்!
 சேவகன் அரசரிடம், "அரசே, தங்களைக் காண ஜோதிடர் வந்திருக்கிறார்!'' எனக் கூறினான்.
 "அப்படியா? உடனே வரச்சொல்!'' என்றார் அரசர்.
 ஜோதிடரும் வந்தார். வந்தவர் அரசரை வணங்கி, "அரசே, அதிகாலை எழுந்தவுடன் இரண்டு காக்கைகளை ஒன்றாகப் பார்த்தால் அந்த நாள் சிறப்பாக இருக்கும்'' என்றார். மன்னன் சேவகனை அழைத்து, ""காலையில் எங்கேயாவது இரண்டு காக்கைகள் தென்பட்டால் சொல்!'' என்று கட்டளையிட்டான். அன்றிலிருந்து சேவகன் தினமும் பொழுது விடியும் முன்பே தெருவிற்கு சென்றுவிடுவான்.
 ஒரு நாள் அரண்மனைக்குப் பக்கத்துத் தெருவில் இரண்டு காக்கைகள் ஒன்றாக அமர்ந்திருப்பதைக் கண்டான். அடடா! நல்ல சகுனம், இன்று மன்னர் நமக்கு நிச்சயம் பதவி உயர்வு கொடுப்பார் என்று மகிழ்ச்சியுடன் மன்னரிடம் சென்று விபரம் சொன்னான். இதைக் கேட்ட மன்னனுக்கு மிக உற்சாகமாகி விட்டது! சேவகனுடன் அந்த இடத்திற்கு சென்றான். அதற்குள் ஒரு காக்கை போய்விட்டது! மன்னனுக்கு மூக்கின் மேல் கோபம் வந்து விட்டது. தளபதியை அழைத்து, "இந்தப் பொறுப்பற்ற சேவகனுக்குப் பத்து கசையடி கொடு!'' என்று உத்தரவிட்டான்.
 சேவகன் சிரிக்க ஆரம்பித்தான்!
 மன்னனுக்கு கோபம் அதிகமானது!
 " ஏன் சிரிக்கிறாய்?..... சரியான காரணத்தைச் சொல்லாவிட்டால் இன்னமும் பத்து கசையடி விழும்!'' என்று உறுமினான். சேவகன் சொன்னான்.
 "மகா மன்னரே! இன்று நான் மட்டும்தான் அதிகாலையில் இரட்டைக் காக்கைகளைப் பார்த்தேன். கை மேல் பலன் கிடைத்து விட்டது!......தாங்கள் அளித்த பத்து கசையடிகள்!.... '' என்றான்.
 மன்னருக்கு அப்போதுதான் சகுனம் பார்ப்பது தவறு என்று உரைத்தது.
 - ஜோ ஜெயக்குமார்

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

அங்கிள் ஆன்டெனா
காட்டு விலங்கும் நாட்டு விலங்கும்!

 செண்பக மரம்!
 

பொருத்துக...
விடுகதைகள்