வெள்ளிக்கிழமை 20 செப்டம்பர் 2019

 கயுக நீலகண்டன்!  

By ஜெயந்தி நாகராஜன்| DIN | Published: 08th September 2019 08:05 AM

 அரங்கம்
 காட்சி 1.

 "இடம் வீடு,
 மாந்தர் : சந்திரசேகர், மனைவி பர்வதம்
 
 பர்வதம்: என்னங்க! வழக்கத்தைவிட இன்னிக்கு சீக்கிரமா பள்ளிக்குப் புறப்படத்தயாராயீட்டீங்க!
 சந்திரசேகர்: ஆமாம்! பர்வதம்! பள்ளிக்கூடத்திலே விழா ஏற்பாடு தொடர்பா நிறைய வேலை இருக்கு. அதான்.
 (அப்போதுஅலை பேசியின் ஒலி கேட்கிறது)
 சந்திரசேகர்: நம்ப மகன் சுந்தரோட அலைபேசி தான். அவன் எங்கே!
 பர்வதம்: கடைக்கு அனுப்பி இருக்கேங்க!
 சந்திரசேகர்: சரி. (அலைபேசியை எடுத்துப் பேசுதல் பின்அதனைச் சற்று நேரம் பார்த்தல் பார்த்தவரின் முகம் மாறிக் கொண்டே வருதல்)
 பர்வதம்: என்னங்க! ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க! ஏதாவது பிரச்சனையா?
 சந்திரசேகர்: அதெல்லாம் ஒண்ணும் இல்லே! சரி! சுந்தரைப் பத்திரமா சைக்கிள் ஓட்டிப் பள்ளிக்கு வரச்சொல்லு. சரியான நேரத்திற்கு வரச் சொல்லு. அப்புறமா தலைமை ஆசிரியர் சந்திரசேகரோட மகனே பள்ளிக்கு லேட்டா வரான் அப்படீங்ற பேர் வந்துடும். என்ன!
 (செல்லுதல்)
 
 காட்சி 2 ,
 பள்ளிக் கூடம்,
 மாந்தர் : தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள்
 
 சந்திரசேகர்: (தனக்குள்)என்ன இது ! தன் மகனா இப்படி! எத்தனை நாளா இப்படி மெúஸஜ் வர்ரதுன்னே தெரியலியே! ஆபாசப் படங்கள் வேறே! அலைபேசியைப் படிப்பு மேம்பட வழி செய்யும்னு வாங்கிக் கொடுத்தா இப்படி ஒரு சீரழிவிற்கு வழி செய்யுதே!
 இது மாதிரி இன்னும் எத்தனை என் பள்ளி மாணவர்களின்அலைபேசிகளுக்கும் வந்திருக்குமோ? நான் ஒரு நல்ல தகப்பனாவும் இல்லே! நல்ல தலைமை ஆசிரியராகவும் இல்லையே? (தலையைப் பிடித்துக் கொள்ளல்)
 
 காட்சி 3,
 பள்ளியில் ஆசிரியர்கள் அறை,
 மாந்தர் : ஆசிரியர்கள்
 
 ஆசிரியர்1: முத்து சார்! இன்றைக்கு நம் தலைமை ஆசிரியர் முகமே சரியில்லே!
 ஆசிரியர்2: ஆமாம்! சங்கரன்! நானும் கவனிச்சேன்! ஒருவேளை உடம்பு சரியில்லையோ என்னவோ!
 ஆசிரியர்3: இல்லே! விழா தொடர்பா ஓவர் வேலையாலே களைப்பா இருக்காரோ என்னவோ!
 ஆசிரியர்2: அதுக்குத்தான் நம்ம தமிழ் ஆசிரியர் தணிகை வேல் இருக்காரே மதிவாணன். அட! தணிகை வேலே வர்ராரே! அவர்கிட்டேயே கேட்போம்.
 தணிகைவேல்:என்ன கேட்கப் போறீங்க! விழா ஏற்பாடுகள் பற்றியா? அது தொடர்பா இப்போ நான் தலைமை ஆசிரியரைப் பார்க்கப் போறேன்
 ஆசிரியர்2: நம்ம தலைமை ஆசிரியர் இன்றைக்குக் காலையில் இருந்து ஒருமாதிரியா இருக்கார். வழக்கமா அவர் கிட்டே தென்படும் உற்சாகம் மிஸ்ஸிங்;
 தணிகைவேல்: அப்படியா! சரி! நான் போய் பார்க்கிறேன்.
 (செல்லுதல்)
 
 காட்சி 4,
 இடம் தலைமை ஆசிரியர் அறை,
 மாந்தர்: சந்திரசேகர், தமிழ் ஆசிரியர் தணிகைவேல்
 
 தணிகைவேல் : ஐய்யா!
 தலைமை ஆசிரியர் : (கவனிக்காமல் இருத்தல்)
 தணிகைவேல்: ஐயா!
 தலைமை ஆசிரியர் : (திடுக்கிட்டவராய்...) வாங்க! தணிகைவேல்
 தணிகைவேல் : என்ன ஐயா! உடல் நலம் இல்லையா?
 தலைமை ஆசிரியர் : அதெல்லாம் ஒன்றும் இல்லை. என் மனம் தான்!........
 தணிகைவேல் : என்னிடம் சொல்ல விரும்பினால்.....
 தலைமைஆசிரியர்: தங்களிடம் சொல்வதற்கென்ன! ஒருவேளை சொன்னால் நல்ல தீர்வும் கிடைக்கக்கூடும். தாங்கள் நல்ல பேச்சாளர். நகைச்சுவை உணர்வு மிக்கவர். தொலைக்காட்சிகளில் பல பட்டிமன்றங்கள், பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவரும் கூட. எனவே எனக்குத் தங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது. இன்று காலையில் என் மகன் சுந்தரின் மொபைலைத் தற்செயலாக எடுத்தேன். அதிர்ந்துபோனேன். எத்தனை ஆபாச குறுந்தகவல்கள். புகைப்படங்கள். அப்பப்பா! பதறிப் போனேன் தணிகைவேல். இன்றைய இளைய சமுதாயம் எங்கே சென்று கொண்டிருக்கிறது? ஏன் ஒருவருமே அவர்கள் நலனைப் பற்றி சிந்திக்காமல் இருக்கிறோம்? மூத்த தலைமுறையினரான நாம் நம் பொறுப்பிலிருந்து நழுவி அவர்களைக் கை கழுவி விட்டோமா? வெறும் பாடங்கள் தரும் மதிப்பெண்கள் மட்டுமே அவர்களுக்கு மதிப்பினைத் தந்துவிடுமா?நற்குணங்கள் அதைவிட முக்கியமல்லவா? இது என் மகனுக்கு வந்த பிறகே என் நினைவிற்கு வருவது சுயநலமில்லையா? என்னை நினைத்து நானே வெட்கப்படுகிறேன். இதைக் களையெடுக்க வேண்டுவது மிகவும் அவசியம் தணிகைவேல்!.... முள் மரத்தை ஆரம்ப காலத்திலேயே வெட்டுவதுதானே புத்திசாலித்தனம். இதைத் தாங்கள் தான் ஆரம்பிக்க வேண்டும்.
 தணிகைவேல்: என்னை நம்பிக் கூறியதற்கு மிகவும் நன்றி ஐயா! தாங்கள் மட்டும் அல்லாது நாம் அனைவருமே குற்றவாளிக் கூண்டில் நிற்க வேண்டியவர்கள்தான். தீர்க்க முடியாத பிரச்சனை என்று எதுவுமே இல்லை. அதனைத் தாங்கள் அறியாததா? (சற்று நேரம் சிந்தித்தல்) ஐயா! எனக்கு ஒரு யோசனை. முள் என்று தாங்கள் சொன்னதும் தோன்றியது. முள்ளை முள்ளால் எடுப்பதுதான் சரியான அணுகுமுறை.(தன் பையில் இருந்து அலைபேசியை எடுத்தல்) ஐயா! தங்கள் மகனின் அலைபேசி எண்ணைச் சொல்லுங்கள்.
 தலைமை ஆசிரியர் : (சொல்லுதல்).... இதை வைத்து என்ன செய்யப் போகிறீர்கள்?
 தணிகைவேல் : கொஞ்சம் பொறுங்கள். அதற்கு முன்பு இந்த அழைப்பிதழைப் பாருங்கள். வரும் பாரதி விழாவிற்கான அழைப்பிதழ். சரி பார்த்துவிட்டால் மீதி ஏற்பாடுகளைச் செய்துவிடுவேன்.
 (அவர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே தன் அலைபேசியில் இருந்து சுந்தரின் எண்ணுக்கு ஒரு குறுந்தகவலை அனுப்பினார்.கண்டுபிடி என்று தலைப்பிட்டு, மயிலுக்குப் போர்வை தந்த வள்ளல் யார் என்ற அத் தகவல் சுந்தருக்குச் சென்றது)
 
 காட்சி 5,
 இடம் : பள்ளி வகுப்பறை,
 மாந்தர் : சுந்தர், மாணவர்கள்
 (மதிய உணவு இடைவெளையின் போது புதிய எண்ணில் இருந்து வந்த அச் செய்தியை வியப்புடன் பார்த்த அவனது வாய், "ஆ! இது என்ன ? சுவாரஸ்யமாக இருக்கிறதே!' எனச் சொல்ல மற்ற மாணவர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டனர்.)
 
 ஒருமாணவன்: யாருடா? மயிலு. நம்ப ஸ்ரீதேவியா?
 மாணவன் 2 : அப்படின்னா அது பரட்டைதான்
 மாணவன் 3 : இல்லே இல்லே அது கமல்தான்
 மாணவன் 4 : டேய்! வள்ளல்னு போட்டிருக்குடா
 மாணவன் 5 : எனக்குத் தெரியும் அது பேகன் தான். கடை ஏழு வள்ளல்களில் ஒருவர்.
 சுந்தர் : சரியான விடைதானா? அப்படின்னா அனுப்பிடலாமா?
 (விடையை அனுப்புதல்)
 (உடனே அந்த எண்ணில் இருந்து பாராட்டுக்கள் என்ற வாசகத்தோடு அதைக் குறிக்கும் ஒரு எமோஜியையும் அனுப்பி அடுத்த தகவலை அனுப்பினார். சிலம்பின் நாயகி யார்? எனக்கே தெரியும் என்று கண்ணகி என்ற பதிலை அனுப்ப மறுபடியும் பாராட்டும் ஓர் எமோஜியும் வர அச் சூழலே கலகலப்பானது)
 மாணவன் 1 : சுந்தர்! யாரு அனுப்பறாங்க. ஆனா நல்லா இருக்கு இல்லே.
 சுந்தர் : ஆமாம்! அட! அதுக்குள்ளே இன்னொரு தகவல். நாம சாயந்திரமா பார்ப்போம். இப்போ வகுப்புக்குப் போக வேண்டிய நேரம் வந்தாச்சு.
 (பள்ளி மணி அடித்தல்)
 
 காட்சி - 6,
 இடம் பள்ளித் தலைமை ஆசிரியர் அறை,
 மாந்தர் : தலைமை ஆசிரியர், தணிகைவேல், ஆசிரியர்கள்
 தலைமை ஆசிரியர் : தணிகைவேல். உங்கள் முயற்சி வெற்றி பெற்றுவிட்டது. பாராட்டுக்கள். இப்போதெல்லாம் என் மகனுக்கு மிகவும் அரிய, சுவாரஸ்யமான தகவல்களே வருகின்றன. எல்லாம் உங்கள் புத்திசாலித்தனத்தால் விளைந்த மாற்றம்.
 ஆசிரியர் 1 : ஆம்! ஐயா! தணிகைவேல் என் மகனையும் மாற்றிவிட்டார்.
 தலைமை ஆசிரியர் : எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது.தணிகைவேல். நாம் நினைத்தால் நல்லதொரு சமுதாயத்தை உருவாக்கலாம் என்பதைத் தங்கள் நடவடிக்கை மெய்ப்பித்துவிட்டது. மனமும் நிறைந்திருக்கிறது. ஆனால் இது இன்னும் தொடர வேண்டும் தணிகைவேல். தொடர்ந்து பல செய்திகளை அனுப்பிக் கொண்டே இருங்கள். மாற்றம் உருவாகட்டும். அன்று பாற்கடலில் அமுதம் கடைந்தபோது வெளிவ ந்த விஷத்தை அன்று சிவபெருமான் உண்டு நீலகண்டன் என்ற பெயரைக் கொண்டார். அதைப்போன்றே இன்று விஷமாக வந்த பெரும் அவலத்தைத் தடுத்து நிறுத்திவிட்டீர்கள்.வரும் பாரதி விழா அன்று உங்களுக்கு ஒரு பாராட்டு விழாவும் இருக்கிறது. கலியுக நீலகண்டன் என்ற விருதும் வழங்கப்பட இருக்கிறது. மேலும் வாரம் ஒரு முறை நன்னெறி வகுப்பையும் தாங்கள் எடுக்க வேண்டும். இது எனது அன்புக் கட்டளை. நம் பள்ளிக்கு மட்டும் அல்ல; இப்பகுதியில் சுற்றி உள்ள அரசுப் பள்ளிகளுக்கும் தாங்கள் சென்று போதிக்க வேண்டும். அதற்கான ஏற்பாட்டை நான் செய்கிறேன்.
 இனி இளைய சமுதாயம் சிறப்புடன் திகழ நாமும் பொறுப்புடன் இருப்போம்
 தணிகைவேல் : ஐயா! எல்லாம் தங்கள் ஆதரவால் சிறப்புடன் நடைபெற்றது. நம் பொறுப்பும் இன்று தங்களால் உணரப்பட்டதே!
 ஆசிரியர் : தணிகைவேல் இல்லை இல்லை கலியுக நீலகண்டனே பாராட்டுக்கள்.
 - திரை-
 
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

அங்கிள் ஆன்டெனா
காட்டு விலங்கும் நாட்டு விலங்கும்!

 செண்பக மரம்!
 

பொருத்துக...
விடுகதைகள்