சிறுவர்மணி

 ஓர் ஓட்டுநரின் கல்விப் பயணம்!

23rd Nov 2019 11:06 AM

ADVERTISEMENT

நினைவுச் சுடர் !
 இந்தியப் பாதுகாப்புக் கவுன்சில், மற்றும் மேம்பாட்டு ஆய்வகத்தின் இயக்குநர் அவர்! அவருடைய காரின் ஓட்டுநராக நியமிக்கப்பட்டார் கதிரேசன் என்பவர்!
 ஆய்வகத்தின் இயக்குநர் மிக நல்லவர் தன்னுடன் பணிபுரியும் அனைவரிடமும், அன்புடனும், அக்கறையுடனும் பழகுவார்!
 ஒருநாள் இயக்குநர் காரில் பயணித்துக் கொண்டிருக்கும்போது கதிரேசனிடம் பேச்சுக் கொடுத்தார்.
 அப்போது கதிரேசன், "" நான் நன்றாகத்தான் படித்துக் கொண்டிருந்தேன்...... பத்தாவது வகுப்பு படித்துக்கொண்டிருக்கும்போது பாதியிலேயே படிப்பை நிறுத்தும்படி ஆகிவிóடது!..... அந்த சமயத்தில்தான் எனது தந்தை மரணம் அடைந்தார். திடீரென்று குடும்பம் வறுமைக்குள்ளானது! நான் என் படிப்பைக் கைவிட வேண்டியதாயிற்று!.... பிறகு ராணுவத்திற்கு மனுப் போட்டேன்!.... வேலையும் கிடைத்தது!..... இங்கு வந்து இப்போது டிரைவராக இருக்கிறேன்....'' என்றார்.
 இயக்குநர், ஓட்டுநருக்குக் கல்வியில் இருந்த ஆர்வத்தையும், அவர் படிப்பை அரைகுறையாக முடிக்க வேண்டிய நிலையையும் உணர்ந்தார். ஓட்டுநரை படிப்பை விட்ட இடத்திலிருந்து தொடரச் சொல்லி உற்சாகமூட்டினார். இப்போது படிக்க ஏராளமான வசதிகள் உள்ளன என்றும், தொலைதூரக் கல்வித் திட்டங்களும் உள்ளன என்று கூறியும் ஓட்டுநருக்குக் கல்வியைத் தொடர ஊக்கம் தந்தார். அதற்கான உதவிகளையும் செய்தார். இயக்குநரின் பேச்சு ஓட்டுநருக்கு நம்பிக்கையை ஊட்டியது! பணிமுடிந்து வீட்டிற்குச் சென்று கிடைத்த நேரங்களில் நன்றாகப் படித்தார். பத்தாம் வகுப்புத் தேர்வையும் எழுதினார்! அதில் வெற்றியும் பெற்றார். பிறகு பள்ளி இறுதிப் படிப்புக்கான தேர்வையும் எழுதி அதிலும் வெற்றி பெற்றார்.
 பிறகு தொலைதூரக் கல்வித்திட்டத்தின் மூலம் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து சரித்திரம் இளங்கலை, பின்பு சரித்திரம் முதுகலை, படிப்புகளில் தேர்ச்சி பெற்றார். தனது இந்த நிலைமைக்குக் காரணம் பாதுகாப்புக் கவுன்சில் இயக்குநர் என்பதை அவர் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.
 இயக்குநர் தந்த ஆதராவாலும் உற்சாகத்தாலும் 1996 - ஆம் ஆண்டு மேலும் உயர் படிப்பு படிக்கவேண்டும் என்று நினைத்து வேலையை ராஜினாமா செய்தார். திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் "முதுநிலை அரசியல் அறிவியல்' பட்டம் பெற்று முனைவர் பட்டமும் பெற்றார்.
 பிறகு திருநெல்வேலியில் இருக்கும் தலைமைக் கல்வி அதிகாரியின் அலுவலகத்தில் பணியில் சேர்ந்தார்.

 தன்னுடைய 47 - ஆவது வயதில் ஆத்தூரில் உள்ள அண்ணா கலைக்கல்லூரியில் விரிவுரையாளராகப் பணி ஏற்றார்! தன் வளர்ச்சிக்கெல்லாம் காரணம் அந்த இயக்குநர் என்பதை அவர் மறக்கவில்லை!
 ஊக்கம் தந்து, உதவி செய்து அந்த ஓட்டுநரை உயர்த்திய அந்த இயக்குநர் யார் தெரியுமா?
 டாக்டர் அப்துல் கலாம் அவர்கள்தான்!
 -எஸ்.திருமலை

ADVERTISEMENT
ADVERTISEMENT