கருவூலம் உலகப் பாரம்பரியச் சின்னங்கள்! WORLD HERITAGE SITES

ஒரு நாட்டின் அடையாளத்தை வெளிக்காட்டும் கண்ணாடிகள் அந்நாட்டின் கலாச்சாரம், மற்றும் பண்பாடு! ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பு, 1972 - இல் உலக பாரம்பரியச் சின்னங்களைப் பாதுகாப்பது
கருவூலம் உலகப் பாரம்பரியச் சின்னங்கள்! WORLD HERITAGE SITES

ஒரு நாட்டின் அடையாளத்தை வெளிக்காட்டும் கண்ணாடிகள் அந்நாட்டின் கலாச்சாரம், மற்றும் பண்பாடு! ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பு, 1972 - இல் உலக பாரம்பரியச் சின்னங்களைப் பாதுகாப்பது குறித்து ஒரு சர்வதேச மகாநாட்டை (WORLD HERITAGE CONVENTION) கூட்டியது. அதைத் தொடர்ந்து உருவானதுதான் "உலக பாரம்பரியச் சின்னங்கள்' குறித்த பட்டியல். 2012 - ஆண்டின் கணக்குப்படி 157 நாடுகளைச் சேர்ந்த 962 மையங்கள் உலக பாரம்பரியச் சின்னங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. 
"பாரம்பரியச் சின்னங்கள்' என்பவை மூன்று விதமாகப் பிரிக்கப்படுகின்றன. அவை.....1. கலாச்சார மையங்கள், 2. இயற்கை மையங்கள், 3. இவையிரண்டும் கலந்த மையங்கள். 
இந்தியாவில் மொத்தம் 29 பாரம்பரியச் சின்ன மையங்கள் உள்ளன. அவைகளில், 23 கலாச்சார மையங்களாகவும், 6 இயற்கை மையங்களாகவும் உள்ளன. 
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18 - ஆம் தேதி உலக பாரம்பரியச் சின்ன தினமாகக் கொண்டாடப்படுகிறது.
இனி இந்தியாவின் உலக பாரம்பரியச் சின்னங்கள் பற்றிப் பார்ப்போமா?
மேற்குத் தொடர்ச்சி மலைகள்!

அரிய வகை உயிரினங்கள், தாவரங்கள் ஆகியவற்றின் பொக்கிஷமாக விளங்கும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி 2012 - ஆம் ஆண்டில் உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது! பல்லுயிர்ப் பெருக்கத்திற்குப் பெயர் பெற்ற உலகின் பத்து இடங்களில் ஒன்று இது! குஜராத் எல்லையில் துவங்கி, மகாராஷ்ட்ரா, கோவா, கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம் என நீண்டு கன்னியாகுமரியில் முடிவடைகிறது! 1600 கி.மீ. நீளம் கொண்டது! 1,60,000 ச.கி.மீ. பரப்புடையது! பருவ மழையின் ஆதாரம் இந்த மேற்குத் தொடர்ச்சி மலைகள்! 
"மாதவ் - காட்கில் கமிட்டி' என்ற அமைப்பின் மூலம் பாதுகாக்கப்படுகிறது.
காஸிரங்கா தேசியப் பூங்கா - அஸ்ஸாம்
மிகிர் மலை அடிவாரத்தில் பிரம்மபுத்திரா நதியின் தென்கரையில் அமைந்துள்ளது இந்தப் பூங்கா. ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் அதிகமாக வாழும் பகுதி. 430 ச.கி.மீ பரப்பு கொண்டது! இப்பூங்காவில் அரிய வகை "சாம்பார் மான்கள்'...."ஹிலோக் கிப்பன்' வகைக் குரங்குகள் காணப்படுகின்றன. 
மானஸ் வன விலங்குகள் சரணாலயம்!
மானஸா தேவியின் பெயரால் அழைக்கப்படுகிறது. பிரபல புலிகள் காப்பகம் இது. பல்வேறு, விலங்குகள் மற்றும் பறவைகள், பூச்சியினங்கள், ஊர்வன அனைத்தும் வாழும் இடம்! 2840 ச.கி.மீ. பரப்பளவு கொண்டது. அரிய வகை கோல்டன் லங்கூர், மற்றும் காட்டெருமைகள் இங்கு அதிகம் காணப்படுகின்றன. 
நந்தாதேவி பூக்களின் சமவெளி தேசியப் பூங்காக்கள்!
இந்தியாவின் இரண்டாவது பெரிய மலையான நந்தாதேவி மலைச் சரிவுகளில் அமைந்துள்ள மிக அழகிய தேசியப் பூங்கா இது! ஆர்க்கிட் மலர்கள் ஏராளமாய்ப் பூக்கும்! மேலும் பல அரிய வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் இடம் இது! 
ஆக்ரா கோட்டை! (உத்திரப் பிரதேசம்)
யமுனை நதியின் வலக்கரையில் 1573 - ஆண்டில் மன்னர் அக்பரால் இக்கோட்டை கட்டப்பட்டது! 2.5 கி.மீ. சுற்றளவு கொண்ட இக்கோட்டைக்குள் ஜஹாங்கீர் மஹால், காஸ் மஹால், திவானி - இ - காஸ் மஹால், மற்றும் இரண்டு மசூதிகள் அமைந்துள்ளன, தில்லி கேட், அமர்சிங் கேட் என்னும் இரண்டு நுழைவாயில்கள் கொண்டது. 
தாஜ் மஹால்!
மொகலாயக் கட்டிடடக் கலையின் மகுடமாக இது திகழ்கிறது! யமுனை நதியின் வலக்கரையில் உள்ளது! 0.17 ச.கி.மீ. பரந்துள்ள மொகல் தோட்டத்தில் அமைந்துள்ளது. முழுவதும் சலவைக் கற்களால் ஆனது. மன்னர் ஷாஜஹானான் மனைவி மும்தாஜ் நினைவாகக் கட்டப்பட்டது. உலகப் புகழ் பெற்றது!
ஃபதேபூர் சிக்ரி!
இந்த ஊர் பதினான்கு ஆண்டுகள் மொகலாயரின் தலைநகரமாக இருந்துள்ளது. அக்பரால் கட்டப்பட்ட கோட்டையே ஃபதேபூர் சிக்ரி! புலந்தர் வாஸா, ஜாமா மஸ்ஜித், ஹவா மஹால் போன்ற இடங்கள் கண்களைக் கவரும்!
கொனாரக் சூரியன் கோயில் - ஒடிஸா 
கி.பி.1250 - ஆண்டில் சூரிய தேவனுக்காக தேர் வடிவில் அமைக்கப்பட்ட கோயில் இது! 24 வேலைப் பாடுள்ள கல் சக்கரங்கள் உள்ளன. ஏழு குதிரைகளால் இழுக்கப்படும் ரத அமைப்பில் இந்தக் கோயில் ஒரு சிற்பக் கலை அற்புதம்! "கறுப்பு பகோடா' என அழைக்கப்படும் இக்கோயில் மன்னர் ஆறாம் நரசிம்ம தேவரால் கட்டப்பட்டது!
பட்டடக்கல் நினைவுச் சின்னங்கள் - கர்நாடகம்!
பிஜப்பூர் மாவட்டம் வட மற்றும் தென்னிந்திய கட்டிடக் கலையின் எடுத்துக்காட்டாகத் திகழும் இந்நினைவுச் சின்னங்கள் ஐந்து மற்றும் ஆறாம் நூற்றாண்டு சாளுக்கிய வம்சத்தின் கலைப் பொக்கிஷங்கள்! ஒன்பது இந்துக் கோயில்கள், ஜைன விருபாக்ஷர் கோயில், மல்லிகார்சுனர் கோயில், சங்கமேஸ்வரர் ஆலயம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை!
ஹம்பி சிதிலங்கள்!
விஜயநகரப் பேரரசின் பழம் பெருமையைப் பறை சாற்றும் இடம் இந்த ஹம்பி நகரம்! 1565 ஆம் ஆண்டு தக்காண முஸ்லீம் படையெடுப்புகளையடுத்து சிதைவுண்டது. மத்திய கால உலகின் அழகு ததும்பும் நகரங்களில் ஒன்றான ஹம்பியின் ராமச்சந்திரா கோயில், ஹஸாரா ராமர் கோயில், புஷ்கரணி குளம், தாமரை மஹால், போன்றவை குறிப்பிடத்தக்கவை! 
சம்பாநிர் - பாவகட் அகழாய்வு பூங்கா!
இந்து மற்றும் இஸ்லாமிய கட்டடக் கலை இணைந்து வெளிப்படும் இப்பகுதி மொகலாயர் காலத்திற்கு முந்தைய இஸ்லாம் நகரத்தின் தூய சாட்சியாக விளங்குகிறது. இங்குள்ள ஜாமி மஸ்ஜித், காளி மாதா கோயில் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. 
கோவா தேவாலயங்கள்!
மடங்கள்!
போர்த்துகீசியர்களின் இந்தியத் தலைநகரமாக விளங்கிய கோவா சுமார் 450 வருட காலம் போர்த்துக்கீசியர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது! அவர்களால் உருவாக்கப்பட்ட புனித பிரான்சிஸ் சேவியர் கல்லறை அமைந்துள்ள "போம் ஜீஸஸ்'பஸிலிக்கா' உலகப் புகழ் பெற்றது!
(தொடரும்...)
தொகுப்பு: கோட்டாறு ஆ.கோலப்பன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com