22 செப்டம்பர் 2019

பொய் சொல்லக்கூடாது

DIN | Published: 18th May 2019 10:00 AM

விசுவாமித்திரர் என்றொரு முனிவர்
 சத்தியசீலன் அரிச்சந்திரனை
 ஒரு பொய்யாவது உரைக்கவைப்பேன்
 என்றொரு சபதம் மேற்கொண்டார் - அதனாலவன்
 சொத்தை இழந்தான், சுகம் இழந்தான்
 சுற்றம் இழந்தான், நட்பிழந்தான்
 கட்டிய மனைவி, பிள்ளையுடன்
 கண்ணீர் விட்டே நடந்தானாம்!
 அழகிய மஞ்சம், அரண்மனை, மற்றும்
 அறுசுவை உணவும் இழந்தனாராம்
 பழைய சோறும் கிடைக்காமல்
 பட்டினி யாலே மெலிந்தனராம்!
 வேலை கேட்டு இருவருமே
 வீடு வீடாய் அலைந்தனராம்!
 வேலை கொடுப்பார் யாருமில்லை
 வீதிகள் சுற்றிப் பிரிந்தனராம்!
 இட்டிடும் சோறே கூலி!... என
 இட்ட பணியைச் செய்து கொண்டு
 பெற்றவள் இருந்தாள் ஒரு வீட்டில்
 பிள்ளையுடனே கொட்டிலிலே!
 குணத்தில் உயர்ந்த கோமகனோ
 கோலம் இழிந்தே இடுகாட்டில்
 பிணத்தை எரித்திடும் வேலையினைப்
 பெற்றே நொந்து நின்றானாம்!
 
 "ஓடிடும் எல்லா துன்பங்களும்!
 ஒரு பொய் சொல்!'' என்றார் முனிவர்
 அரிச்சந்திரனோ சொல்லவில்லை!
 அவனது உறுதி தளரவில்லை!
 அரவு கடித்தே மகன் இறந்தான்!
 அருமை மனைவி கதறியுமே
 எரித்திட வந்தாள்! சுடுகாட்டில்
 இருந்தவன் கேட்டான் எரிகூலி!
 ஒருவரையொருவர் அறிந்ததுமே
 உள்ளம் குமுறி அழுதனராம்!
 இருவரும் துக்கம் தாளாமல்
 இறந்திட முடிவு செய்தனராம்!
 இதயம் தாங்கா தேவர்கள்
 இறங்கி வந்தே தடுத்தனராம்!
 அதுவரை மன்னன் இழந்திட்ட
 அனைத்தையும் திரும்ப அளித்தனராம்!
 அருமை மகனும் உயிர்பெற்றே
 அழகாய்ச் சிரித்தான்! தேவர்களோ
 அரிச்சந்திரனை வாழ்த்திவிட்டு
 ஆகாயத்தில் மறைந்தனராம்!
 அவன் கதை கேட்டு அப்படியே
 அண்ணல் காந்தி வாழ்ந்திட்டார்!
 புவியோர் போற்றிட நீங்களுமே
 பொய்யைச் சொல்லக்கூடாது!
 - புலேந்திரன்
 
 
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

இரண்டு தேவதைகள்!
அங்கிள் ஆன்டெனா

புற்று நோய்க்கு அருமருந்து சிமரூபா மரம்!
 

பொருத்துக...
விடுகதைகள்