கருவூலம்: டாமன் மற்றும் டையூ!

இந்தியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்தியாவில் உள்ள 7 யூனியன் பிரதேசங்களில் இதுவும் ஒன்று.
கருவூலம்: டாமன் மற்றும் டையூ!


இந்தியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்தியாவில் உள்ள 7 யூனியன் பிரதேசங்களில் இதுவும் ஒன்று. டாமன், டையூ என்ற இரண்டு நகரங்களை உள்ளடக்கியது. இதன் தலைநகரம் டாமன். இந்த யூனியன் பிரதேசம் நிர்வாக வசதிக்காக இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 

புவியியல்

டாமன் மற்றும் டையூ  யூனியன் பிரதேசம் 122 ச.கி.மீ. பரப்பளவு கொண்டது. ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாத இரண்டு தனித்தனி பிரதேசங்களாக அமைந்துள்ளது. இவை இரண்டுக்கும் இடையே 10 கி.மீ. தூரம் இடைவெளி உள்ளது. 

டாமன் பகுதியை குஜராத் மாநிலமும் அரபிக் கடலும் சூழ்ந்துள்ளது. இப்பகுதி 12.5 கி.மீ. நீள அழகிய கடற்கரை சூழ்ந்துள்ளது. டாமன் நகருக்குள் "டாவன் ஆறு'  பாய்ந்து மோதி டாமன் (பெரிய டாமன்) நனி டாமன் (சிறிய டாமன்) என இரண்டு பகுதிகளாகப் பிரிக்கிறது. டாவன்  ஆறு இங்குதான் கடலில் சங்கமிக்கிறது. 

டையூ பகுதி ஒரு சிறு தீவு. குஜராத் மாநில செளராஷ்டிர தீபகற்ப பகுதியின் தென் மூலையில் "காம்பே' வளைகுடாவில் "கிர்' சோம்நாத் மாவட்டத்தின் கடற்கரை பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. 

வரலாறு!

புராதன காலத்திலும் வரலாற்றுக் காலத்திலும் இந்த யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட நிலப்பகுதி பல மன்னர்கள் மற்றும் ராஜ வம்சத்தினரால் ஆளப்பட்டு வந்திருக்கிறது. பின்னர் இப்பகுதி 450 ஆண்டுகளுக்கும் மேலாக கோவா, மற்றும் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி ஆகிய பிரதேசங்களுடன் சேர்த்து ஒரு போர்ச்சுகீசிய ஆட்சிப் பகுதியாக இருந்து வந்தது. 1961 - ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் நாள் இப்பகுதி அரபிக்கடலை ஒட்டிய இதர போர்ச்சுகீசிய ஆட்சிக்குட்பட்ட பிரதேசங்களுடன் சேர்த்து இந்திய குடியரசுடன் இணைக்கப்பட்டது. இருப்பினும் போர்ச்சுகீசிய நாடு இந்த அதிகார பூர்வ இணைப்பை 1974 - ஆம் ஆண்டு வரை அஙகீகரிக்கவில்லை.

1961 - 1987 - ஆம் ஆண்டு வரை (கோவா தனி மாநில அந்தஸ்து பெறும் வரை) கோவா, டாமன் மற்றும் டையூ ஆகிய மூன்று பகுதிகளும் ஒரே யூனியன் பிரதேசமாக இருந்து வந்தன. அதன் பிறகு டாமன் மற்றும் டையூ பகுதிகள் தனி யூனியன் பிரதேசமாக இருந்து வருகின்றன. 

இன்னும் இப்பகுதியில் போர்ச்சுகீசிய காலனி ஆதிக்கத்தை ஞாபகப்படுத்தும் வகையில் பல நினைவுச் சின்னங்கள் அமைந்துள்ளன. 

டாமன்  நகரத்தின் சுற்றுலாத் தலங்கள்!

பரபரப்பு ஏதுமற்ற இயற்கையுடன் கூடிய அமைதியான சூழல் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்திழுக்கிறது. இயற்கையை ரசிப்பவர்களுக்கும், அலைகள்  மோதும் கடற்கரையை விரும்புபவர்களுக்கும் இப்பகுதி ஒரு சொர்க்கபூமி. 

ஜம்போர் பீச்!

ரம்மியமான சவுக்குத் தோப்புகளுடன் சந்தடி ஏதும் இல்லாமல் அமைந்திருக்கும் ஜம்போர் பீச் எனும் இக்கடற்கரைப் பகுதி பொழுதைக் கழிக்க ஏற்ற மிக அழகான இடம். 

தேவ்கா பீச்!

நீச்சலுக்கேற்ற கடற்கரைப்பகுதி இது. அலை இறக்கம் உள்ள நாட்களில் கடல் நீர் மணற்பரப்பை விட்டு வெகு தூரம் இறங்கிக் காட்சி அளிக்கும். அப்பொழுது மிருதுவான ஈர மணலில் நடந்தபடி சிப்பிகள், சங்குகள் போன்றவற்றைச் சேகரித்து மகிழலாம். டாமன் நகரத்தில் சில வித்தியாசமான பொழுதுபோக்குப் பூங்காக்கள் அமைந்துள்ளன. அவற்றில் ஒன்று தேவ் பீச் கடற்கரையில் அமைந்துள்ளது. 

மீரா சோல் வாட்டர் பார்க்!

இந்த வளாகத்தில் ஒரு ரம்மியமான ஏரி மற்றும் ஒரு பாலத்தின் மூலம் இணைக்கப்பட்டுள்ள இரண்டு அழகிய சிறு தீவுகள் உள்ளன. 

வைபவ் பார்க்!

 36 வகையான நீர் விளையாட்டுகள் கொண்ட இப்பூங்கா 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்தப் பூங்காவில் சப்போட்டா, மா, தென்னை போன்ற மரங்கள் கொண்ட தோப்புகள் உள்ளன. 

சர்ச் ஆஃப் போம் ஜீசஸ்!

ஒரு காலத்தில் போர்ச்சுகீசிய காலனியாக விளங்கியதால் டாமன் நகரில் ஏராளமான கிறிஸ்தவ தேவாலயங்களும் மற்றும் பழமையான கட்டடங்கள் நிரம்பியுள்ளன. 

இவற்றில் "சர்ச் ஆஃப் போம் ஜீசஸ்' என்னும் தேவாலயம் குறிப்பிடத்தக்கது. போர்ச்சுகீசிய கட்டக்கலை அம்சங்கள் மற்றும் அக்காலத்திய கலைஞர்களின் கைவினைத்திறன் போன்றவற்றை இந்த தேவாலயம் பிரதிபலிக்கிறது.

17 - ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட "அவர் லேடி ஆஃப் ரோசரி சர்ச்' என்னும் மற்றொரு தேவாலயம் மிகப் பழமையான மதச்சின்னமாகக் கருதப்படுகிறது. 
 கோட்டைகள்!

எதிரிகளின் முற்றுகைகளை சமாளிப்பதற்காக போர்ச்சுகீசியர்கள் பல கோட்டைகளையும் கட்டியுள்ளனர். இவற்றில் "ஃபோர்ட் ஆஃப் செயின்ட் ஜெரோம்' மற்றும் ஃபோர்ட் ஆஃப் டாமன்' ஆகிய இரண்டும் குறிப்பிடத்தக்கவை!

டையூவில் உள்ள சுற்றுலாத் தலங்கள்!

மனித ஆக்கிரமிப்புகள் ஏதும் இல்லாத தூய்மையான இயற்கை அழகுடன் காட்சியளிக்கும் கடற்கரைகளை டையூ தீவுப்பகுதி பெற்றுள்ளது. 

நகோவா பீச்!

மிகவும் பிரசித்தமான கடற்கரைப் பகுதி. நீச்சல் விளையாட்டுக்கு ஏற்ற இந்த கடற்கரையில் மிதவைச் சவாரி, படகுச் சவாரி, நீர்ச்சறுக்கு போன்ற இதர சாகசப் பொழுது போக்குகளும் உள்ளன.

கோக்லா பீச்!

மிகப் பெரியதாகவும், அமைதியான சூழலுடனும், இயற்கை எழிலுடனும் காட்சியளிக்கிறது கோக்லா பீச்! பாரா செயிலிங், சர்ஃபிங், மற்றும் இதர சாகச நீர் விளையாட்டுகளும் இங்கு உள்ளன.

ஜலந்தர் பீச்!

அழகு மற்றும் அமைதி கொண்ட கடற்கரைப் பகுதி இது.

கங்கேஷ்வர் கோயில்!

இந்த சிவன் கோயில் குகைக் கோயிலாக கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது. இதன்உள்ளே தரை மட்டத்தில் உள்ள ஐந்து சிவலிங்கங்கள் அரபிக்கடலின் அலைகளால் தொடர்ந்து அபிஷேகம் செய்யப்படுகிறது! 

புராண ஐதீகங்களின்படி பஞ்ச பாண்டவர்கள் தங்களது அஞ்ஞாத வாசத்தை இப்பகுதியில் கழித்தபோது தங்களது  தினசரி பூஜைக்கென இந்தக் கோயிலைக் கட்டியதாகச் சொல்லப்படுகிறது. கடல் நீர் உட்புகுந்து வெளியேறும்படி அமைந்துள்ள இந்த கங்கேஷ்வர் பாறைக் குகைக்கோயில் பக்தர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளது. 

செயின்ட் பால் சர்ச்!

போர்ச்சுகீசியரால்  டையூ  நகரத்தில் கட்டப்பட்ட மூன்று தேவாலயங்களில் இது ஒன்று மட்டுமே இன்றும் இயங்கி வருகிறது. 1610 - ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த தேவாலயத்தின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானம் போன்றவை பரோக் பாணி கட்டக்கலை அம்சங்களைக் கொண்டுள்ளது இதன் உட்பகுதியில் பல நுணுக்கமான மர வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள செயின்ட் மேரி சிலையின் பீட அமைப்பின் மேற்பகுதியில் ஓவியங்களும் சிலைகளும் காணப்படுகின்றன. உட்புறத்தைப் போலவே வெளிப்புறத்திலும் அழகிய வேலைப்பாடுகள் உள்ளன.

சர்ச் ஆஃப் செயின்ட் ஃபிரான்சிஸ் ஆஃப் அசிஸி!

1593 - ஆம் ஆண்டில் கட்டப்பட்ட மிகப் பழமையான தேவாலயம் இது! ஒரு மலை உச்சியில் கட்டப்பட்டிருக்கும் இந்த பிரம்மாண்டமான சர்ச் அரபிக் கடலை நோக்கி அமைந்துள்ளது. புகழ் பெற்ற இந்த சர்ச்சின் கட்டுமானமும் வடிவமைப்பும் ஐரோப்பிய பாணி கட்டடக் கலை அம்சங்களுடன் காட்சியளிக்கிறது.

செயின்ட் தாமஸ் சர்ச்! (அருங்காட்சியகம்)

1598 - இல் இந்த சர்ச் கட்டப்பட்டது. தற்போது பிரார்த்தனைக் கூட்டங்கள் எதுவும் நடத்தப்படுவதில்லை. இங்கு கிறிஸ்து மற்றும் கன்னிமேரி சிலைகள் உள்ளிட்ட கிறிஸ்தவ மதம் சார்ந்த அரும்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இவை தவிர 400 வருடங்களுக்கு முந்தைய கைவினைப் பொருட்கள், நிழல் கடிகாரங்கள், புராதன சிலைகள், கல்வெட்டுக் குறிப்புகள், மற்றும் பல அரும்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த தேவாலயத்தின் முன்புறம் நீரூற்றுகளுடன் கூடிய அழகிய பூங்கா உள்ளது. மாலை நேரத்தில் வண்ணமயமான மின்விளக்குகளில் மிகவும் அழகாக இப்பகுதி ஜொலிக்கும்! 

டையூ கோட்டை!

1541 - இல் இந்தக் கோட்டை கட்டப்பட்டது. போர்ச்சுகீசிய காலனி ஆட்சியாளர்கள் மற்றும் குஜராத் சுல்தான்கள் பஹதூர் ஷா ஆகியோர் கூட்டாக இந்தக் கோட்டையைக் கட்டி உள்ளனர். முகலாய பேரரசர் ஹூமாயூன் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு முயற்சிகளை தடுக்கும் நோக்கத்துடன் கட்டப்பட்டது. 

29 மீ. உயரமுள்ள இந்தக் கோட்டையானது கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது. மூன்று பகுதிகளில் கடற்பகுதியையும், நான்காவதில் ஒரு கால்வாய் அமைப்பையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. இரண்டு பிரம்மாண்டமான சுற்றுச் சுவர்கள் இந்தக் கோட்டையைச் சூழ்ந்துள்ளன. வெளிப்புற சுவர் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது. அதனை அடுத்து காவல் அரண் அமைப்புகளுடன் அடுத்த சுவர் அமைப்பு காணப்படுகிறது. இதில் பீரங்கி பொருத்துவதற்கான அமைப்புகள் உள்ளன. கோட்டையில் இரண்டு அகழிகளும் உள்ளன. கோட்டையில் பூங்கா, சிறைச்சாலை, மற்றும் கலங்கரை விளக்கம் ஆகியவை உள்ளன. 

பனி கொத்த கோட்டை!

"ஃபோர்ட்டிம் டோ மார்' என்ற பெயரிலும் அழைக்கப்படும் "பனி கொத்த கோட்டை' அரபிக்கடலில் இணையும் ஒரு முகத்துவாரத்தில் அமைந்துள்ளது. ஒரு கப்பலைப் போன்ற வடிவத்தில் கடல் நீருக்குள் இந்த கோட்டை கட்டப்பட்டுள்ளது. ஒரு சுரங்கக் கால்வாய் மூலம் இது நிலப்பகுதியுடன் இணைக்கப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. சுற்றியுள்ள கடற்பகுதியின் எழிலை நன்கு ரசிப்பதற்கு ஏற்ற இடம்! 

இரவு நேரத்தில் மின் விளக்குகளின் ஒளி வெள்ளத்தில் தனி அழகுடன் மனதை மயங்கச் செய்யும். படகு சேவையும் உள்ளது. 

கடற்சிப்பி அருங்காட்சியகம்!

நகோவா கடற்கரைக்கு அருகே அமைந்துள்ளது. ஓய்வு பெற்ற மெர்ச்சண்ட் நேவி கேப்டன் "ஃபுல்பரி' என்பவரால் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இவர் தன் கடற்பயணங்களின் போது சேகரித்த 3000 வகைக் கடற்சிப்பிகள், பல்வேறு உயிரின வகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. 

டாமன் மற்றும் டையூ அவசியம் காணவேண்டிய அருமையான சுற்றுலாத்தலம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com