மரங்களின் வரங்கள்! ஈட்டி மரம்

நான் தான் ஈட்டி மரம் பேசுகிறேன். எனது அறிவியல் பெயர் டால்பெர்ஜியா லாட்டி ஃபோலியா என்பதாகும். பண்டைக்கால போர்க் கருவிகளுள் ஈட்டி மிகவும் உறுதியானது என்பதாலும்,
மரங்களின் வரங்கள்! ஈட்டி மரம்

என்ன குழந்தைகளே நலமாக இருக்கிறீர்களா ?
 நான் தான் ஈட்டி மரம் பேசுகிறேன். எனது அறிவியல் பெயர் டால்பெர்ஜியா லாட்டி ஃபோலியா என்பதாகும். பண்டைக்கால போர்க் கருவிகளுள் ஈட்டி மிகவும் உறுதியானது என்பதாலும், நான் இரும்பைப் போல உறுதியாக இருப்பதாலும் என்னை ஈட்டி மரம் என்றழைக்கின்றனர். கிறிஸ்து பிறப்பதற்கு 3500 ஆண்டுகளுக்கு முன்பே என் பயன்பாடு புழக்கத்தில் இருந்ததற்கான சான்று கிடைத்திருப்பதாக சொல்கிறார்கள். நான் மண் அரிப்பை தடுக்க பயன்படுவேன், நீண்ட வறட்சியைத் தாங்குவேன். ஆனால், பனியைத் தாங்கி வளர மாட்டேன். என்னை தமிழில் தோதகத்தி எனவும், ஆங்கிலத்தில் ரோஸ்வுட் எனவும் அழைக்கிறாங்க.
 நான் என் நண்பன் தேக்கு மரத்தை விட 60 சதவீதம் அதிகக் கடினத் தன்மையும், பளுவை தாங்குவதில் 40 சதவீதத்திற்கு மேல் திறனும் கொண்டவன். நான் தண்ணீர்க்குள்ளேயே மூழ்கியிருந்தாலும் எனக்கு ஒன்றும் ஆகாது. என்னை பூச்சிகளும், பூஞ்சான்களும் தாக்காது. எனது மென்பகுதி சிறிய அளவில் பழுப்பு கலந்த மஞ்சள் நிறமாக இருக்கும். என் வைரப்பகுதி பலவகையான நிறங்களில் கரும் ஊதா சாயலுடன் இருக்கும்.
 என் மரக்கட்டையை நீங்கள் பயன்படுத்தும் போது மனதை மயக்கும் ஒரு சுகந்தமான நறுமணம் உங்கள் நாசிகளைத் துளைக்கும். இந்த மணத்திற்காகவே வாசனை திரவியங்கள் பயன்படுத்துவதில் என்னை பெருமளவில் பயன்படுத்துகிறார்கள்.
 நான் மேஜை, நாற்காலி, பீரோ, அலமாரி, இரயில் பெட்டிகளில் மர வேலைப்பாடுகள் போன்றவைகளைச் செய்ய பெரிதும் பயன்படுகிறேன். நாளாக நாளாக நான் பளப்பளப்பாகத் தான் மாறுவேனேயொழிய மங்க மாட்டேன். குழந்தைகளே, உங்களுக்குத் தெரியுமா, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஆனைமலை டிரஸ்ட் எனும் வணிகக் குழுவினர், எனது ஒரே மரப் பலகையில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய மேஜையைச் செய்து வெலிங்டன் சீமாட்டிக்கு பரிசளித்தார்களாமே. இன்றைக்கும் அது இலண்டனில் உள்ள பிரிட்டிஷ் மியூசியத்தில் காண்போர் மனதைக் கொள்ளைக் கொள்ளும் வகையில் காட்சிப் பொருளாக உள்ளது.
 நான் அரிய மரம் என்பதால் தமிழ்நாடு அரசு, 1994-ஆம் ஆண்டில் தமிழ்நாடு ஈட்டிமரப் பாதுகாப்பு சட்டத்தை இயற்றி என்னைப் பாதுகாத்து வருகிறது.
 குழந்தைகளே, என் இலையை கிள்ளாதீங்க, கிள்ளினால் சிறை தண்டனை உறுதி. என் மரத்தின் பட்டையை தூளாக்கி அதை நீரிலிட்டு காய்ச்சி தினமும் பருகினால் உங்கள் இரத்தத்தில் இரும்பு சத்து அதிகரிப்பதோடு, சர்க்கரை அளவையும் குறைத்து, பித்தத்தைத் தணிக்கும். என் பட்டைகளிலிருந்து வடியும் பிசினை உலர்த்தி, பாலுடன் சேர்ந்து பருகினால், உடல் இறுகி வலுவாகும், தளர்ந்த உடல் புத்துணர்வாகும். என் வேரை நன்கு அலசி, தண்ணீரில் முதல் நாள் இரவு ஊற வைத்து, மறுநாள் அந்நீரைச் சூடாக்கி அருந்தினால் நாள்பட்ட வயிற்றுப் புண் சரியாவதோடு, இரத்தத்திலுள்ள கொழுப்பும் குறைந்து உடலும் வலுவாகும். என் இலைகள் மக்கி மண்ணுக்கு ஊட்டச் சத்தை அளிக்கிறது.
 என்னுடைய ராசி மகரம். நட்சத்திரம் அஸ்வதி. மரங்கள் இயற்கையின் கொடை, தண்ணீர் பஞ்சத்தில் சிக்காமல், வறட்சியைப் போக்க வேண்டுமென்றால் குழந்தைகளே மரங்களை நடுங்க. மரம் வளர்ப்போம், மழை பெறுவோம். நன்றி குழந்தைகளே ! மீண்டும் சந்திப்போம்.
 (வளருவேன்)
 பா.இராதாகிருஷ்ணன்
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com