எண்ணம் போல் வாழ்வு

என்னங்க, உங்க அப்பா சொத்தில் பாதி உங்களுக்கு, பாதி உங்க தம்பிக்கா.. வீடு நிலம் எல்லாம் பாதி பாதியா?...
எண்ணம் போல் வாழ்வு

அரங்கம்
 காட்சி 1
 இடம் கோபாலன் இல்லம்.
 மாந்தர் - சகோதரர்கள் அண்ணன் கோபாலன், தம்பி கோவிந்தன், இருவரின் தாயார் அலமேலு, கோபாலன் மனைவி பாமா,
 கோவிந்தன் மனைவி ருக்மணி,
 
 கோபாலன் மனைவி பாமா : என்னங்க, உங்க அப்பா சொத்தில் பாதி உங்களுக்கு, பாதி உங்க தம்பிக்கா.. வீடு நிலம் எல்லாம் பாதி பாதியா?...
 கோபாலன் : அது தானே பாமா நியாயம்.. சரி பாதியாக பிரிச்சுக்கறது தானே வழக்கம்.
 பாமா : அது சரி.. நீங்க தானே உங்க அப்பா படுத்த படுக்கையா இருந்தப்போ மருந்து கொடுத்து குளிப்பாட்டி சீராட்டி துணி துவைச்சு அள்ளி கொட்டினீங்க!... உங்களுக்குத் தானே சொத்தில் அதிகம் வரணும்!....
 கோபாலன் : அப்படிச் சொல்லாதே பாமா!.... அப்பா நோயாளியாக இருந்தப்போ வைத்திய செலவுக்கு மூணு லட்சம் தேவைப்பட்டதே!.... தம்பி
 தானே வெளிநாட்டில் கஷ்டப்பட்டு வேலை பார்த்த பணத்தை அனுப்பி வச்சான்! அதுக்கப்
 புறம் ஆன செலவு மொத்தமும் அவன் தானே பார்த்தான்! நான் விவசாயம் பண்ணி கடன் தானே வச்சிருந்தேன்! அப்பா காலமானதும் விமானத்தில் வந்து, அவரோட இறுதிச் சடங்குக்கான எல்லா செலவும் அவன்தானே பண்ணினான். நம்ம கடனைக்கூட அடைச்சானே!..... இப்பவும் அம்மாவுக்காக வெளி நாடு போகாம இங்கே சின்ன வேலை பார்த்துக்கிட்டு தங்கிட்டானே.....
 பாமா : பணத்தாலே எல்லாம் ஆயிடுமா!..... உங்கப்பாவுக்கு வேண்டிய பணிவிடைகளையெல்லாம் நீங்கதானே செய்தீங்க.... அவரு பணம்தானே அனுப்பிச்சார்!.... மூத்தவருன்னு அவரு உங்களுக்கு இன்னும் கொஞ்சம் விட்டுத் தர்றதுதான் நியாயம்!
 கோபாலன் : வேண்டாம் பாமா!....தப்பு வழியில் போகச் சொல்லாதே.
 பாமா : நாளைக்கு பஞ்சாயத்தில் சொத்து பிரிக்கும் போது மேடான ஏழு ஏக்கர் பகுதியையாவது கேட்டு வாங்குங்க. மீதி மூணு ஏக்கர் பள்ளத்தை உங்க தம்பி வச்சுக்கட்டும்!
 கோபாலன் : வேண்டாம்....சரி பாதியா பிரிச்சுக்கலாம் பாமா!
 பாமா : ஹூம்.... நான் சொல்லி என்னத்தைக் கேட்டீங்க..... நான் எனக்கா கேட்கிறேன்.... நம்ம பிள்ளைங்க நாளைக்கு நல்லா, வசதியா இருக்கணுமில்லே!.... அவருக்கு என்ன, ஒரே பிள்ளை! இப்பக்கூட அவரு வெளி நாடு திரும்பி போனா கை நிறைய சம்பாதிச்சுக்குவார்!.... உங்களால் ஒத்தை ரூபா கூட சேர்க்க முடியாது!.... என்னமோ சொல்றதைச் சொல்லிட்டேன்.... அப்புறம் உங்க இஷ்டம்,!
 கோபாலன் : சரி,... உன் இஷ்டப் படி கேட்டுப் பார்க்கறேன்... எனக்கென்னவோ அவன் விட்டுக் குடுத்துடுவான்னுதான் தோணுது!..... ரொம்ப நல்லவன்!
 காட்சி 2
 இடம் - ஆலமரத்தடியில் கிராமத்தார்
 பஞ்சாயத்து கூட்டம்,
 மாந்தர் - பஞ்சாயத்தார், கோவிந்தன், கோபாலன் தாயார் அலமேலு ருக்மணி
 பஞ்சாயத்து தலைவர் : என்னப்பா கோவிந்தா!... உன் அண்ணன், உங்க அப்பா சொத்தில் பத்து ஏக்கர் நிலத்தில் மேட்டுப்பகுதியை ஏழு ஏக்கர் கேட்கிறார். பள்ளமா இருக்கிற மூணு ஏக்கரை நீ வச்சுக்கறியா? உனக்கு சம்மதமா?... இல்லே, சரி பாதியா பிரிக்கணுமா.
 கோவிந்தன் : தலைவர் ஐயா!... எங்க அப்பா சாகும் வரை அண்ணன்தான் கிட்டே இருந்து பார்த்துக்கிட்டார்!... நான் வெளி நாட்டில் வேலை பார்த்ததால் கிட்டே இருக்க முடியலே!... அண்ணனே ஏழு ஏக்கர் வச்சுக்கட்டும். மூணு ஏக்கர் எனக்குப் போதும்!... என் அம்மாவை வச்சுக்காப்பாத்துற பாக்கியம் மட்டும் போதும்!... விசாவுக்கு விண்ணப்பிச்சிருக்கேன். வந்ததும் மறுபடி வெளி நாடு போயிடுவேன். அங்கே எனக்கு மாதம் ஒரு லட்சம் சம்பளம் வரும்,. என் அண்ணன் படிக்காதவர். பாவம்!.... விவசாயத்திலே வேறே நஷ்டப் பட்டிருக்கிறார்!...
 அவருக்கு நிலம் கூடுதலா தர்றதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லே!.... சந்தோஷம்தான்!...
 தலைவர் : இரு,.... உன் அம்மா கிட்டேயும் ஒரு வார்த்தை கேட்கணும்!.... உன் பொஞ்சாதி கருத்தும் கேட்கணும்!....
 என்னம்மா.. உங்க பிள்ளைங்க இப்படி பிரிச்சுக்கிறதுக்கு சம்மதமா.
 தாயார் அலமேலு : பிள்ளைங்க ஒற்றுமையா எந்த முடிவு எடுத்தாலும் எனக்கு சம்மதம்தானுங்க....
 தலைவர் : (கோவிந்தன் மனைவி ருக்மணியைப் பார்த்து ) உனக்கு சம்மதமா?....
 ருக்மணி : சம்மதம்தானுங்க. என் வீட்டுக்காரருக்குத் தெரியாததா?>... அவர் என்ன சொல்றாரோ அது படி இருக்கட்டும்!....
 தலைவர் : சரிப்பா.. கேளுங்க,.... காலமாயிட்ட குப்புசாமி பையன்களான பெரியவர் கோபாலன் மேட்டுப்பகுதி ஏழு ஏக்கர், சின்னவர் கோவிந்தன் பள்ளப்பகுதி மூணு ஏக்கரை பிரிச்சு அனுபவிக்க பஞ்சாயத்து ஏத்துக்குது. இதை ஒரு பாகப் பிரிவினை பத்திரப் பதிவாக பதிவாளர் அலுவலகத்தில் நீங்க பதிவு பண்ணிக்க வேண்டியது. சாட்சியாக நாங்க ஒப்பமிடறோம்.
 (காலம் வேகமாகச் சுழல்கிறது. கோவிந்தன் அயல் நாட்டில் நல்ல உத்யோகத்தில் வருமானம் அதிகம் பெறுகிறான்)
 
 காட்சி - 3
 மாந்தர் - கோவிந்தன், ருக்மணி.
 
 (தொலைபேசி உரையாடல். துபாயில் இருந்து கோவிந்தன் பேசுகிறான்)
 கோவிந்தன் : என்ன ருக்மணி,... எல்லாரும் நல்லா இருக்கீங்ககளா, அம்மா நல்லா இருக்காங்களா?.... மாத்திரை எல்லாம் ஒழுங்கா சாப்பிடறாங்களா?.... பசங்க நல்லா படிக்குதா?..... அப்புறம் உனக்கு பல் வலின்னு சொன்னியே.... சரியாபோயிடுச்சா?...... சேதி ஏதும் இருக்கா?...
 ருக்மணி: இருக்குங்க. நம்ம மூணு ஏக்கர் நிலத்தை பள்ளமா இருக்கேன்னு பயிர்வக்காம இருக்கோமில்லியா. மூத்தார் ஏழு ஏக்கர் நல்ல கண்டு முதல்ன்னு அக்கா பாமா சொல்லிக்கிட்டாங்க. போனவாரம் ஒரு தனியார் பெட் ரோலிய கம்பெனி அதிகாரி வந்து நம்ம நிலத்தை அடியில் தோண்டி மண் பரிசோதனை செய்ய வந்தார்ன்னு சொன்னேனே... ஞாபகம் இருக்கா?....
 கோவிந்தன் : நான் தான் சரின்னு சொல்லச் சொன்னேனே!.... அது என்ன ஆச்சு?....
 ருக்மணி : நம்ம இடத்தில் ஒரு பெரிய மெஷின் வச்சு சோதிச்சாங்க, அடி மண்ணை எக்ஸ்ரே என்னவோ காமா கதிராம் வச்சு பரிசோதிச்சாங்க..... நம்ம நிலத்தின் அடியில் பெரிய பெட்ரோலியம் படுகை ஊற்றுக்கு வாயாக நம்ம வயல் இருக்காம். அப்புறம் துரப்பணப் பணிக்கு அனுமதி கொடுத்தோமா.... கச்சா எண்ணெய் பீறிட்டு வருது!... அவங்க இருபது வருஷ குத்தகை எடுத்துக்கிட்டு ஏக்கருக்கு பத்து லட்சம் வீதமும் எடுக்கும் எண்ணெயில் லாப விகிதாச்சாரம் பத்து சதவீதமும் தருவாங்களாம். அது எவ்வளவுன்னு கேட்டேன் வருஷத்துக்கு நாற்பது லட்சம் வருமாம்!.... சாமி கண்ணைத் திறந்துட்டார்!.... நீங்க வந்து, இருபது வருஷ குத்தகைக்கு ஒப்பந்தம் கையெழுத்துப் போடணுமாம்!... நீங்க எப்போ வர்றீங்க?...
 கோவிந்தன் : இதோ,.... இந்த வாரமே வர டிக்கட் போட்டுடறேன்!
 
 (பெட்ரோலியக் கம்பெனியின் லாரிகளில் கச்சா எண்ணெய் செல்கிறது. கோவிந்தனுக்கு பல லட்சம் சொத்து சேருகிறது..செல்வம் கொழிக்கிறஸ்து.. ஊரில் பெரிய மதிப்பு மிக்கவர் ஆகிறார் கோவிந்தன்.பெரிய பண்ணையை நிர்வகிக்கிறார்.)
 
 காட்சி 4,
 இடம் - கோபாலன் இல்லம்,
 மாந்தர் - கோபாலன், பாமா
 
 பாமா: கேட்டீங்களா அநியாயத்தை?....
 கோபாலன்: என்ன அநியாயம் நடந்திடுச்சி!...
 பாமா: மொத்த இடத்தையும் எனக்குன்னு நீங்க பஞ்சாயத்தில் பேசி வாங்கி இருக்கணும். அப்பாவை பார்த்துக்கிட்டதுக்கு... இப்போ உங்க தம்பி அந்த கம்பெனியோட ஒப்பந்தம் பேசி சொந்தமா டவுனில் பெட்ரோல் பங்க் வச்சிட்டார். என்ன ஓட்டம். கார், லாரி, டிராக்டர், நடவு மெஷின், அறுவடை மெஷின் வச்சிருக்கார். ஹூம்..... அந்த் அதிருஷ்டம் எனக்கு இல்லையே?......பெட்ரோல் கொட்டுதாமே அங்கே!.... நம்ம இடம் மேடாம்!.... ஒண்ணும் இல்லியாமே!....
 கோபாலன்: அடியே பாமா.. தம்பி வசதியானதும் நம்ம பிள்ளைங்க படிக்க உதவுறானே.. அது போதாதா. எண்ணம் போல தாண்டி வாழ்க்கை!.... விடு!... அவன் நல்லா இருந்தா நமக்கும் பெருமை தானே!...
 பாமா : ஹூம் .... ருக்மணி போன வாரம் வந்து ஒரு பட்டு புடவை தந்துட்டுப் போனா. பத்தாயிரம் விலையாம். என்ன... ஜரிகைதான் கொஞ்சம் கம்மி!.... கலர் பரவாயில்லே....
 கோபாலன்: திருப்திப் படு பாமா!...... என் தம்பி கோவிந்தன், அவன் மனைவி ருக்மணி ரெண்டு பேருக்குமே நல்ல மனசு! அவங்க நல்ல எண்ணத்துக்கு எங்கேயோ போகப் போறாங்க பார்..
 (ஐந்தாண்டுகள் ஓடிவிட்டன.... தற்போது கோபாலனும் ஒரு ஸ்கூட்டரில் போகிறார். கோவிந்தன், கோபாலனுக்கு ஒரு காரும் வாங்கித் தந்திருக்கிறார்!... நூறு ஏக்கர் பரப்பளவுள்ள கோவிந்தன் விவசாயப் பண்ணை, மற்றும் இருநூறு பசுக்கள் அடங்கிய பால் பண்ணையை அண்ணனும் தம்பியும் ஒற்றுமையாகப் பார்த்துக் கொள்கின்றனர்! அண்ணன் கோபாலனுக்கு ஒரு நல்ல வீடும் கட்டித் தந்திருக்கிறார் கோவிந்தன்! )
 
 காட்சி - 5
 இடம் - கோபாலன் வீடு
 மாந்தர் - கோபாலன், பாமா.
 
 (பாமா கையில் காபியுடன் வருகிறார்.... கோபாலன் அவளிடம் காபியை வாங்கிக் கொள்கிறார்)
 
 கோபாலன் : இப்போ என்ன சொல்றே, என் தம்பியைப் பற்றி?....
 பாமா: நான்தாங்க ரொம்ப தப்பாப் புரிஞ்சுக்கிட்டேன்!....அவரோட நல்ல மனசு எனக்கில்லாமப் போச்சேன்னு வருத்தமா இருக்கு!.... ருக்மணிக்குக் கூட எவ்வளவு நல்ல மனசு!.... அவங்ககிட்டே மன்னிப்புக் கேட்கணும் போல இருக்கு!
 கோபாலன் : திருந்தி மன்னிப்புக் கேட்கணும்னு சொல்றியே!.... இனிமே நிம்மதியான வாழ்க்கைதான்!.... அம்மா கேட்டா சந்தோஷப்படுவாங்க!....
 
 (திரை)
 என் எஸ் வி குருமூர்த்தி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com