கணிதம்!

தேர்வு நடக்கும் எல்லா வகுப்புகளிலும் மேசை நாற்காலிகள் குடி நீர் அமைப்புகள் ஒழுங்கா இருக்கா ?
கணிதம்!

அரங்கம்
 காட்சி - 1

 இடம்.: மேனிலைப் பள்ளி வளாகம்,
 காலம்..பள்ளி அரசு பொதுத் தேர்வு சமயம்
 நேரம் : காலை எட்டுமணி
 மாந்தர்..ஆசிரியர் சிகாமணி, தலைமை ஆசிரியர் கோபாலன், சக ஆசிரியர்கள், மாணவ மாணவியர். பியூன் பாலு
 
 தலைமை ஆசிரியர் கோபாலன் : தேர்வு நடக்கும் எல்லா வகுப்புகளிலும் மேசை நாற்காலிகள் குடி நீர் அமைப்புகள் ஒழுங்கா இருக்கா ?
 சிகாமணி : நானும் ஒவ்வொரு வகுப்பாக பியூன் பாலுவுடன் சென்று சரி பார்த்துவிட்டேன்....
 கோபாலன் : கழிப்பறைகள் சுத்தமாக இருக்கா?
 சிகாமணி : இருக்கு சார்!... கை கழுவும் இடங்களில் சோப் வைத்திருக்கிறேன்...
 கோபாலன் : இப்போ வெயில் அதிகமா இருக்கு!...வகுப்புகளில் மின் விறிகள் ஒழுங்கா இயங்குதான்னு பார்த்தியாப்பா பாலு....
 பியூன் பாலு : சார் பத்து "ஏ' வகுப்பில் சுற்றலை சார்...
 சிகாமணி : நான் போய் பார்க்கிறேன்....
 
 காட்சி 2
 இடம் - பள்ளி வகுப்பறை
 மாந்தர்..சிகாமணி, பாலு
 
 சிகாமணி : பாலு ஸ்விட்சைப் போடு!....
 பாலு : ஃபேன் சுத்தலே சார்..ஒரு குச்சியால் தட்டி விடறேன் சுத்து தான்னு பார்க்கலாம்!....
 சிகாமணி : அப்பவும் சுத்தலையே ..எலெக்ட்ரீஷியன் சிங்காரத்தைக் கூட்டி வா..என்னன்னு பார்க்கலாம்!
 பாலு : சார் அவர் மனைவிக்கு உடம்பு சரியில்லேன்னு விடுப்பில் இருக்கார்!....
 சிகாமணி : அந்த டேபிளை இழுத்துப் போடு!... என்னன்னு நான் பார்க்கறேன்...
 பாலு : சார் ஷாக் அடிக்கப் போவுது பார்த்து!...
 சிகாமணி : காலில் ரப்பர் செருப்பு போட்டிருக்கேன்..... (சரி பார்க்கிறார்). அடடே! கெபாசிட்டர் வேலை செய்யலே போலிருக்கு. (தன் பையில் இருந்து இருபது ரூபாய் தருகிறார்) பாலு, போய் சீலிங் ஃபேன் கெபாசிட்டர்ன்னு கேட்டு வாங்கி வா அருகில் இருக்கும் ராமு எலெக்ட்ரிக்கல் கடையில்....
 பாலு : சரி சார்!.....
 (சற்று நேரத்தில் கெபாசிட்டர் வாங்கி வருகிறார் பாலு....சிகாமணி அதை மின்விசிறி மண்டை யில் பொருத்துகிறார்)
 
 சிகாமணி : பாலு இப்போ ஸ்விட்சைப் போடு!
 பாலு : ஃபேன் நல்லா சுத்துது சார்!....
 சிகாமணி : இன்னிக்குக் கணிதத் தேர்வு. பசங்க சிரமப் படக் கூடாது...
 கோபாலன் : என்ன சிகாமணி நீங்களே ரிப்பேரில் இறங்கிட்டீங்களா?....
 சிகாமணி : சின்ன சின்ன கோளாறுகளைப் பார்த்து விடுவேன் சார்!...
 கோபாலன் : சரி பரிட்சை ஆரம்பிக்க நேரம் வந்திட்டு. நீங்க கண் காணிப்பாளர் இல்லியா. உங்க வேலையை ஆரம்பிங்க!
 
 காட்சி. 3
 இடம் வகுப்பறை
 மாந்தர்..சிகாமணி மாணவன் முத்து
 மற்றும் மாணவ மாணவியர்
 சிகாமணி : மாணவர்களே,.... எழுது பொருட்கள் கணித ஜியோமிதி உப கரணங்கள் தவிர எதுவும் இருந்தால் வாசலுக்கு வெளியே வைத்து விடுங்கள்....
 (கேள்வித் தாள் விடைத்தாளைத் தருகிறார்..... முத்து என்ற மாணவன் கேள்வித்தாளைப் பார்த்து மேல் கூரையைப் பார்க்கிறான்..... மயக்கமாவது போல் தெரிகிறது.... கண்ணில் கண்ணீர் முட்டிக் கொண்டு வருகிறது. திடீரென மயங்கி விழ சிகாமணி ஓடிச் சென்று அவனைத் தாங்கிப் பிடித்து முகத்தில் தண்ணீர் தெளிக்கிறார்!... முத்துவுக்கு மயக்கம் தெளிந்து விடுகிறது.... ஆனால் .... கைவிரல்கள் நடுங்குகின்றன!...)
 (கேள்வித் தாள் கடினம் போலிருக்கிறது என மனதுக்குள் நினைக்கிறார் சிகாமணி.)
 முத்து : சார், என் விரல் எல்லாம் நடுங்குகிறது!.... இரவு முழுக்கக் கண் விழித்துப் படித்தேன். விடை நன்கு தெரிந்தும் எழுத முடியவில்லை... என்ன செய்வேன்?
 (சிகாமணி உடனே தலைமை ஆசிரியருக்குத் தகவல் சொல்ல அவர் விரைந்து வருகிறார். அப்போது பறக்கும் படை அதிகாரி அங்கிருந்தவரும் வருகிறார். ...அவர் யாருடனோ தொடர்பு கொண்டு பேசுகிறார்)
 
 அதிகாரி : ஆமாம் சார் நல்லா படிக்கிற பையனாம்.. விரலில் நரம்பு இழுத்துக்கிட்டு எழுத முடியாமவ்தவிக்கிறான்.. ஓகே சார் அப்படியே செஞ்சிடறேன்!....
 அதிகாரி : ஹெச் எம் சார்!... அந்த பையனை உங்க அறைக்கு அழைச்சுப் போங்க.. அங்கு அவன் வாயால் சொல்லச் சொல்ல விடைகளை உங்கள் ஆசிரியர் ஒருவர் எழுதட்டும்!....
 கோபாலன் : சிகாமணி. இந்த வகுப்பை நான் பார்த்துககொள்கிறேன்..நீங்க என் அறையில் இவனுக்கு எழுதுங்க!...
 (முத்துவின் தாயாருக்கு செய்தியைச் சொல்கிறார்கள்... )
 
 காட்சி.4
 இடம் தலைமை ஆசிரியர் அறை
 மாந்தர்.. சிகாமணி, மாணவன் முத்து,
 பறக்கும் படை அதிகாரி
 
 (மாணவன் விடைகளைச் சொல்லச் சொல்ல. சிகாமணி எழுதுகிறார். நேரம் முடிந்ததும் முத்துவின் பேப்பருடன் நடந்த விவரங்களைக் குறிப்பிட்டு அதிகாரி அத்தாட்சிக் கடிதம் ஒன்றை இணைக்கிறார்..... கோபாலன் மற்ற மாணவர்களின் விடைத் தாள்களுடன் இந்த தாளையும் வைத்து அதிகாரி கடிதத்தில் சிகாமணியும் கோபாலனும் சாட்சிக் கையொப்பம் இடுகிறார்கள்.....--}முத்துவின் தாயார் அங்கு வந்து சேர்கிறார்... முத்து, ஆசிரியர் மற்றும் அங்கு உள்ளோர் உதவியுடன் பரிட்சையை எழுதி முடித்ததைக் கேள்விப்படுகிறாள்..... முத்துவை அணைத்துக் கொள்கிறாள்!... அவனை அழைத்துச் செல்லும்போது, தலைமை ஆசிரியர் கோபாலனை கை கூப்பி வணங்குகிறாள்)
 முத்துவின் தாயார் : ஐயா, இவன் தகப்பன் இல்லாத பையன். அவன் அப்பா இறந்திட்டார். உங்க தயவால் இந்த கடைசி பரிட்சை எழுதிட்டான்!.... ரொம்ப நன்றிங்க!...
 கோபாலன் : அவனை நன்கு ஓய்வெடுக்கச் சொல்லுங்க..டாக்டரிடம் காட்டுங்க!...
 (எல்லோரும் சென்றதும்)
 சிகாமணி : சார் ..அந்த மாணவன் நன்றாகப் படிக்கக் கூடியவன்!.... அதிலும் கணக்குப் பாடத்தில் ரொம்ப கெட்டிக்காரன்! நிச்சயம் மாவட்டத்திலேயே முதலாவதாக வருவான் என நினைக்கிறேன்! அத்தனை கணித அறிவு!....
 (ஒரு மாதம் கழித்து முத்து மாவட்ட அளவில் முதலாவதாகவும் கணிதத்தில் நூற்றுக்கு நூறும் வாங்கி இருப்பதை செய்தித் தாள்கள் பிரசுரிக்கின்றன)
 
 காட்சி - 5
 இடம் - முத்துவின் வீடு
 மாந்தர் - முத்து, முத்துவின் தாயார்
 
 முத்து : அம்மா!.... என் பேர் பேப்பரிலே வந்திருக்கு! நான் மாவட்ட அளவிலே கணிதத்திலே முதல் மார்க் வாங்கியிருக்கேன்!
 முத்துவின் தாயார் - அட என் தங்கமே! ரொம்ப சந்தோஷமா இருக்குடா! உங்கப்பா இருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பார்!
 முத்து - ஆமாம்மா!.... நான் பரிட்சை எழுதினத்துக்கு உதவின சிகாமணி சாருக்கும், ஹெட்மாஸ்டர் கோபாலன் சாருக்கு ம் ரொம்ப நன்றிக்கடன் பட்டிருக்கேன்மா!...
 முத்துவின் அம்மா: ஆமாம் வாழ்நாள்லயே மறக்க முடியாதுப்பா அவங்க செய்த உதவியை! நீ ஸ்கூலுக்குப் போய் அவங்களுக்கு நன்றி சொல்லிட்டு வா!
 முத்து - சரிம்மா!
 (முத்துவின் தாயார் பெருகி வந்த ஆனந்தக் கண்ணீரை கணவனின் புகைப்படத்தின் முன் துடைத்துக் கொள்கிறாள்)
 திரை
 என்.எஸ்.வி.குருமூர்த்தி
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com