ஏழிலைபாலை மரம்!

நான் தான் ஏழிலைபாலை மரம் பேசுகிறேன். எனது அறிவியல் பெயர் அல்ஸ்டோனியா ஸ்காலாரிஸ் என்பதாகும்.
 ஏழிலைபாலை மரம்!

மரங்களின் வரங்கள்!
என்ன குழந்தைகளே நலமாக இருக்கிறீர்களா ?
 நான் தான் ஏழிலைபாலை மரம் பேசுகிறேன். எனது அறிவியல் பெயர் அல்ஸ்டோனியா ஸ்காலாரிஸ் என்பதாகும். நான் அபோசயனோசியே குடும்பத்தைச் சேர்ந்தவன். எனக்கு ஏகாளி மரம், ஏழிலைக் கள்ளி மற்றும் ஏழிலம்பாலை என்ற வேறு பெயர்களுமுண்டு. வடஇந்தியாவில் என்னை சப்த பர்னா எனவும் அழைக்கிறாங்க. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் ஐவகை நிலப்பரப்புகளுள் வெப்பத்தால் தகிப்பது பாலை. இந்தப் பகுதியில் கள்ளியும், பாலையும் மற்றும் வளரும். பாலை மரத்தில் பல வகைகள் உண்டு. ஆனால், அவற்றுள்ளும் தெய்வீக மரமாக இருப்பது நான் தான்.
 என் இலைகள் ஓரிலைக்காம்பில் ஐந்து முதல் ஏழு இலைகள் காணப்படும். பெரும்பாலும் ஏழு இலைகள் காணப்படுவதால் எனக்கு ஏழிலைப்பாலை எனப் பெயர் வைத்திருக்கிறார்கள். எனக்கு ஏழு இலைகள் இருப்பதைக் கண்டு வால்மீகி முனிவர் இராமாயணத்தில் என்னை "சப்த சாதா' எனக் குறிப்பிட்டுள்ளார். என்னை சப்தஸ்வரங்கள் என்றும் வர்ணிப்பார்கள். என் பூக்கள் பச்சை மற்றும் வெள்ளை நிறத்தில் மணம் மிகுந்து காணப்படும்.
 என்னுடைய இலையை வறுத்து, பொடித்து, சீழ் வடியும் புண்களுக்கு மேலாக வைத்துக் கட்டி வந்தால் விரைவில் குணம் காண்பீர்கள். சூலை, குன்மம் போன்ற நோய்களைத் தீர்க்கும் வல்லமை என் வேர்களுக்குண்டு.
 என் மரத்திலிருந்து பால் போன்று வடியும் சாற்றை வயிற்றுப் புண், மூட்டு வலிகளுக்கு மருந்தாகப் பயன்படுத்தலாம். தலைவலிக்கும் இந்தச் சாற்றைப் பூசலாம். அஜீரணத்தினால் வரும் அனைத்து விதமான குறைபாடுகளுக்கும் ஏழிலைப்பால் நல்ல மருந்து. குளிர் ஜுரம், யானைக்கால் வியாதி போன்றவற்றை குணமாக்கும் சக்தியும் என்னிடத்திலுண்டு. தோல் நோய்க்காரர்கள் என் இலையை கஷாயமாகச் சாப்பிடலாம்.
 என் மரப்பட்டை, வேர், இலைகள், பூ, காய் ஆகியவற்றில் 11 வகையான ஆல்கலாய்டுகள் உள்ளதால் என்னை ஆல்கலாய்டுகளின் சுரங்கமுன்னும் சொல்றாங்க. என் மரத்தின் உலர்ந்த பட்டையை சாத்திம் என்று அழைப்பாங்க. இந்தப் பட்டை நாட்பட்ட வயிற்றுப் போக்கு, வயிற்றுக் கடுப்பு ஆகியவற்றுக்கு உடனடி மருந்து. இது காய்ச்சலைப் படிப்படியாக குறைப்பதோடு, தோல் வியாதிக்கும் ஏற்ற மருந்து. மேலும், இதிலிருந்து ஒருவகை திரவம் கசியும் அது டிஞ்சர் செய்ய பயன்படுது.
 உங்களுக்குத் தெரியாது குழந்தைகளே, நான் உங்களுடன் இரண்டறக் கலந்தவன். அந்தக் காலத்தில் உங்க தாத்தா, பாட்டி படிக்கும் போது ஸ்லேட்டில் தான் எழுதி, எழுதி படிப்பாங்க. அப்போ அந்த ஸ்லேட்டை சுற்றி மரச்சட்டம் அடிச்சிருப்பாங்க. அந்த மரச்சட்டம் நான் தான். அவங்க என்னை முகர்ந்து பாப்பாங்க. அப்போ எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்.
 குழந்தைகளே, நீங்கள் படிக்கும் பள்ளிக்கூடங்களில் கரும்பலகைகளைச் செய்யவும் நான் உதவுவதோடு, இலகு குறைவான பெட்டிகள், ஓட்டுப் பலகைகள், தேயிலைப் பெட்டிகள், டப்பாக்கள், பென்சில், தீக்குச்சிகள், தீப்பெட்டிகள் செய்யவும் பயன்படறேன். நான் பள்ளி சம்பந்தப்பட்ட பொருள்களை செய்ய உதவுவதால் எனக்கு "ஸ்காலாரிஸ்' என்ற பெயர் ஏற்பட்டது எனலாம். மரம் ஒன்று வளர்ப்போம், மழை தினம் பெறுவோம். வீட்டுக்கொரு மரம் வளர்த்து தூய காற்றினைப் பெறுவோம்.
 திருநாகேஸ்வரம் எனப்படும் திருப்பாலைப்பந்தல் (தஞ்சாவூர் மாவட்டம்), திருக்கழிப்பாலை (கடலூர் மாவட்டம்) திருப்பாலைவனம் (திருவள்ளூர் மாவட்டம்) ஆகியன பாலையின் பெயரால் அமைந்த இடங்களாகும். நான் காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம், அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயிலில் தலவிருட்சமாக இருக்கிறேன். எனது ராசி ரிஷபம். நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.
 (வளருவேன்)
 - பா.இராதாகிருஷ்ணன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com