இங்கிருந்து அங்கே!...அங்கிருந்து இங்கே!

வேதம் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை விஸ்வேஸ்வரனுக்கு வந்தது. சுகர்த்தர் என்ற ஒரு வேத வித்தகரிடம் சென்றான்.
இங்கிருந்து அங்கே!...அங்கிருந்து இங்கே!

வேதம் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை விஸ்வேஸ்வரனுக்கு வந்தது. சுகர்த்தர் என்ற ஒரு வேத வித்தகரிடம் சென்றான். அவர் வேதத்திலிருந்து சுலபமான பகுதி ஒன்றைக் கூறி அதைத் திரும்பச் சொல்லும்படி கூறினார். அதை அவனால் கூற முடிவில்லை. உடனே அந்த குரு, " உனக்கு வேதம் வராது!'' என்று கூறி விஸ்வேஸ்வரனை அனுப்பி வைத்தார்!
 சிறிது நாட்கள் சென்றன. விஸ்வேஸ்வரன் மீண்டும் சுகர்த்தரைப் பார்க்க வந்தான். அவரிடம், "எனக்கு சுலபமாக வரக்கூடிய மந்திரத்தைச் சொல்லித் தாருங்கள்!'' என வற்புறுத்தினான். அப்போது சுகர்த்தர் தன் மாணாக்கர்களுக்கு தர்க்க சாஸ்திரம் கற்பித்துக் கொண்டு இருந்தார். அதிலிருந்து ஒரு பகுதியை விஸ்வேஸ்வரனுக்கு எடுத்துக் கூறினார். விஸ்வேஸ்வரனுக்கு அதுவும் மிகக் கஷ்டமாக இருந்தது! ஆனால் குரு பக்தி மட்டும் நிறைந்து இருந்தது! அவன் சுகர்த்தரை வணங்கி விடை பெற்றான்.
 மேலும் சில நாட்கள் சென்றன. அவன் மீண்டும் சுகர்த்தரை நாடிச் சென்றான். அவர் தனது பாடசாலையில் அன்று வியாகரணம் என்னும் இலக்கணப் பகுதிசைக் கற்பித்துக் கொண்டிருந்தார். விஸ்வேஸ்வரன் அவரிடம், "இதிலிருந்தாவது ஒரு பகுதியை எனக்குக் கற்றுக் கொடுங்கள்!'' என்று கேட்டான்.
 சுகர்த்தருக்கு சிரிப்பு வந்தது! அவர், "சரி! ஒரு சிறுபகுதியை நான் சொல்லித் தருகிறேன்!'' என்று அடிப்படை ஸ்லோகத்தை அவனுக்குச் சொல்லிக் கொடுத்தார்.
 அவனுக்கு இதுவும் மிகக் கடினமாக இருந்தது. மனம் வருத்தப்பட்டு அங்கிருந்து வெளியேறினான். ஆனால் குரு தன்னைக் கைவிடமாட்டார் என்ற நம்பிக்கை மட்டும் அவனுக்கு இருந்தது! சிறிது நாட்கள் கழித்து மீண்டும் வரலாம் என நினைத்தான்.
 சிறிது நாட்கள் சென்றன. மறுபடி வந்தான். குருவிடம், ""சுலபமான ஏதாவது ஒரு மந்திரத்தை எனக்குக் கற்றுக் கொடுங்கள்!'' என்றான்.
 சுகர்த்தரும், "இங்கிருந்து அங்கே!.... அங்கிருந்து இங்கே!...'' என்று கூறி, " நீ இதையே சொல்லிக் கொண்டிரு! '' எனப் பணித்தார்.
 அதை மந்திரம் என்று நினைத்து காட்டுக்குச் சென்று ஒரு பெரிய பாறையின் முன் அமர்ந்து அதே வாக்கியத்தைப் பல கோடி முறை ஜபம் போன்று ஜபித்தான்! ஆண்டுகள் நகர்ந்தன. அவன் மேல் புற்று படர்ந்தது! கண்விழித்துப் பார்த்தான்! வாய் மந்திரத்தை விடாமல் ஜபித்துக் கொண்டிருந்தது!
 அப்போது, "இங்கிருந்து அங்கே'' என்றவுடன் அவன் முன் இருந்த பாறை வெகு தூரத்தில் போய் விழுந்தது. அடுத்து அவன், "அங்கிருந்து இங்கே!'' என்றவுடன் பாறை இருந்த இடத்திற்கே வந்து சேர்ந்தது! விஸ்வேஸ்வரனுக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது! அவன் ஆனந்த பரவசத்தை அடைந்தான்! குருவைத் துதித்தான்! குருவாக்கியத்திற்கு இவ்வளவு பலனா என வியந்தான்! குருவைத் நாடிச் சென்றான். அவரிடம், ""நீங்கள் சொல்லிக் கொடுத்த மந்திரம் பலித்து விட்டது!'' என்றான்.
 சுகர்த்தர் நடந்ததை மறந்திருந்தார். அவர் விஸ்வேஸ்வரனிடம், ""நான் உனக்கு மந்திரம் சொல்லிக் கொடுத்தேனா?... என்ன மந்திரம்?? எப்படிப் பலித்தது?...'' என்றார்.
 உடனே விஸ்வேஸ்வரன், " இங்கிருந்து அங்கே...'' என்றான். எதிரே உட்கார்ந்திருந்த சுகர்த்தர் வெகுதூரம் போய் விழுந்தார். "அங்கிருந்து இங்கே...'' என்றதும் பழைய இடத்துக்கே வந்து சேர்ந்தார் குரு.
 "இன்னொரு முறை சொல்லட்டுமா?'' என்று கேட்டான் விஸ்வேஸ்வரன்.
 ஆச்சரியமும், பரபரப்பும் அடைந்த சுகர்த்தர், அவனிடம் பவ்யமாக, "ஐயோ வேண்டாம்!'' என்று இரு கைகளையும் கூப்பினார்.
 விளையாட்டாக குரு கூறிய வாக்கியத்தின் மீது விஸ்வேஸ்வரனுக்கு உண்டான நம்பிக்கையினாலும், பக்தியினாலும், விடா முயற்சியினாலும், விசுவாசத்தினாலும், அதுவே மந்திரமாய் பலித்தது!
 - ஆதினமிளகி வீரசிகாமணி
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com