செவ்வாய்க்கிழமை 16 ஜூலை 2019

தினேஷின் உலகம்! 2

By  லக்ஷ்மி பாலசுப்ரமணியம்| DIN | Published: 22nd June 2019 10:36 AM

அன்றிரவு தூக்கமே வரவில்லை!
 பள்ளியில் காலை இறைவணக்கம் நடை பெற்றது. அது முடிந்ததும் தலைமை ஆசிரியர் புதிய தகவல்களை மாணவர்களுக்குச் சொல்வது வழக்கம்.
 " ஸ்டூடன்ட்ஸ்!...இந்த வார "சிறுவர் சுடர்' பத்திரிகையிலே "பூமியைக் காப்போம்' ங்கிற பாடல் வந்திருக்கு! அருமையான பாடல்! நான் ரொம்ப ரசித்தேன்! அதை யார் எழுதினாங்கன்னு தெரியுமா?.... நம்ம பள்ளியிலே படிக்கிற ஐந்தாம் வகுப்பு மாணவன் முகிலன்தான்!கவிதை பிரசுரமான "சிறுவர் சுடர்' ... நம்ம நூலகத்திலே கிடைக்கும்...''
 அதைக் கேட்ட மறு நொடியே மாணவர்கள் அனைவரும் கை தட்டினர்!
 "நம்ம பள்ளிக்குப் பெருமை சேர்த்த முகிலனுக்குப் பாராட்டுகள்! அவனை ஊக்கப்படுத்த இந்த பேனாவைப் பரிசளிக்கிறேன்!'' என்றார்.
 முகிலன் பேனாவை வாங்கிக்கொண்டான். அவன் முகத்தில் மகிழ்ச்சியும் பெருமிதமும் தோன்றின.
 ""ஸ்டூடன்ட்ஸ்!.... நீங்களும் இப்படி எதாவது கிரியேடிவாகச் செய்யணும்!.... ஒரு படைப்பாளிதான் நல்ல புகழை அடைய முடியும்!'' என்றார் தலைமை ஆசிரியர்.
 அதைக் கேட்டதிலிருந்து தினேஷுக்கு இருப்பு கொள்ளவில்லை. கொஞ்சம் பொறாமையாகக் கூட இருந்தது! தினேஷ் பள்ளி நூலகத்துக்குச் சென்றான். நூலகத்தில் முகிலன் எழுதிய கவிதையைப் படித்தான். பாடல் எளிமையாக கருத்துடன் இருந்தது!.... தானும் இப்படி ஒரு பாடல் எழுதினால் என்ன? என நினைத்தான். அன்று முழுவதும் இதே சிந்தனையில் இருந்தான். அவனுக்கு அன்றிரவு தூக்கமே வரவில்லை. நள்ளிரவில் எழுந்தான். தனக்குத் தோன்றிய யோசனைகளை ஒரு பாட்டாக எழுதினான். அதை ஒரு நகல் எடுத்தான். மறுநாள் காலை பாட்டின் நகலை ஒரு கவரில் போட்டு அஞ்சல் தலைகளை ஒட்டினான். அம்மா ஆச்சரியத்தோடு, ""யாருக்கு லெட்டர் எழுதறே தினேஷ்?'' என்று கேட்டார்.
 ""லெட்டர் இல்லேம்மா!.... சிறுவர் பாடல் எழுதியிருக்கேன்!''
 "எங்கே காட்டு பார்க்கிறேன்....''
 "இல்லேம்மா!.... அதை நீங்க இப்போ படிக்கக்கூடாது!.... சிறுவர் சுடர் புத்தகத்திலே கட்டாயம் வெளிவரும்!.... அப்போ படிங்க!...''
 அம்மாவுக்குப் பெருமிதமாக இருந்தது.
 அன்று பள்ளியில் தன் நண்பர்களிடம் தானும் ஒரு சிறுவர் பாடல் எழுதி "சிறுவர் சுடர்' பத்திரிகைக்கு அனுப்பி இருப்பதாகக் கூறினான். அதைப் படிக்கக் கேட்டவர்களிடம், "பத்திரிகையில் வந்த பிறகு படிக்கலாம்!'' என்று கூறினான்.
 முகிலனிடம், "ஏன்?.... உன் கவிதை மட்டும்தான் பத்திரிகையில் வருமா?... என் கவிதை கூடத்தான் வரும்!.... ரொம்ப அலட்டிக்காதே'' என்றான். முகிலனுக்கு ஒன்றுமே புரியவில்லை.
 சில வாரங்கள் கழிந்தன. "சிறுவர் சுடர்' பத்திரிகையில் தினேஷின் கவிதை வரவேயில்லை! நண்பர்கள், "எங்கடா?..... இந்த வாரமும் உன் கவிதையைக் காணவே காணோம்!...'' எனக் கேட்டனர். தினேஷுக்கு அவமானமாக இருந்தது. அழுகை, அழுகையாக வந்தது!
 வீட்டில் வேறு அம்மா, அப்பா, பாட்டி என்று யார் கேட்ட போதும் காரணம் கூறாமல் இருந்தான்.
 ஏதோ ஒரு பொருளை வாங்குவதற்கு பக்கத்து வீட்டு முரளிஅண்ணன் அங்கு வந்தார். முரளி அண்ணா பொறியியல் கல்லூரியிலே படிக்கிறார். முரளி அண்ணாவை தினேஷுக்கு மிகவும் பிடிக்கும். அதற்குக் காரணம் முரளி அண்ணா அவனுடன் கிரிக்கெட் விளையாடுவார்! அவனுக்கு எந்த சந்தேகம் வந்தாலும் தீர்த்து வைப்பார். யோகாசனம் கற்றுத் தருவார்.
 யாரிடமும் வாயைத் திறக்காதவன் அவரிடம் அழுது கொண்டே தனது ஏக்கத்தைக் கூறினான்.
 "சே!.... இதுதான் விஷயமா? நீ எழுதின கவிதை புத்தகத்துல அச்சாகி வரணும்!.... அவ்வளவுதானே!....எங்கே நீ எழுதின கவிதையைக் காட்டு! அதை எங்க காலேஜ் மேகசின்லே போட முடியுமான்னு பார்க்கறேன்!'' என்றார்.
 யாரும் படித்து விடாதபடி ஒரு நோட்டுப் புத்தகத்தின் கடைசிப் பக்கத்தில் தான் எழுதியிருந்த கவிதையை முரளி அண்ணாவிடம் படிக்கக் கொடுத்தான்!
 "பேனாவைக் கையில் எடு!
 பொய் சொல்லும் பழக்கம் விடு!
 தலையைக் கையால் தொடு!
 மெத்தையில் ஏறிப் படு!
 சண்டை வந்தால் தடு!
 சாக்லேட் இருந்தா குடு!
 மாங்காப் பிஞ்சு வடு!
 டச் போனைத் தொடு!
 இதைப் படித்த முரளி அண்ணன் "ஹா!....ஹா!... எனச் சிரிப்பு வந்தது. தினேஷின் பெற்றோருக்கு ஒன்றும் புரியவில்லை. வாங்கிப் படித்த அவர்களுக்கும் பலமாகச் சிரித்தனர். தினேஷ் குழப்பத்துடன் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
 "அட!... என் கவியரசர் கண்ணதாசா! நல்லா முயற்சி பண்ணியிருக்கே!.... ஒன் ஏக்கம் என்ன?... "சிறுவர் சுடர்' லே உன் பேர் வரணும் அவ்வளவுதானே?.... நீதான் சூப்பரா படம் வரைவியே?... அதை உன் போட்டோவோட அனுப்பினா "சிறுவர் சுடர்' லே உன் பேர், உன் பள்ளிக்கூடத்தோட பேர் கூட வருமே!.... இப்பவே படம் வரைஞ்சு குடு! நானே போஸ்ட் பண்ணிடறேன்!'' என்றார்.
 மனம் தெளிந்த தினேஷ் சிரித்தபடியே தலையை ஆட்டினான். ஓடிப்போய் அவன் ஏற்கனவே வரைந்திருந்த ஒரு பெயின்டிங்கைக் கொண்டு வந்து முரளி அண்ணாவிடம் கொடுத்தான்.
 முரளி அண்ணா தினேஷ் வரைந்த வண்ண ஓவியத்தை வாங்கிக் கொண்டார். அவன் பெற்றோரிடம் "அங்கிள், உங்க பையன் பின்னாலே பெரிய கவிஞனாக வந்தாலும் வருவான்!.... யார் கண்டா?.... இப்போதைக்கு என்னாலான சிறு உதவி! தினேஷின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இருந்தா கொடுங்க.'' என்று கேட்டு வாங்கிக்கொண்டார். வண்ண ஓவியத்தில், தினேஷ், 5 -ஆம் வகுப்பு, பள்ளியின் பெயர் எல்லாவற்றையும் எழுதிக் கையில் வாங்கிக் கொண்டார்.
 தினேஷுக்கு சந்தோஷமாக இருந்தது. அவனுக்குப் பசிக்கவும் செய்தது!
 "அம்மா எனக்குப் பசிக்குது சாப்பாடு போடுங்க!....'' என்றான்.
 தொடரும்....
 
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

பிஞ்சுக் கை வண்ணம் - II
பிஞ்சுக் கை வண்ணம் - I
அங்கிள் ஆன்டெனா
எறும்புகள்!
மரங்களின் வரங்கள்!: பூவரசம் மரம்