செவ்வாய்க்கிழமை 16 ஜூலை 2019

அணிலே! அணிலே! வா! வா! வா!

DIN | Published: 22nd June 2019 10:34 AM

 அணிலே ! அணிலே! வா! வா! வா! - சுவை
 ஊறும் பழம் கொண்டு தா! தா! தா!
 துணையோ டிரவு பகற்பொழுதும் - ஆடிக்
 களிப்பாய்! சுகிப்பாய்! மகிழ்வோடு!
 
 பழங்கள், விதைகள் கொட்டைகளைத் - தின்று
 பக்குவ மாக நலம் பேணும்
 வழக்கம் உனது! எமக்கில்லை! - பல
 வாரா நோய்க்கே ஆளானோம்!
 
 இரையைத் தேடல் அதிகாலை! - நிழல்
 இளைப்பாறிடுவாய் வெயிற்கோடை!
 சரியாய் மஞ்சள் மாலை வெய்யில் - கண்டு
 தாவிக் குதிப்பாய் முயல் போல!
 
 வீட்டின் கதவு சன்னல்கள் - உன்
 விளையாட் டுக்காம் மைதானம்!
 சேஷ்டை புரியும் சிறுபிள்ளை - போலுன்
 குறும்புத் தனங்கள் ஏராளம்!
 
 துணிகள் உலர்த்தும் கொடிக்கயிறு! - வான்
 தொடுவது போலும் கொடிக்கம்பம்!
 கணத்தில் தாவி மறைந்திடுவாய்! - கற்ற
 கல்விக்கூடம் தெரியலையே!
 
 தாத்தா நெற்றிச் சின்னம்போல் - திரு
 நீற்றால் தரித்த முக்கோடு!
 பார்த்தால் உனது முதுகின் மேல்! - இழை
 பட்டுப் போல அக்கோடு!
 
 வட்டமிடும் கிழப் பருந்தொன்று - உனை
 வளைத்துக் கவ்வப் பார்க்கிறது!
 சட்டென்றொளிவாய் புதர்க்குள்ளே! - உன்
 சாகசம் மனிதர் யார்க்கு வரும்?
 
 குட்டிப் பயலின் சேஷ்டைகளோ - தினம்
 கொஞ்சம் இல்லை என் வீட்டுள்!
 சுட்டி அணிலே நீ மாற்று! - இசை
 கீச்சுக் குரலால் உன் பாட்டால்!
 
 ச.கந்தசாமி
 
 
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

பிஞ்சுக் கை வண்ணம் - II
பிஞ்சுக் கை வண்ணம் - I
அங்கிள் ஆன்டெனா
எறும்புகள்!
மரங்களின் வரங்கள்!: பூவரசம் மரம்