கரப்பான் பூச்சியின் கேள்வியும் பல்லியின் பதிலும்! 

ஓர் அழகான வீடு. அந்த வீடு நெடு நாள்களாகப் பூட்டிக் கிடந்ததால், சுத்தம் செய்யப்படாமல் குப்பையும் கூளமுமாகக் கிடந்தது.
கரப்பான் பூச்சியின் கேள்வியும் பல்லியின் பதிலும்! 

ஓர் அழகான வீடு. அந்த வீடு நெடு நாள்களாகப் பூட்டிக் கிடந்ததால், சுத்தம் செய்யப்படாமல் குப்பையும் கூளமுமாகக் கிடந்தது. ஆங்காங்கே நிறைய ஒட்டடைகள். அதில், சிலந்திப் பூச்சிகள் வலை பின்னி ஊஞ்சலாடிக் கொண்டிருந்தன. கரப்பான் பூச்சிகள் பல அங்கும் இங்குமாக சுற்றித் திரிந்து கொண்டிருந்தன.
 "தடால்' என்று கதவு திறக்கும் சப்தம் கேட்டு, கரப்பான் பூச்சிகள் வேகமாக அங்கும் இங்கும் ஓடி மறைந்து கொண்டன. சிலந்திகள் உடனே தங்கள் வலையில் அழுத்தமாக உட்கார்ந்து கொண்டன.
 இரு குழந்தைளுடன் வீட்டுக்குள் நுழைந்தார் பெண்மணி ஒருத்தி. மூவரும் சேர்ந்து வீட்டைச் சுத்தம் செய்யத் தொடங்கினர். குழந்தைகள் இருவரும் ஆளுக்கொரு பூச்சி மருந்து ஸ்பிரே டப்பாவை கையில் எடுத்து கரப்பான் பூச்சிகள் இருக்கும் இடங்களைத் தேடி ஓடி... அதன் மீது மருந்தை அடித்தனர்.
 ஒரு வாரத்துக்குப் பிறகு புது வீட்டில் குடியேறிய மகிழ்ச்சியில் அந்தக் குடும்பத்தார் இருந்தனர். ஆனால், ஒரே ஒரு கரப்பான் பூச்சி மட்டும் அன்றிரவு மிகவும் சோகத்தில் செய்வதறியாது அங்கும் இங்கும் அலைந்து திரிந்தது.
 இதைப் பார்த்த ஒரு பல்லி, "ஏன் நீ இவ்வளவு வருத்தமாக இருக்கிறாய்?'' என்கிறது.
 "வருத்தப்படாமல் எப்படி இருக்க முடியும்...? இந்த வீட்டில் குடியேறியவர்கள் என் உறவினரை அழித்துவிட்டார்களே... எங்களை மட்டும் ஏன் அழிக்க நினைக்கிறார்கள்? உங்களை ஒன்றும் செய்வதில்லையே... ஏன்?''
 "அதுவா...? நீங்கள் பறக்கும் இடங்களிலும், உட்காரும் பொருள்களிலும், நீங்கள் வெளியிடும் கழிவுகளால் ஒருவித துர்நாற்றம் அடிக்கிறதல்லவா...? அதனால்தான் மனிதர்கள் உங்களை வெறுக்கிறார்கள். அதுமட்டுமல்ல காரணம், நீங்கள் மனிதர்களைக் கடித்தால் "கரப்பான்' என்கிற ஒரு நோய் வருகிறதல்லவா.... அதற்காகவும்தான் உங்களை அழிக்கிறார்கள். நாங்கள் வீட்டில் வசிப்பவர்களுக்கு எந்தவிதக் கஷ்டமும், நோயும் தருவதில்லை. அவர்களுக்கு நன்மைதான் செய்கிறோம் தெரியுமா? அதனால்தான் எங்களை அவர்கள் ஒன்றும் செய்வதில்லை...''
 "நன்மையா? அப்படி என்ன நன்மையை செய்கிறீர்கள்?''
 ""குடியிருப்பவர்களைத் துன்பப்படுத்தும் உங்களைப் போன்ற சின்னஞ்சிறு பூச்சிகளை நாங்கள் உணவாக உட்கொண்டு, அவர்களைப் பாதுகாக்கிறோம். நல்ல செய்திகளும், தீய செய்திகளும் வீடு தேடி வருவதை முன்கூட்டியே அவர்களுக்குக் கூறி, எச்சரிக்கிறோம். இப்படி நாங்கள் சொல்வதைத்தான் பஞ்சாங்கத்தில் "பல்லி சொல்லும் பலன்கள்' என்று போட்டிருக்கிறார்கள். அத்துடன், வீட்டுக்குப் புதிதாகக் குடிவருபவர்கள் பல்லிகள் நிறைய இருக்கின்றனவா என்றுதான் பார்க்கிறார்களே தவிர, கரப்பான் பூச்சிகளை அல்ல... நன்மை செய்பவர்களைத்தான் எல்லோருக்கும் பிடிக்கும்...தீமை செய்பவர்களை அல்ல... தெரிந்து கொள்'' என்றது பல்லி.
 "ஓ... அப்படியா? நீங்கள் செய்யும் நன்மைகளைப் பற்றி இப்போதுதான் தெரிந்து கொண்டேன். உன் தகவலுக்கு மிக்க நன்றி நண்பா...'' என்று கூறிவிட்டு சிலிண்டர் இடுக்கில் போய் ஒளிந்து கொண்டது கரப்பான்பூச்சி.
 -இடைமருதூர் கி.மஞ்சுளா
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com