சிறுவர்மணி

வீண்பழி!

27th Jul 2019 11:06 AM

ADVERTISEMENT

ஒரு குளத்தில் மீன்களும் தவளைகளும் ஒற்றுமையுடன் வசித்து வந்தன. கோடை காலத்தில் குளம் வற்ற ஆரம்பித்தது.
 "இதை எப்படி சமாளிப்பது?...'' என்று தவளை ராஜாவின் தலைமையில் தவளைகள் ஒன்று கூடி ஆலோசித்தன.
 முட்டாள் தவளை ஒன்று, "இந்தக் குளம் நமக்கே சொந்தம்!... ஆனால் மீன்கள் தங்களுக்குச் சொந்தம் என்று உரிமை கொண்டாடுகின்றன!... நாம் தண்ணீரைக் குடிக்கறதே இல்லை!... நம்ம வயிற்றுப் பகுதியிலே இருக்கிற தோலாலே தண்ணியைக் கொஞ்சமா உறிஞ்சிக்கிறோம்!.... ஆனால் அவைகள் நிறைய தண்ணீரைக் குடித்து விடுகின்றன! அதனால்தான் குளத்தில் நீர் குறைய ஆரம்பித்து விட்டது!'' என்று கூறியது.
 "உண்மைதான்!... மீன்களுக்குக் கொஞ்சம் இடம் கொடுத்தால் குளம் பூராவையும் ஆக்கிரமித்துக் குடித்து விடுகின்றன...'' என்றது மற்றொரு தவளை!
 "முதலில் மீன்களை குளத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டும்!.... அப்போதுதான் நாம் நிம்மதியாக இருக்க முடியும்!'' என்று முட்டாள் தவளை யோசனை சொன்னது.
 "எப்படி?''
 "நாம் அனைவரும் உரத்த குரலில் கொக்குகளைக் கூப்பிடுவோம்!... அதைக் கேட்டு கொக்குகள் இங்கு வந்துவிடும்!.... கொக்குகளுக்கு மீன் உணவு ரொம்பப் பிடிக்கும்!.... அவைகள் மீன்களை ஒழித்துக் கட்டிவிடும்!....'' என்றது முட்டாள் தவளை!
 இதைக் கேட்ட தவளை ராஜா அதிர்ச்சியும், கோபமும் அடைந்தது!
 "மீன்கள் நமது சகோதரர்கள்!.... அவைகள்தான் தண்ணீரைக் குடித்து விடுகின்றன என்பது அபத்தம்!.... பாவம்! நாமாவது நிலத்திலும், நீரிலும் சிறிது நேரம் இருக்க முடியும்!... அவைகளுக்குத் தண்ணீரை விட்டால் ஏது கதி?.... அவைகளை, கொக்குகளுக்கு காட்டிக் கொடுக்கக்கூடாது!... அது துரோகச் செயலாகும்! அதை ஒரு போதும் நான் அனுமதியேன்!....''
 "பின்னே?...எல்லாத் தண்ணியையும் அதுங்களே குடிச்சுடுதே!'' என்றது முட்டாள் தவளை!
 "நீ சும்மா இரு!... உளறாதே!.... மீன்கள் தண்ணியே குடிக்காது!.... அவைகள் தோல் மூலமாகவும், செவுள்கள் மூலமாகவும கொஞ்சம் தண்ணீரை உறிஞ்சிக்கும்!..... அது எதையாவது முழுங்க வாய் திறக்கும்போது தண்ணியை முழுங்கறா மாதிரி இருக்கும்!... அந்தத் தண்ணியெல்லாம் அதுங்களுக்கு இருக்கிற செவுள்கள் மூலமா வெளியே வந்துடும்!..... அவைகளும் நம்மைப் போலத்தான்!... நாம வயிற்றுப் பகுதயிலே இருக்கிற தோலாலே தண்ணியை உறிஞ்சிக்கறோம்!... புரிஞ்சுக்கோங்க!... குளத்திலே தண்ணி குறையறதுக்குக் காரணம் மழையில்லாததுதான்!... மழை பெய்யட்டும்!... குளம் நிரம்பட்டும்!... அதற்காக நாம எல்லோரும் பிரார்த்தனை செய்யலாம்!... நம் பிரார்த்தனைக்கு நிச்சயம் பலன் கிடைக்கும்!''
 அதன் அறிவுரையைக் கேட்டபின்பு முட்டாள் தவளையும், அதன் நண்பனும் மனம் திருந்தின. "பிரச்னையைப் புரிஞ்சுக்காம மீன்கள் மேலே வீண் பழி சுமத்திட்டேன்!...'' என்று தவளை ராஜாவிடம் மன்னிப்புக் கேட்டது!.
 எல்லாத தவளைகளும் ஒருமித்த குரலில் வானத்தை நோக்கி பிரார்த்தப் பாடல்கள் பாட ஆரம்பித்து விட்டன. அப்போ வானத்திலே கருமேகங்கள் திரண்டது! மழைத்துளிகள் உதிர ஆரம்பித்தன. சிறிது நேரத்தில் நல்ல மழை கொட்டியது! குளமும் நிரம்பியது! மீன்களும் தவளைகளும் தங்கள் பகைமையை மறந்து கூடி வாழ்ந்தன! குளத்தில் தாமரை இலைகளுடன் மலர்களும் பூத்தன!
 - பி.கனகராஜ்
 
 
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT