சிறுவர்மணி

குஜராத் மாநிலம் பற்றி அறிந்து கொள்வோமா?...

27th Jul 2019 10:34 AM

ADVERTISEMENT

கருவூலம் 
குஜராத் இந்தியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலமாகும். இம்மாநிலத்தில் தற்போது 33 மாவட்டங்கள் உள்ளன. 
இந்தியாவில் மகாராஷ்டிரத்திற்கு அடுத்து நன்கு வளர்ச்சி அடைந்த மாநிலம். வடமேற்கில் பாகிஸ்தானும், வடக்கில் ராஜஸ்தானும், கிழக்கில் மத்தியப் பிரதேசமும், தெற்கில் மஹாராஷ்டிரமும், மற்றும் மேற்கில் அரபிக் கடலும் எல்லைகளாகச் சூழ்ந்துள்ளன. இம்மாநிலம் 1,96,204 ச.கி.மீ பரப்பளவும், 1600 கி.மீ. நீளத்திற்குக் கடற்கரையும் கொண்டது! 
வரலாறு!

குஜராத் என்னும் பெயர் மத்திய ஆசியாவிலிருந்து இன்றைய குஜராத் நிலப்பகுதிக்கு குடி பெயர்ந்த "குர்ஜ்' இன மக்களிடம் இருந்து தோன்றியதாக வரலாறு. இந்நிலப்பகுதி காலப்போக்கில் ஈரானிய சக்ஸ் இனத்தவர், கிரேக்கர்கள், குப்தர்கள், மெளரியர்கள், வல்லாபி குலத்தவர், பிரந்திகா குல அரசர்கள், சோலங்கி குல அரசர்கள், டில்லி சுல்தான்கள், மொகலாயர்கள், மராட்டிய மன்னர்கள், ஆங்கிலேயர்கள் என பலராலும் ஆட்சி செய்யப்பட்டது. 
கி.பி. 1024 - 25 - இல் கஜினி முகம்மது இப்பகுதி மீது 17 முறை படையெடுத்து சோமநாதபுரம் கோயில் செல்வங்களை கொள்ளையடித்துச் சென்றார். 
செளராஷ்டிர மாகாணம் (1948 -1956) 
1947 - இந்திய விடுதலைக்குப் பின் இந்திய அரசு, இந்நிலப்பகுதியில் இருந்த பெரிய, மற்றும் பல சிறிய சுதேசி சமஸ்தானங்களை ஒன்றிணைத்து செளராஷ்டிர மாகாணம் என 1948, பிப்ரவரியில் உருவாக்கப்பட்டது. பின்னர் 1956 - இல் செளராஷ்டிர மாகாணம் கலைக்கப்பட்டு, பம்பாய் மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. அதன் பின் 1960 - ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டபோது செளராஷ்டிரா பகுதி புதிதாகத் தொடங்கப்பட்ட குஜராத் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. 
குஜராத் மாநிலத்தின் தலைநகராக "அகமதாபாத்' நகரம் தேர்வு செய்யப்பட்டது. பின் 1970 - இல் தலைநகரம் காந்தி நகருக்கு மாற்றப்பட்டது. 
புவியியல்!
புவியியல் ரீதியாக பன்முகத் தன்மை கொண்ட அம்சங்களை குஜராத் மாநிலம் பெற்றிருக்கிறது. "கட்ச்' வளைகுடா பகுதியின் உப்புச் சதுப்பு நிலப்பகுதி, அழகிய கடற்கரைகள், சாத்புரா மற்றும் கிர்னார் மலைகள் மற்றும் அதைச் சார்ந்த இயற்கை எழில் மிக்க பகுதிகள் போன்றவை குஜராத்திற்கு ரம்மியமான அழகை வாரி வழங்கியுள்ளது. 
காம்பே வளைகுடா!

ADVERTISEMENT

குஜராத் மாநிலத்தின் தென்மேற்குப் பகுதியில் தெற்கு குஜராத்தையும் கிழக்கு குஜராத்தையும் பிரித்து காம்பே என்னும் நிலப்பரப்பில் நீண்டு நுழைந்திருக்கும் வளைகுடா ஆகும்! இவ்வளைகுடா 200 கி.மீ. நீளமும், தெற்குப் பகுதியில் 70 கி.மீ. அகலமும் வடக்குப் பகுதியில் 20 கி.மீ. அகலமும் கொண்டது. 
இவ்வளைகுடா ஆழமில்லாமல் இருப்பதால் மணல் திட்டுகள் அதிகமாகக் காணப்படுகின்றன. காம்பே வளைகுடாவில்தான் நர்மதை ஆறும், தபதி ஆறும் கலக்கின்றன. ஆற்று முகவாய்களில் உள்ள மணல் திட்டுகள் அரபிக் கடல் வாயிலில் உள்ள மலாக்கா திட்டுகளும் நன்கு அறியப்பட்டவை. 
மேலும் இந்த வளைகுடா பகுதி அலை ஏற்றத்தாழ்வுகள் அதிகம் கொண்டவை. இதைக் கருத்தில் கொண்டே "ஆலாங்க் கப்பல் உடைக்கும் ஆலை' இங்கு நிறுவப்பட்டுள்ளது. பெரும் கப்பல்கள் மாதம் இருமுறை ஏற்படும் உயர் அலைகளின்போது கடற்கரையருகே கொண்டு வரப்படுகின்றன. அலைகள் பின்வாங்கும்போது அவைகள் உடைக்கப்படுகின்றன. 
இந்தப் பகுதி பழங்காலம் முதலே முக்கிய வணிகத் தலமாக இருந்து வருகிறது. பரூச், சூரத், காம்பத், பாங் நகர், மற்றும் டாமன் ஆகியவை வரலாற்று சிறப்பு மிக்க துறைமுகங்களாகும். 
"கட்ச்' வளைகுடா!
மேற்கு கடலான அரபிக்கடல், கட்ச், பகுதியில் நீண்டு நுழைந்திருப்பதால் இந்நீர்ப் பரப்பினை கட்ச் வளைகுடா என்கின்றனர். 99 மைல் நீளம் கொண்ட இதன் அதிகப்படியான ஆழம் 401 அடி ஆகும். கோமதி ஆறு கட்ச் வளைகுடாவில் துவாரகை என்னும் இடத்தில் கலக்கிறது. 
கத்தியவார் தீபகற்பம்!
செளராஷ்டிர தீபகற்பம் என்றும் அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் "ஹரப்பா' மற்றும் "மொஹஞ்சதாரோ' நாகரீகமாகிய சிந்து சமவெளி நாகரீகச் சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 
இத் தீபகற்பப் பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் 217 சமஸ்தானங்களை உள்ளடக்கியிருந்தது. எனவே, வரலாற்று காலத்தைச் சேர்ந்த பல உன்னதமான நினைவுச் சின்னங்கள் மற்றும் மாட மாளிகைகளை இந்தப் பிரதேசம் கொண்டிருக்கிறது.
இதிகாச புராணங்களில் கூறப்படும் பாரத தேசத்தின் 56 தேசங்களில் செளராஷ்டிர தேசமும் ஒன்றாகும். 
கட்ச் தீபகற்பம்!
கட்ச் தீபகற்பம் முழுமையாக கட்ச் மாவட்டமாக உள்ளது. இந்திய - பாகிஸ்தான் எல்லையோரத்தில் கட்ச் வளைகுடா பகுதியில் உள்ள மாவட்டம். 45, 652 ச.கி.மீ. பரப்பளவு கொண்டது. கட்ச் மாவட்டம் இந்தியாவின் மிகப் பெரிய மாவட்டம்!
கட்ச் உப்புப் பாலைவனம்! 
கட்ச் மாவட்டத்தைச் சுற்றியுள்ள பெரும்பாலான பகுதிகள், மழைக்காலத்தில் சதுப்பு நிலங்களாகவும், மற்ற காலங்களில் வறண்ட நிலங்களாகவும் உள்ளதால் இப்பகுதி "ராண் ஆஃப் கட்ச்' என அழைக்கப்படுகிறது. ராண் என்ற குஜராத்தி சொல்லுக்கு பாலைவனம் என்று பொருள். இதுவே உலகின் பெரிய உப்புப் பாலைவனம். இது 10, 600 சதுர மைல் பரப்பு கொண்டது! இங்கு நடைபெறும் உப்பு உற்பத்தி 135 லட்சம் டன்! 
இப்பகுதியில் புல்வெளிப் பகுதியும் ஏராளமாக உள்ளன. எனவே இங்கு கால்நடை வளர்ப்பு, மற்றும் பால் உற்பத்தி சிறப்பாக நடைபெறுகிறது. 
கட்ச் வனவிலங்கு சரணாலயங்களும் வன உயிரினங்களின் பாதுகாப்புக் காடுகளும்!
. கட்ச் பாலைவன விலங்குகள் காப்பகம்
. காட்டுக் கழுதைகள் காப்பகம்
. கட்ச் பஸ்தர் வனவிலங்குகள் காப்பகம்
. பன்னி புல்வெளி காப்புக் காடுகள்
. சாரி - தந்து சதுப்பு நிலக் காப்புக் காடுகள்
. கட்ச் காட்டு மயில்கள் சரணாலயம்
. இந்தியாவின் முப்படைகளின் மையங்களும் இங்குள்ளது.
குஜராத் மாநில சுற்றுலாத் தலங்கள்!

இம்மாநிலம் அதன் இருப்பிடத்திற்காகவும், வெகு ஆழமான இந்திய பாரம்பரிய மரபு மற்றும் கலாச்சாரத்துக்காகவும் புகழ் பெற்று விளங்குகிறது. இந்திய வரலாற்றில் மிக நீண்ட காலமாகவே வாணிபம், கலாச்சாரம் போன்றவற்றின் கேந்திரமாக இருந்து வந்துள்ளது. தேச பிதா மஹாத்மா காந்தியும் சர்தார் வல்லபாய் படேலும். இம்மண்ணில் பிறந்தவர்கள் என்பது இந்த மாநிலத்தின் மற்றொரு தனிப் பெருமையாகும்!
"ராஸ்' மற்றும் "கர்பா' போன்ற கலாச்சார விழாக்கள் இங்கு பிரபலம்!
கடற்கரைகள்
மேற்குத் தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியான "சஹயாத்தி' மலைகள், கம்பீரமான சரிவுகள், ஆரவல்லி மற்றும் சாத்புரா மலைத்தொடர்கள் எழில் தோட்டங்கள், காடுகள் போன்ற நில அமைப்பைக் கொண்டு விளங்கும் கட்ச் தீபகற்பப் பகுதி குஜராத்தை சுவாரசியமான சுற்றுலா பூமியாக மாற்றியுள்ளது. 
தித்தால் எனும் கருப்பு மணற்கடற்கரை, மாணடலி பீச், சோர்வாட் பீச், சோம்நாத் பீச், துவாரகா பீச், போர்பந்தர் பீச் என்று ஏராளமான அழகுக் கடற்கரைகள் குஜராத் மாநிலத்தில் நீண்டு உள்ளன. 
புனித யாத்திரை ஸ்தலங்களும் ஏராளமாக உள்ள மாநிலம் இது. கிர் தேசிய பூங்கா, வன்ஸ்தா தேசிய பூங்கா, வெராவதார் பிளாக்பக் தேசிய பூங்கா, நாராயண் சரோவர் காட்டுயிர் சரணாலயம், தொல் ஏரி பறவைகள் சரணாலயம் என பல வன உயிரின சரணாலயங்களும் உள்ளன. 
சோமநாதபுரம் - சோமநாதர் ஆலயம்!


குஜராத் மாநிலத்தின் தென்மேற்குக் கரையில் கிர் சோம்நாத் மாவட்டத்தில் பிரபாசப் பட்டினக் கடற்கரையில் சோமநாதபுரம் சிவன் கோயில் அமைந்துள்ளது. இது இந்தியாவில் உள்ள 12 ஜோதிர் லிங்கத் தலங்களில் முதன்மையானது. இங்குள்ள அம்மன் சன்னதி 51 சக்தி பீடங்களில் ஒன்று.
மன்னராட்சி காலத்தில் இவ்விடத்தில் இருந்த ஆலயம், கஜினி முகம்மது, அலாவுதீன் கில்ஜி, ஒளரங்கசீப் உள்ளிட்ட மன்னர்களால் ஆறு முறை அடியோடு இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் இந்து மன்னர்களால் மீண்டும் கட்டப்பட்டது.
அவ்வகையில் 7 ஆவது முறையாக 1951 - இல் அப்போது உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் பெரு முயற்சியால் மறு நிர்மாணம் செய்ய அஸ்திவாரக்கல் நடப்பட்டது. ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு 1995 - ஆம் ஆண்டு பொது மக்களின் வழிபாட்டிற்குத் திறந்து விடப்பட்டது!
கல்லாலான இந்த கோயில் சாளுக்கியர்களின் கட்டடக் கலை பாணியைத் தழுவிக் கட்டப்பட்டுள்ளது. 50 அடி உயர கோபுரத்துடன் மிக கம்பீரமாக உயர்ந்து நிற்கும் இக்கோயிலின் சுவர்களில் நுண்ணிய சிற்ப வேலைப்பாடுகள் காணப்படுகின்றன.
தொன்மையான புராணமான ஸ்கந்த புராணத்திலும், பாகவதத்திலும் மகாபாரதத்திலும் இத்தலம் பற்றிய தகவல்கள் உள்ளன. 
தொடரும்.....
தொகுப்பு : கே.பார்வதி, 
திருநெல்வேலி டவுன்.

ADVERTISEMENT
ADVERTISEMENT