சிறுவர்மணி

 இயற்கையின் நுரை வளம் உசிலை மரம்

27th Jul 2019 10:51 AM

ADVERTISEMENT

மரங்களின் வரங்கள்!
என்ன குழந்தைகளே நலமாக இருக்கிறீர்களா,
 நான் தான் உசிலை மரம் பேசறேன். என்னை அரப்பு, கருவாகை, ஊஞ்ச, சீக்கிரி, துரிஞ்சில் என வேறு பெயர்களிலும் அழைப்பாங்க. என் தாவரவியல் பெயர் அல்பீஸியா அமரா. நான் பாப்பேசியே குடும்பத்தைச் சேர்ந்தவன். குளியலுக்காகவும், கேசப் பராமரிப்புக்காவும் இயற்கை செய்து கொடுத்துள்ள அற்புத மரம் தான் நான். சீயக்காய் என்பது வேறு. சீயக்காய் தமிழ்நாட்டு சீதோஷ்ண நிலைக்கு சரியாக வளராது. ஆனால், தமிழகத்தில் காலங்காலமாக சீயக்காய்க்கு மாற்றாக உசிலை அரப்பு பயன்படுத்தப்பட்டு வருகிறது. நான் ஏரி, குளங்கள் போன்ற நீர்நிலைப் பகுதிகளில் அதிகமாகக் காணப்படுவேன். நான் கடுமையான வறட்சியையும் தாங்கி வளருவேன். நான் அதிக கிளைகளுடன் அடர்ந்து வளருவதால் உங்களுக்கு நிழல் தருவேன். காற்றுத் தடுப்பானாகவும், மண் அரிமானத்தைத் தடுக்கும் மரமாகவும் நானிருக்கேன். என்னை விறகாகவும் பயன்படுத்தலாம். அரப்பு என்பது தமிழக மக்கள் தங்கள் தலையிலுள்ள அழுக்கை நீக்கப் பயன்படுத்தும் ஒரு பச்சை நிற குளியல் பொருளாகும். என் இலையைக் காய வைத்து அரைத்துப் பெறுவதால் அரைப்பு என்று சொல்லி, அது அரப்பு என்று மருவியிருக்கலாம்.
 குழந்தைகளே, அரப்பு தேய்த்துக் குளிப்பது, நாகரிக உலகில் ஒவ்வாத செயல் என்று நினைக்கறீங்க. அது தவறு. தலையில் எண்ணெய் தேய்த்து, அரப்புத் தூள் போட்டு முடியை அலசி விட்டுத் தலையைத் துவட்டினால் உடல் குளிர்ந்து ஜில்லென்று புத்துணர்ச்சி பெறும். பல ஆண்டுகளாக உங்கள் தாத்தா, பாட்டிகள் இம்முறையைத் தான் கடைபிடித்து வந்தாங்க. சோப்பும், ஷாம்பும் நுழைந்த பிறகு சனி நீராடு என ஒளவை பாட்டி சொன்னதை நீங்க மறந்துட்டீங்க. எண்ணெய்க் குளியலை மறந்த பிறகு உடல் சூடு அதிகமாகி விட்டது. இரசாயன ஷாம்பூவால் முடி உதிர்தல், நரை முடி, தலை வழுக்கை உள்பட பல இன்னல்களுக்கு ஆளாகி வருகிறோம்.
 ஏப்ரல் மாதத்தில் என்னிடம் நிறைய இலைகள் இருக்கும். மே மாதத்தில் பூத்து குலுங்குவேன். என் இலையை நிழலில் உலர்த்தி, தூசுளை அகற்றிப் பொடியாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பொடியை அப்படியே தலைக்குத் தேய்த்துக் குளிக்கலாம். ஆவாரம் பொடியுடன் அரப்புப் பொடியைச் சேர்த்துக் குளித்தால் பேன், பொடுகு பிரச்னை தீரும். கிராமப்புற பெண்கள் தங்களை கூந்தலை பராமரிக்க என்னை பெருமளவில் பயன்படுத்தறாங்க. முடிஉதிர்தல் அறவே இருக்காது. என் இலை, பூக்கள் தீக்காயங்கள் மற்றும் புண்களைக் குணப்படுத்தவும் பயன்படுகின்றன. என் இலைகள் கால்நடைகளுக்கு நல்ல தீவனமாகவும், மண்ணுக்கு சிறந்த தழைச்சத்து உரமாகவும் பயன்படுகிறது. பொடுகு தொல்லையால் அவதிக்குள்ளாகியிருப்பவர்கள் என் இலைகள் வரப்பிரசாதம். இயற்கை விவசாயத்தில் பயன்படுத்தப்படும் அரப்பு மோர் கரைசல் என் இலைகளிலிருந்து தான் தயாரிக்கப்படுகிறது. இதில் ஜிப்ராலிக் அமிலம் உள்ளது. இது சிறந்த வளர்ச்சி ஊக்கி என்பதால், இந்தக் கரைசல் தெளித்த பயிர்களின் வளர்ச்சி அமோகமாக இருக்கும். பூக்கள் பிடிக்கும் சமயத்தில் இதைத் தெளித்தால் அதிகப் பூக்கள் பிடிக்கும்.
 மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியில் நான் அதிகமாகக் காணப்பட்டேன். அதன் காரணமாகவே உசிலம்பட்டி என்று அந்த ஊருக்குப் பெயர் உருவாகியது. மதுரை, தேனி மாவட்ட மக்கள் பேச்சு வழக்கில் என்னை உசிலையரப்புன்னு சொல்வாங்க. நான் இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி, அரு;ள்மிகு வனப்பேச்சி அம்மன் திருக்கோவிலில் 200 ஆண்டு காலமாக இருக்கிறேன்.
 உலகில் அதிக மதிப்புக்கும், மரியாதைக்கும் உரியவை மரங்கள் தான். சுற்றுச் சூழலை சுத்தப்படுத்தி மழையீர்ப்பு மையங்களாக திகழும் மரங்களை அழித்தால் பூமி வெப்பமயமாகும். உயிரினங்களுக்கு ஆயுள் தரும் ஆக்சிஜனை வெளியிடும் மரங்கள் தான் 24 மணி நேரமும் சமூகப் பணியாற்றுகின்றன. நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.
 (வளருவேன்)
 - பா.இராதாகிருஷ்ணன்
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT