சிறுவர்மணி

நினைவுச் சுடர்!: தவறுக்காக வருந்தியவர்

6th Jul 2019 01:48 PM | -நெ.இராமன்

ADVERTISEMENT

நாகர்கோயிலுக்கு அருகிலுள்ள ஒரு சிறிய கிராமம் ஒழுகினசேரி. அங்கு ஏறத்தாழ 75 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி இது.

நல்லது-கெட்டது என்பதை அறியாத இளம் சிறுவன் ஒருவன் தெருவில் போவோர் வருவோர் மீதெல்லாம் சின்னஞ்சிறு கற்களை வீசி எறிந்து விளையாடிக் கொண்டிருந்தான். கல்லடிபட்டவர் யார் நம்மை அடித்தார் எனத் திரும்பிப் பார்ப்பதற்குள்  ஓடி ஒளிந்து கொள்வான். கல்லடி பட்டவர்களின் துன்பம்  கண்டு ஒளிந்திருந்து சிரித்து, மகிழ்வது அவன் வழக்கம். 

ஒரு நாள் வயதான சந்நியாசி ஒருவர் அந்தத் தெரு வழியாகச் சென்றார். சிறுவன் வழக்கம்போல் அந்த முதியவர் சந்நியாசி என்றும், வயதில் மூத்தவர் என்பதையும் பார்க்காமல் அவர் மீதும் அவன் கல்லை எறிந்தான். கல் அவரது தலையில் வேகமாகச் சென்று தாக்கியது. உடனே அவர் தலையில் ரத்தம் பெருகி வழிந்தது.

இதை மறைந்திருந்து பார்த்த அந்தச் சிறுவன் ரசிக்கவில்லை, சிரிக்கவுமில்லை, ஓடவும் இல்லை. மறைவிலிருந்து வெளியே வந்து தேம்பித் தேம்பி கண்களை கசக்கிக் கொண்டே அழுதபடி வந்தான்.

ADVERTISEMENT

சந்நியாசி சிறுவன் அருகில் சென்றார். அவன் முதுகில் தட்டிக் கொடுத்து, ""எனக்குக் காயம் பட்டது இருக்கட்டும். நீ செய்தது தவறு என்று உனக்கே தெரிந்திருக்கிறது. அதனால்தான் நீ செய்த தவறுக்காக வருந்தி அழுகிறாய். அதுவே எனக்குப் போதும். நான் உனக்கு வேறு ஏதும் தண்டனை தரத்தேவையில்லை. இனி நீ தவறு செய்யமாட்டாய். எவன் ஒருவன் தன் தவறுக்காக வருந்துகிறானோ அவன் மிகபெரிய சாதனையாளனாக இருப்பான்.  எதிர்காலத்தில் எல்லோருக்கும் நல்லவனாக, உதவி செய்பவனாக நீ வாழப் போகிறாய். தம்பி, எதிர்காலத்தில் நீ புகழ் பெற்று வாழ்வாய்!'' என்று ஆசிர்வதித்துவிட்டு சென்றார்.

அடுத்தவர் மீது கல் எறியும் இப்படியொரு செயலை சிறுவனாக இருந்தபோது செய்தவர் வேறு யாருமல்ல... கலையுலகில் ஒரு கலங்கரை விளக்கம் போல் பீடுநடை போட்ட நகைச்சுவை மன்னன் "கலைவாணர்' என்.எஸ்.கிருஷ்ணன்தான்!

இயல்பிலேயே நாத்திகரான என்.எஸ்.கிருஷ்ணன்,  அந்த சந்நியாசியின் ஆசீர்வாதத்தால்தான் திரையுலகம் மட்டுமல்ல உலகமே போற்றும் நகைச்சுவைக் கலைஞராக வலம் வந்தார்.

பெரியவர்களின் ஆசீர்வாதம் எத்தகைய தீய மனிதரையும் நல்வழிப்படுத்தி, சிறந்த மனிதராக்கும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT