டெய்லர் பொன்னுசாமி!

இடம் தையல் கடை, (வீட்டின் முன்புறம் தான் தையல்கடை) மாந்தர் - தையல்காரர் பொன்னுசாமி, அவர் மனைவி மல்லிகா, குழந்தைகள் பாஸ்கர்
டெய்லர் பொன்னுசாமி!

அரங்கம்
காட்சி 1
இடம் தையல் கடை, (வீட்டின் முன்புறம் தான் தையல்கடை) மாந்தர் - தையல்காரர் பொன்னுசாமி, அவர் மனைவி மல்லிகா, குழந்தைகள் பாஸ்கர், ,பாமா, காலம் மாலை ஐந்து மணி தையல்காரர் பொன்னுசாமி: "மல்லிகா..இங்கே கொஞ்சம் காடா பீஸ் வச்சிருந்தேனே பார்த்தியா..'
மல்லிகா : நான் தான் இட்லி துணிக்கு எடுத்து வச்சிருக்கேன்.
பொன்னுசாமி: அதுக்கு அவ்வளவு தேவையில்லே, கொண்டுவா, நறுக்கிக்கிட்டு தர்றேன்.. அதில் நாலு துணிப்பை தைச்சு மக்களுக்குத் தரலாம்.
மல்லிகா: ஆமாம் பெரிய வள்ளல் நீங்க. நமக்கே தினம் தூத்தி அம்பது இருநூறுக்கு வழியில்லே. இதிலே தானம் வேறே. பெரிய சமூக சேவை!...இருபது வருஷமா செய்யறீங்க,.....என்ன பலன்..., அப்படியே பட்டத்தைத் தூக்கித் தரப்போறாங்க. சுமக்க முடியாம தூக்கி வரப் போறீங்க.
பொன்னுசாமி: அப்படிச் சொல்லாதே மல்லிகா. இன்னிக்கு பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றுத் துணிப்பைகள் தான். மிச்சம் மீதி விழும் துணியில் தானே தைச்சுத் தர்றேன். பைக்கு காடா, லைனிங் துணி மிச்சத்தை ஒட்டுப் போடுவேன்.
காதுகளுக்கு தடிமனான பேண்ட் துணி பிட்டுகள். நீண்ட நாளைக்கு உழைக்கும்.
மல்லிகா: பை ஒண்ணு பத்து ரூபான்னு வித்தா பணமாவது தேறும்.
பொன்னுசாமி: அந்தக் காலத்தில் திருமண நிகழ்ச்சி முடிவில் வெளியே வரும்போது பெண் மாப்பிள்ளை பெயர் அச்சிட்டு தேங்காய் அல்லது சாத்துக்குடி போட்டு மஞ்சள் பை தருவாங்க. இப்போ பிளாஸ்டிக்கா மாறிடுச்சு. பிளாஸ்டிக் அழியாத தன்மை உடையது..மக்காது என அன்றே நான் யூகித்து பிளாஸ்டிக் பை வேண்டாம்... துணிப்பை தான் மக்கள் பயன்படுத்தனும்ன்னு சொல்லிக்கிட்டே இருந்தேன். மக்கள் யாரும் காதில் வாங்கலே. இன்னிக்கு அரசாங்கம் கடுமையான சட்டத்தால் பிளாஸ்டிக் பைகளை ஒழிக்க முயலுது.
(அப்போது பொன்னுசாமி மகன் பாஸ்கர் பள்ளியில் இருந்து வந்து கனமான
புத்தகப்பையை ஓரமாக வைத்து விட்டு)
பாஸ்கர்: அப்பா இன்னிக்கு வகுப்பில் மிஸ் ஒரு கேள்வி கேட்டாங்க. சாதரண தையல் ஊசியில் காது பின்னால் இருக்கும். தையல் மெஷின் ஊசியில் முன்னால் இருக்கும். இதைக் கண்டுபிடிச்சது யார்ன்னு கேட்டாங்க. உங்களுக்கு விடைதெரியுமா?....
பொன்னுசாமி: (சிரித்துக்கொண்டே) சரியான கேள்வி. ஒரு கனவில் தான் அந்த ஊசி வடிவம் கிடைத்தது தெரியுமா,... 1800 ஆண்டு வாக்கில் பலரும் தையல் இயந்திர ஊசி வடிவத்தை அமைக்கத் திணறினர். காது பின்னால் இருக்கும் வடிவில் நூல் கோர்த்துத் தைப்பதில் சிரமம் இருந்தது.
பாஸ்கர்: அப்புறம் யார் தான் விடை கண்டு பிடிச்சாங்க?...
பொன்னுசாமி: அமெரிக்கவில் எலியஸ் ஹோவே என்பவர் சதா இதையே சிந்தித்துக் கொண்டிருந்தார். ஒரு நாள் அவர் தூக்கத்தில் ஒரு கனவு கண்டார். அந்தக் கனவில் காட்டு வாசிகள் இவரைக் கொல்லத் துரத்துவது போலவும் இவர் ஓடுவது போலவும் கனவு. அவர்கள் கையில் ஈட்டி பிடித்திருந்தனர். அந்த ஈட்டிமுனை கூர் பாகத்தில் ஒரு ஓட்டை இருந்தது. எலியஸ் ஹோவே, "ஆஹா!, விடை கிடைத்துவிட்டது!'என்று கத்தி டக்கென விழித்துக் கொண்டார். 
பாமா: என்னப்பா அது?
பொன்னுசாமி: தையல் ஊசியின் காது ஒட்டை பின்னால் இல்லாமல் முன்னால் வைப்பதைத்தான், இதோ பாருங்கள் இந்த தையல் இயந்திர ஊசியில் ஓட்டை எங்கே இருக்கு?...
பாஸ்கர்: ஆமாம் பின்னால் இல்லாமல் முன்னால் தான்
மல்லிகா: பசங்களா ..போதும் பொது அறிவு, போய் வீட்டுப் பாடம் எழுதுங்க...
(பொன்னுசாமி தொடர்ந்து தைக்கிறார் ).

காட்சி 2
இடம் - மாவட்ட ஆட்சியார் அலுவலகம், மாந்தர் - மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் மற்றும் பிற அதிகாரிகள்

கலெக்டர் மதுசூதனன்: பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகள் எந்த அளவில் இருக்கு ?
தாசில்தார்: உணவகங்கள் எல்லவற்றுக்கும் பிளாஸ்டிக் பை கள் பயன் படுத்த தடை விதித்து மீறினால் அபராதம் என எச்சரித்துள்ளோம்.
மாநகர சுகாதார அதிகாரி - பிளாஸ்டிக் பைகள் பயன் படுத்தும் கடைகள், எல்லாவற்றிலும் சோதனை செய்து பல டன் பிளாஸ்டிக் பைகளைக் கைப்பற்றி இருக்கிறோம்.
கலெக்டர் : சரி இது நாள் வரை மக்கள் பிளாஸ்டிக் பைகளைப் பயன் படுத்தி சுகம் கண்டுவிட்டார்கள். அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தணுமே...
தாசில்தார்: ஹோட்டல்களில் பார்சல் வாழை இலையில் கட்டுகிறார்கள். மக்கள் எடுப்பு சாப்பாட்டுக்கு அந்தக் காலம் போல் டிபன் கேரியர் எடுத்து வர ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் இல்லத்தரசிகளும் வீட்டில் வேலை செய்பவர்களும் பாத்திரம் கழுவ வேண்டுமே.... சாப்பிட்டோமா, தூக்கி எறிந்தோமா என இல்லையே என ஆயாசப் படுகிறார்கள்.
கலெக்டர்: பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மக்களிடம் தானாக வர வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய கமிட்டி அமைப்போம். யாரைத் தலைவராகப் போடலாம்?....
தாசில்தார்: சார் நம்ம ஊரில் டெய்லர் பொன்னுசாமி இருபது வருஷமா துணிப்பைகளை இலவசமா மக்களுக்குத் தந்து தொண்டாற்றி வருகிறார். ஆவர் தொண்டு விளம்பரமின்றிஅமைதியாக ஓசையின்றி நடக்குது. அவர் தான் பொருத்தமானவர்!
கலெக்டர்: பலே! நாளைக் காலை அவரை நான் அழைத்தேன் எனக் காரில் அழைச்சு வாங்க!....

காட்சி 3
இடம் - டெய்லர் பொன்னுசாமி இல்லம், மாந்தர் - கலெக்டரின் கார் டிரைவர், பொன்னுசாமி, மல்லிகா, பாஸ்கர் பாமா, காலம் - காலை ஒன்பது மணி

(வாசலில் மூவண்ணக் கொடியுடன் அரசு வாகனம்....அதிலிருந்து டிரைவர் இறங்கி வருகிறார்...)
கார் டிரைவர்: அம்மா! டெய்லர் பொன்னுசாமி சார் வீடு இது தானா?
மல்லிகா : யாரு நீ ங்க?.... என்ன வேணும்?...அவர் குளிச்சுக்கிட்டு இருக்கார்.
டிரைவர் : சரிம்மா! அவர் வரும் வரை நான் வெளியே நிக்கறேன்
மல்லிகா : உள்ளே வந்து உட்காருங்க. டீ சாப்பிடுங்க.
(ஒரு நாற்காலியைக் காட்ட டிரைவர் அமருகிறார்)
டிரைவர் : மாவட்ட ஆட்சியர் பிளாஸ்டிக் ஒழிப்பு கமிட்டி அமைச்சிருக்கார் உங்க
கணவர் பொன்னுசாமி பல காலமா பிளாஸ்டிக்கை ஒழிக்கணும்.... மக்கள் துணிப்பை பயன்படுத்தணும்ம்னு பை தைச்சி தந்தாரே. அவரைத் தலைவரா அந்தக் கமிட்டிக்கு போட கலெக்டர் முடிவு பண்ணிட்டார்.
மல்லிகா: (விழிகள் வியப்பால் விரிய) நெஜம்மாவா,? என்னங்க சீக்கிரம் வாங்க.....கலெக்டர் உங்களைக் கூப்பிட்டு அனுப்பி இருக்கார்!
(பொன்னுசாமிதலையத் துவட்டியபடி வரும்கிறார்)
பொன்னுசாமி: என்ன மல்லிகா ? என்ன விஷயம் ?
டிரைவர் : ஐயா வணக்கம்.... பிளாஸ்டிக் ஒழிப்பு கமிட்டிக்கு ஆலோசனை வழங்க மாவட்ட ஆட்சியர் ஒரு குழு அமைச்சிருக்கார். உங்களை தலைவரா நியமிக்க அதிகாரிகள் சிபாரிசு பண்ணி இருக்காங்க
பொன்னுசாமி: என்னை எப்படி அவங்களுக்குத் தெரியும் ? எனக்கு வெளிப் பழக்கம் கிடையாதே....
டிரைவர் : நீங்க போகாத இடங்களில் உங்க துணிப்பை போவுதே. அதிகாரிகள் வீட்டில் வேலை செய்பவர்கள் பல காலம் பயன் படுத்தும் துணிப்பைகள் நீங்க இலவசமா தந்ததுன்னு தெரிஞ்சு கலெக்டர் உங்க தொண்டை கண்டுபிடிச்சிட்டார். வாங்க போகலாம்
பொன்னுசாமி : இதோ ஒரு நிமிஷத்தில் வர்றேன்....
(பொன்னு சாமி காரில் அமர்ந்ததும் வாசலில் நிற்கும் குழந்தைகள் குதூகலத்துடன் கை அசைக்க அவர் மனைவி மல்லிகா தலையைச் சுற்றி திருஷ்டி கழிக்க பொன்னுசாமி சிரிக்கிறார். கார் நகர்கிறது)
(திரை)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com