அரங்கம்: பரிசு

ம்மா .. என்னோட தொப்பியை எங்காவது பார்த்தீங்களா ?
அரங்கம்: பரிசு

காட்சி : 1
நேரம் : காலை எட்டு மணி.
இடம் : ஆகாஷீடைய வீடு
மாந்தர் :  ஆகாஷ் ,  அம்மா,  அப்பா.
(ஆகாஷ்  அங்கும் இங்கும் நடக்கிறான்.) 

ஆகாஷ்  : ம்மா .. என்னோட தொப்பியை எங்காவது பார்த்தீங்களா ?
அம்மா : ( வழிபாட்டு அறையிலிருந்து) சின்ன டேபிள் மேல பாரு ..
ஆகாஷ்  : ம்மா .. இங்கதான் வெச்சிருந்தேன், சூப்பர் கிங்ஸ் ஜெர்ஸியைக் காணோம் ..
அம்மா :  ( குரல்) அப்பாவோட ஹேங்கர்ல இருக்கும்.
ஆகாஷ்  : என்னமா இது.. வொயிட் ஷூ பெட்டி காலியா இருக்கு ..
அம்மா : ( குரல்) அடாடடடா.. இந்த வீட்ல கொஞ்ச நேரம் நிம்மதியா சாமி கும்பிட முடியுதா .. வெளிய பாருடா.. கழுவி காயவெச்சிருந்தேன் ..
(அப்பா வருகிறார்.)

அப்பா : பையனை ஏன் கடிஞ்சிக்கிற?
அம்மா : ( குரல்) அஞ்சு நிமிஷம் என் நிலையில இருந்து பாருங்க,  தெரியும் ..
ஆகாஷ்  ஷூ எடுத்துவந்து அணிகிறான்.
ஆகாஷ்  : அப்பா,  சாப்பிட்டு கிளம்ப டைம் ஆயிடும் .. என்னை விளையாட்டுத் திடல்ல ட்ராப் பண்ணிடறீங்களா ?
அப்பா : ம்ம்ம்..  சரி,   எந்தப் போட்டியில கலந்துக்கப் போறே?
ஆகாஷ்   : எல்லாத்துலயுமே-ப்பா..
அப்பா : நெஜமாலுமா?
ஆகாஷ் : ஆமாம்பா.. சாயங்காலம் வரும்போது எத்தனை பிரைஸ் கொண்டுவரேன்னு பாருங்க .
(அம்மா வருகிறார்.)

அம்மா : வெரி குட் ..
(ஆகாஷின் நெற்றியில் விபூதி வைக்கிறார்.) 

 
காட்சி : 2
நேரம் : காலை ஒன்பதரை மணி.
இடம் : விளையாட்டுத் திடல்,  முகப்பு.
மாந்தர் :  மகேந்திரன் , ராமமூர்த்தி , ஆகாஷ்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு நமது கிராமத்துச் சிறுவர்-சிறுமியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவிருக்கின்றன. 
அனைவரும் வாரீர் !
நல் ஆதரவு தாரீர் !                                                                                          
இடம் : விளையாட்டுத் திடல்
நாள் : 15. 1. 2019.
என்ற அறிவிப்போடு கூடிய பலகை இருந்தது.

மகேந்திரன்  :  (திறன்பேசியில் ) சாயங்காலம்தான் பிரைஸ் கொடுப்போம்..எக்ஸ்ட்ரா சேர் ஒதுக்கி வெச்சுருங்க .. தேவைப்பட்டா எடுத்துக்கலாம். ஓ.கே. வெச்சிர்ரேன்.
(ராமமூர்த்தி வருகிறார்.)

ராமமூர்த்தி : என்ன,  மகேந்திரன்.. போட்டியெல்லாம் ஆரம்பிச்சாச்சா.. ?
மகேந்திரன் : வாங்க சார்.. இன்னும் கொஞ்ச நேரத்துல தொடங்கிர்லாம். நல்லபடியா நடக்கணும்.. அப்றம்,  ரொம்ப தேங்க்ஸ் சார் ..
ராமமூர்த்தி : எதுக்குப்பா?
மகேந்திரன் : தலைமை தாங்கி பரிசு கொடுக்க ஒத்துகிட்டதுக்கு...
ராமமூர்த்தி : அட,  இதுல என்னப்பா இருக்கு!
மகேந்திரன் : சார்,  அப்படியே பரிசு பெற்றவங்களப் பாராட்டி சின்னதா ஒரு உரை கொடுத்தீங்கனா நல்லாயிருக்கும் ...
ராமமூர்த்தி : கண்டிப்பா பண்ணிர்லாம்.. எனக்கு இந்தக் கொழந்தைங்க முன்னாடி பேசுறது ரொம்ப பிடிக்கும்.
(ஆகாஷ் ஓடி வருகிறான்.)

ஆகாஷ் : (மூச்சிரைக்க)  அண்ணா.. ஸ்டார்ட் பண்ணிட்டீங்களா?
மகேந்திரன் : இல்லடா.. அங்க போய் பேர் ரிஜிஸ்டர் பண்ணு.. கூப்புடுவோம் ..
ஆகாஷ் :  எல்லா போட்டியிலேயும் கலந்துக்கலாமா ?
மகேந்திரன் : ம்ம்ம்ம்..
ஆகாஷ் : (ஓடிக்கொண்டே)  ஓ.கே. ண்ணா..
ராமமூர்த்தி : ரொம்ப ஆர்வமா இருக்கானே .. யார் இவன்?
மகேந்திரன் : புதுசா குடிவந்திருக்கிற ஃபோர்மேனோட பையன்  சார்... எங்கிட்டதான் ட்யூஷன் வரான்..  ரொம்ப நல்ல பையன் ..
ராமமூர்த்தி ஓடும் ஆகாஷைப் பார்க்கிறார்.
 
காட்சி : 3
நேரம் :  காலை முதல் மாலை வரை
இடம் : விளையாட்டுத் திடல்
மாந்தர் :  ஆகாஷ் மற்றும் சிறுவர்கள்.

ஓட்டப்பந்தையம்  :
ஆகாஷ் வேகமாக ஓட முயல்கிறான். 
சிலர் அவனை முந்திச் செய்கிறார்கள். 
தவளைப் பாய்ச்சல் :
ஆகாஷ் விரைவாகத் தாவிச் செல்கிறான். 
இடையில் களைத்துப் போய் அமர்கிறான்.
மிதிவண்டி ஓட்டுதல் :
ஆகாஷ் நன்றாக ஓட்டுகிறான்.
தவறுதலாக ஒருவன் வந்து மோதி இருவரும் சாய்கிறார்கள்.
பேச்சுப் போட்டி :
ஆகாஷ் வரிகள் மறந்து நிற்கிறான்.
பாட்டுப் போட்டி :
ஆகாஷ் தடுமாற்றம் கொள்கிறான்.
ஓவியப் போட்டி :
ஆகாஷ் சரியாக வரைய முடியாமல் பதறுகிறான். 
ம்யூசிக்கல் சேர் :
ஆகாஷ் மூன்றாம் சுற்றில் வெளியேற்றப்படுகிறான் .

காட்சி : 4
நேரம் : மாலை 6 மணி
இடம் : விளையாட்டுத் திடல்,  விழா மேடை அருகில்
மாந்தர் :  ஆகாஷ்,  அப்பா,  அம்மா

ஒலிபெருக்கியில் பாடல் ஒலிக்கிறது. 
மேடையின் முன் ஆகாஷீம் அப்பாவும் அமர்ந்திருந்திருக்கிறார்கள். 
அம்மா வந்து அப்பாவின் அருகில் அமர்கிறார்.

அம்மா :  ஏன் மதியம் சாப்பிட வரலை?
அப்பா : இங்கயே லஞ்ச் ஏற்பாடு பண்ணிருந்தாங்க .. 
அம்மா : ம்ம்ம்... ஏதாவது பிரைஸ் கிடைச்சுதா?
அப்பா : இல்ல.. ஆனா, ஏனோ உக்காந்திட்டிருக்கான்..  ஆறுதல் பரிசு எதிர்பார்க்கிறான்னு நினைக்கிறேன்..
ஆகாஷ் அமைதியாக இருக்கிறான்.
அம்மாவின் முகம் வாடுகிறது.

காட்சி : 5
நேரம் :  மாலை ஆறரை
இடம் : விளையாட்டுத் திடல்,  விழா மேடை
மாந்தர் : அனைவரும்

மகேந்திரன் : (ஒலிப்பெருக்கியில்)  இன்னும் சில நொடிகளில் விழா தலைவர் சிறப்புரையாற்றி பரிசுகளை வழங்கவிருக்கிறார்.  அனைவரும் கொஞ்சம் அமைதி காக்கவும்.
ஆகாஷ் : அப்பா,  எழுந்திருங்க.. போலாம் ..
அப்பா : என்னாச்சுடா .. ஸ்டார்ட் பண்ணிருவாங்க..  இரு..
ஆகாஷ் : ம்ஸ்ஸ்ஸ்... அம்மா,  நான் போறேன்.. நீங்க வர்றீங்களா இல்லையா ?
(ஆகாஷ் எழுகிறான்.... 
அம்மா தயக்கத்துடன் எழுகிறார்.)
ராமமூர்த்தி :  (ஒலிப்பெருக்கியில்) இங்கே வருகை தந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி.  போட்டிகள் நல்ல முறையில் நடைபெற்று முடிய உதவிய உள்ளங்களுக்கு என் வாழ்த்துகள்.  வெற்றியாளர்களுக்கு என் பாராட்டுகள். 
(ஆகாஷ் வெளியே 
நடக்கத் தொடங்குகிறான்.)

ராமமூர்த்தி : (ஒலிப்பெருக்கியில்) உங்களுக்குத் தெரியும், நான் மாறுபட்டுச் சிந்திப்பவன்.  வெற்றி பெற்றவர்கள்  வாங்கும் பரிசுகள் அவர்களுக்கு ஊக்கமளிப்பனவாக இருக்கும். ஆனால்,  உண்மையில் நாம் ஊக்கம் தரவேண்டியது வெற்றி பெறாதவர்களுக்குதான்.  அவர்களுக்குத்தான் வாழ்க்கையை தொடர்ந்து எதிர்கொள்ள வேண்டிய தைரியத்தை நாம் கொடுக்க வேண்டும். அதுதான் நம்முடைய முதல் கடமை.
(ஆகாஷ் நின்றபடி 
மேடையைப் பார்க்கிறான்.)

ராமமூர்த்தி : (ஒலிப்பெருக்கியில்) நான் காலையிலிருந்து ஒவ்வொரு போட்டியையும் கண்டு களித்தேன்.  சிலர் எந்தப் போட்டியிலும் வெற்றி பெறவில்லை .  ஆனால்,  கோபித்துக்கொண்டு ஒதுங்கிவிடாமல் தொடர்ந்து பங்கேற்றார்கள்.  அவர்களது தன்னம்பிக்கை எனக்குப் பிடித்திருக்கிறது. . தன்னம்பிக்கை இருந்தால் நிச்சயம் ஒருநாள் பல வெற்றிகளைக் குவிக்கத் தொடங்கலாம்.
(ஆகாஷ் ஓடிவந்து தன் இருக்கையில் அமர்கிறான். அம்மா மகிழ்கிறார். அப்பா சிரிக்கிறார்.)

ராமமூர்த்தி : (ஒலிப்பெருக்கியில்) எனவே,  முதலில் தன்னம்பிக்கையாளர்களுக்கான பரிசுகளைக் கொடுத்துவிட்டு,  பின்னர் வெற்றியாளர்களுக்கான பரிசுகளைக் கொடுக்கப்போகிறோம்.  முதல் தன்னம்பிக்கையாளன்  பரிசைப் பெறுபவர்,  ஆகாஷ், எட்டாம் வகுப்பு.
(கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. ஆகாஷ் எழுந்து சென்று பரிசைப் பெருகிறான்.)

ராமமூர்த்தி  : (அவனது கையைக் குலுக்கி)  பொங்கல் நல்வாழ்த்துகள்.
ஆகாஷ் : (கையைக் குலுக்கி)  பொங்கல் நல்வாழ்த்துகள்.
அம்மா,  அப்பா மகிழ்ச்சியாகக் கைதட்டுகிறார்கள்.

(திரை)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com