மரங்களின் வரங்கள்!

நான் தான் சவுக்கு மரம் பேசுகிறேன்.  எனது அறிவியல் பெயர் கே.சோரினா இக்குஸ்டிஃபோலிய என்பதாகும்.  நான் கேசுவரிமனசியே குடும்பத்தைச் சேர்ந்தவன்.  எனக்கு கரிமரம் என்ற வணிகப் பெயரும் உண்டு.
மரங்களின் வரங்கள்!

காற்றுத் தடுப்பான் - சவுக்கு மரம்

என்ன குழந்தைகளே நலமாக இருக்கிறீர்களா ?
 
நான் தான் சவுக்கு மரம் பேசுகிறேன்.  எனது அறிவியல் பெயர் கே.சோரினா இக்குஸ்டிஃபோலிய என்பதாகும்.  நான் கேசுவரிமனசியே குடும்பத்தைச் சேர்ந்தவன்.  எனக்கு கரிமரம் என்ற வணிகப் பெயரும் உண்டு. நான் கடற்கரைப் பகுதிகளை எழிலூட்டவும், நல்ல நிழல் தரும் வகையில் நில நல்லாளை எழிலூட்டும் பணிகளுக்கும் பயன்படறேன்.  என்னை ஆங்கிலேயர்கள் தான் கர்நாடக மாநிலம், கார்வார் மாவட்டத்தில் முதன்முதலாக 1668-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தினாங்க.

குழந்தைகளே, நான் உங்களுக்கு  வீடு கட்டவும், பந்தல் போடவும்  உதவி புரிந்து,   இறுதியில் அடுப்பெரிக்கும் விறகாகிறேன்.  வணிகரீதியாக குறுகிய காலத்தில் அதிக பலன் தரும் மரம் நான். 

வேறு எந்தவொரு மரத்திற்கும் இல்லாத தனிச் சிறப்பாக காற்றுத் தடுப்பான் சக்தி என்னிடமுள்ளது. என் ஆழமான வேர்கள் புயல் காற்றுகளை எதிர்கொள்ளும் திறன் கொண்டவை.  எனவே, நான் மண் அரிப்பை தடுப்பேன். என்னிடம் நைட்ரஜனை தக்க வைக்கும் பிராங்கியா வகை வேர்முண்டுகள் உள்ளதால், நைட்ரஜனை தக்க வைத்து மண்ணின் வளத்தை அதிகரிக்கிறேன். 

கட்டட வேலை மற்றும் எரிபொருள் என்று மட்டுமே பயன்பட்டு வந்த நான் இப்போது காகிதக் கூழ் செய்ய பெரிதும் பயன்படுகிறேன்.  என் மூலம் தான் அட்டைகள், ஓவியத் தாள்கள் செய்யப்படுகின்றன.  

என் இலைகளை கொதிக்க வைத்து  குடித்தால் வயிற்றுப்போக்கு, வயிற்று வலி மறைந்து போகும். தூளாக்கப்பட்ட என் விதையிலிருந்து தயாரிக்கப்படும் களிம்பு தலைவலியைப் போக்கும் அருமருந்தாகும்.  என் கிளைகளிலிருந்து எடுக்கப்படும் டேனின் என்று இராசயனப் பொருள் கம்பளிகள், பட்டுத் துணிகள் தயாரிக்கவும், மீனவர் வலைகளை உறுதிப்படுத்தவும் பயன்படுகிறது. 

தோட்டங்களின் எல்லையில் காற்றுத் தடுப்பானாக என்னை வளர்க்கலாம். சந்தனமரம் வளர்வதற்கு சிறந்த வேர் ஒட்டுண்ணியாகவும் நான் திகழ்கிறேன். 
குழந்தைகளே, இன்னும் மூன்றாண்டுகளில் நீங்கள் அதிக அளவில் பயன்படுத்தும் தாள்களின் தேவை பல மடங்கு அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.  நம் நாட்டில் தற்போது மர உற்பத்தி குறைவாக இருக்கிறதல்லவா ? எனவே, இப்போதே சவுக்கை வளர்க்க ஆரம்பத்தில் வரும் ஆண்டுகளில் நல்ல லாபம் ஈட்டலாம் என மர ஆர்வலர்கள் சொல்றாங்க.   

மரங்கள் தான் பூமியின் ஆடைகள்.  இயற்கை இயற்கையாக இருக்க நாம் துணை புரிவோம். அதனால் பூமியும் பசுமையாகும். உயிரினங்களும் மகிழ்ச்சியாகும். மரம் வளர்ப்போம், நலம் பல பெறுவோம். நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.

(வளருவேன்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com