கருவூலம்: ஜம்மு - காஷ்மீர்

இந்தியாவின் மிக ஆழமான ஏரி. ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தாமரை மலர்கள் ஏரிப்பரப்பு முழுவதும் மலர்ந்து பேரழகுடன் காட்சியளிக்கும். நீர்ப் பறவைகளின் சரணாலயமாகவும் திகழ்கிறது.  
கருவூலம்: ஜம்மு - காஷ்மீர்

சென்ற இதழ் தொடர்ச்சி.....

மனஸ்பல் ஏரி!

இந்தியாவின் மிக ஆழமான ஏரி. ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தாமரை மலர்கள் ஏரிப்பரப்பு முழுவதும் மலர்ந்து பேரழகுடன் காட்சியளிக்கும். நீர்ப் பறவைகளின் சரணாலயமாகவும் திகழ்கிறது.  

நூர்ஜஹான் அமைத்த "ஜெரொகா' எனப்படும் முகலாயத் தோட்டம் ஏரிக்கு அருகில் உள்ளது. 

முபாரக் மண்டிஅரண்மனை!

ஜம்முவில் உள்ள அரண்மனை.  1824 - இல் ஆரம்பித்து, அடுத்தடுத்து வந்த மன்னர்களால் விரிவுபடுத்தி பல கட்டிடங்கள் கட்டியதில் மிகப் பெரிய மாளிகையாக மாறியது.  1925 - வரை மன்னர் ஹரிசிங் இங்குதான் வசித்தார். அரண்மனையின் பெரும் பகுதி 1980 மற்றும் 2005 - இல் உண்டான பூகம்பத்தில் சிதிலமாகிவிட்டது! 

எஞ்சியுள்ள பகுதி சுற்றுலா தலமாகத் திகழ்கிறது. இந்த அரண்மனை வளாகத்தில் "பிங்க் ஹால்'  என்னும் அரசு அருங்காட்சியகம் உள்ளது. இங்கு கலை, மற்றும் கலாச்சார சிறப்பு மிக்க 7216 பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள "பஹாரி மினியேச்சர் ஓவியங்கள்' மிகவும் புகழ் பெற்றவை. 

பாஹு கோட்டை!

3000 ஆண்டுகள் பழமையான கோட்டை இது! பாஹு கோட்டை மற்றும் கோயில் தாவி நதிக்கரையில் அமைந்துள்ளன. இக்கோட்டை நாட்டிலேயே மிகவும் பழமையானதாகக் கருதப்படுகிறது. 

மன்னர் பாஹுலோசன் என்பவர் கட்டியதை, பின்னர் வந்த "டோக்ரா' வம்ச மன்னர்கள் புதுப்பித்துள்ளனர். பட்னிடாப் குன்றுகளின் மலைச் சரிவுகளில் 325 மீட்டர் உயரத்தில் மணற்பாறை மற்றும் சுண்ணாம்பு கொண்டு கட்டப்பட்டுள்ளது. கோட்டை படிப்படியாக வலுப்படுத்தப்பட்டு பலமான  கோட்டையாக மஹாராஜா ரண்பீர்சிங் காலத்தில் ஆனது. 

கோட்டைக்குள் இருக்கும் காளி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. மேலும் கோட்டையைச் சுற்றி சூழ்ந்துள்ள "பாலே கி பாஹீ' என்னும் முகலாயர் பாணி தோட்டம் கண்கவரும் பூங்காவாகும்! 

அமர் மஹால் அரண்மனை!

பகட்டான அழகிய மண்டபங்களும், தோட்டமும் கொண்ட அரண்மனை இது! இங்கு 120 கிலோ எடை கொண்ட சிம்மாசனமும், பல்வேறு அழகிய கலைப்பொருட்களும் உள்ள அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரண்மனை ராஜா அமர்சிங்கின் வசிப்பிடமாக இருந்தது. வடக்குப் பகுதியில் சிவாலிக் மலைத்தொடரின் அழகிய காட்சி, தெற்கே "தாவி' ஆறு என ரம்மியமான  சூழலில் அமைந்த அரண்மனை.

ஷீஷ் மஹால்!

இங்கு டோக்ரா கலைப்பொருட்கள் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுல்ளது. ஜம்மு, காஷ்மீரின் இயற்கை அழகைச் சித்தரிக்கும் பல அழகிய வண்ண ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த அரண்மனை ஒரு காலத்தில் டோக்ரா அரசர்களின் வசிப்பிடமாக இருந்துள்ளது. 

அக்னூர்! (AKHNOOR)

ஜம்முவிற்கு தென்மேற்கே 32 கி.மீ. தூரத்தில் சேனாப் நதிக்கரையில் உள்ள நகரம். சோஹ்னி மஹிவால் ஆற்றின் கரையோரம் சிந்து சமவெளி நாகரிகத்தின் அடையாளமாக உள்ள இடிபாடுகளைக் காணலாம்! 

துலிப் மலர்த் தோட்டம்!

ஜபர்வன் மலைத்தொடர்களின் அடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ள " இந்திரா காந்தி நினைவு மெமோரியல் டியூலிப் தோட்டம். ஆசியாவிலேயே மிகப் பெரிய துலிப்  மலர்த்தோட்டம்!

2600 அடி உயரத்தில் 7 படிகளாக அமைந்திருக்கும் இத்தோட்டத்தின் மூன்று பக்கங்களில் டால் ஏரி, நிஷாத் பாக் மற்றும் ஷெஷ் மசாஹி என்கின்ற அழகிய பூங்காவனங்கள் சூழ்ந்து அழகூட்டுகின்றன. வெள்ளை, சிவப்பு, ஆரஞ்சு, ஊதா, போன்ற பல வண்ணங்களில் லட்சக்கணக்கான மலர்கள்! கண்களுக்கு எட்டும் தூரம் வரை வரிசை கட்டி பார்ப்பவர்களை இன்புறச் செய்கின்றன.

லடாக்கின் சில அழகிய இடங்கள்!

ஹேமஸ் குகை! 

அமைதியாக தியானம் செய்வதற்காக 1672 - இல் அமைக்கப்பட்ட அழகிய மடம்! இதன் அருகில் தேசிய உயிரியல் பூங்கா உள்ளது.

சாந்தி ஸ்தூபி!

இயற்கை காட்சிகளால் சூழப்பட்ட அமைதியான இடம். இங்குள்ள தூண் அனைவரையும் கவரக்கூடியது. தூணின் மேல் பகுதியிலிருந்து "லே' யின் முழு அழகையும் பார்த்து ரசிக்கலாம். மேல் பகுதிக்குச் செல்ல 600 படிக்கட்டுகள் உள்ளன. 

ஜோரோவர் கோட்டை!

சரித்திரத்தில் ஆர்வம் உடையவர்களை கவரும் கோட்டை இது! ஜெனரல் ஜோரோவர் சிங் நினைவாகக் கட்டப்பட்டது. இந்திய- சீன சண்டையில் ஹீரோவாக விளங்கினார். 

மேலும் சில தகவல்கள்!

இந்திய மாநிலங்களில் ஜம்மு- காஷ்மீர் மாநிலம் மட்டுமே இந்திய அரசியலமைப்பின் 370 - ஆவது குறிப்பின்படி பெருமளவில் மாநில சுயாட்சியை கொண்டுள்ளது. இதன்படி இந்திய பாராளுமன்றத்தில் ராணுவம், தகவல் தொடர்பு, வெளியுறவு விவகாரம் ஆகிய துறைகளைத் தவிர்த்து மற்ற துறைகளில் இயற்றப்படும் எந்தச் சட்டமும் காஷ்மீர் மாநிலத்தில் செல்லாது! மேலும் இங்கு சட்டமன்றத்தின் பதவிக் காலம் ஆறு ஆண்டுகள். 

கட்டுப்பாட்டுக் கோடு

1947 - இல் இந்தியா - பாகிஸ்தான் போர் முடிவில் ஐ.நா. சபை ஜம்மு - காஷ்மீர் ராஜ்ஜியத்தில் இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே வகுத்த ராணுவப் போர் நிறுத்தக் கோடு இது.

1972-இல் சிம்லாவில் ஏற்பட்ட சிம்லா ஒப்பந்தத்தின்படி வாய் மொழியாக போர் நிறுத்தக் கோட்டிற்கு ஒப்புதல் அளித்தது. இந்தக் கோடு வருங்காலத்தில் நிரந்தர எல்லைக் கோடாக இருக்கும் எனவும் ஒப்புக்கொள்ளப்பட்டது. 

"லே - மணாலி' நெடுஞ்சாலை!

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள "லே'  பகுதியையும் இமாச்சல பிரதேசத்தின் "மணாலி'  யையும் இணைக்கும் 490 கி.மீ. நெடுஞ்சாலை இது. கோடைக் காலத்தில் மட்டுமே சுமார் 4 மாதங்களுக்கு போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது. இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கனரக வாகனங்கள் செல்லுவதற்கு உரிய வலுவான சாலை இது. 

மிகச் சிக்கலான அபாயகரமான சாலை. இரண்டு பக்கஙகளிலும் மலைத் தொடர்கள். சில இயற்கையான மணல் மற்றூம் பாறை உருவங்கள், கோடைக்கால வெப்பத்தால் பனி மூடிய மலைகளும் கோடைக்கால வெப்பத்தால் பனி மூடிய மலைகளிலுள்ள  பனிப்பாறைகள் உருகுவதால் வரும் பல புதிய நீரோடைகளும், நிறைந்த ஆபத்தான, ஆனால் அழகான மலைப்பாதை! குளிர்காலத்தில் முழுமையாக உறைபனி மூடிவிடும்!

ஊலர் ஏரி! (WULAR LAKE)

ஆசிய கண்டத்தின் மிகப் பெரிய நன்னீர் ஏரி இது! "பந்திபோரா' மாவட்டத்தில் புவித்தட்டு நகர்வால் உருவானது!  ஜீலம் ஆறு இந்த ஏரியின் வழியாகப் பாய்ந்து பாகிஸ்தானை அடைகிறது. ஏரியின் பரப்பளவு கால நிலைக்கேற்ப 30 ச.கி.மீட்டரிலிருந்து 260 ச.கி.மீ வரை மாறுபடும்.

மேக்னடிக் ஹில்!

இந்த மலையில் உள்ள காந்தப் புலத்தின் காரணமாக வாகனங்கள் மலையின் மேல் நோக்கி இழுக்கப்படுமாம்! எனவே மேக்னடிக் ஹில் வந்தவுடன் வாகனங்களின் என்ஜின்களை நிறுத்திவிட்டு, பெட்ரோல் செலவில்லாமல் பயணிக்கிறார்கள். இந்த காந்த மலை, "லே' அருகே அமைந்துள்ளது. 

"லே'  மாவட்டம்!

லடாக் பகுதியில் உள்ள "லே'  மாவட்டம் 45,110 ச.கி.மீ. பரப்பளவு கொண்டது. இது இந்தியாவின் இரண்டாவது பெரிய  மாவட்டமாகும்!

மிதக்கும் அஞ்சல் நிலையம்!

உலகின் முதல் அஞ்சல் நிலையம் 2011- ஆம் ஆண்டு தால் ஏரியில் தொடங்கப்பட்டது.

ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ்

தமிழகத்தின் கன்னியாகுமரியில் இருந்து  காஷ்மீரின் ஜம்மு - தாவிக்கும் இடையே  ஓடும் பயணிகள் ரயில். இந்தியாவின் நீண்ட தூரம் பயணிக்கும் ரயில்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது. 

பானிகால் தொடர்வண்டி குகைப் பாதை!

இமயமலையின் ஒரு பகுதியான பீர்பாஞ்சல் மலையை குடைந்து 11.2 கி.மீ. நீளத்திற்கு குகை ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதுதான் இந்தியாவின் மிகப் பெரிய தொடர்வண்டி குகைப்பாதை. மேலும் உலகின் இரண்டாவது நீளமான குகை ரயில்பாதையும் இதுதான்!

இந்திய அரசு வழங்கியுள்ள சலுகைகள்!

காஷமீர் மாநில மக்கள் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் வசிக்கலாம். சொத்துக்களை வாங்கலாம். ஆனால் பிற மாநில மக்கள் காஷ்மீரில் சொத்துக்களை வாங்க முடியாது. 

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கென்று தனிக்கொடி வைத்துக் கொள்ள உரிமை அளிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவிலேயே தனி அரசியல் அமைப்புச் சட்டம் உள்ள ஒரே மாநிலம். மேலும் இங்கு உச்சநீதி மன்ற ஆணைகள் எதுவும் செல்லாது!

ஜம்மு - காஷ்மீர் மாநில சட்டப்பேரவையின் தொகுதிகள் 111 என்றாலும்கூட இதில் 24 இடங்கள் பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீர் பகுதியைச் சேர்ந்தவை. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் அரசியல் சாசனப்படி இந்த 24 இடங்களும் அதிகாரபூர்வமாக காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதனால் இந்த 24 இடங்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. 

தொழில்கள்!

இயற்கையின் சொர்க்க பூமியாகிய ஜம்மு - காஷ்மீரில் விவசாயமே முக்கியத் தொழில். ஆப்பிள், பேரிக்காய், பீச், அக்ரூட், பாதாம், செர்ரி, ஆகியவற்றின் பெரிய தோட்டங்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் அதிகம் உள்ளது.  மேலும், நெல் கோதுமை, மக்காச்சோளம், பார்லி, பருப்பு வகைகள், எண்ணை வித்துக்கள், காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. 

குங்குமப்பூ

நீண்டகாலமாக உலகின் மிக விலை உயர்ந்த நறுமணப்பொருளாக இருக்கும் குங்குமப்பூ  இம்மாநிலத்தில் பயிரிடப்படுகிறது. மிகப் பெரிய சமவெளிப் பகுதிகளில் உறைபனிக்காலத்தில் பயிர் செய்யப்படுகின்றன. 

ஜம்மு - காஷ்மீர் கம்பளங்களும், மரத்தால்  ஆன அழகிய கலைப்பொருட்களும் உலகப் பிரசித்தி பெற்றவை.  

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பழமையான சுற்றுலாவிற்கு புகழ்பெற்ற மாநிலம். உயர்ந்த பனி மூடிய மலைகள், அழகான மலைச்சரிவுகள், பெரிய ஏரிகள், நதிகள் பாயும் வளமான பள்ளத்தாக்குகள், பெரிய பழத்தோட்டங்கள், மலர்த்தோட்டங்கள், பூங்காக்கள், பழமையான கோயில்கள், தர்காக்கள், பெளத்த மடாலயங்கள் என பார்க்க, ரசிக்க, எண்ணற்ற இடங்களைக்கொண்ட  இயற்கை எழில் கொஞ்சும் மாநிலம்! 


(நிறைவு)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com