சிறுவர்மணி

சலிப்பு!

14th Dec 2019 10:38 PM | -என்.எஸ்.வி.குருமூர்த்தி

ADVERTISEMENT



மன்னர் விஜயசிம்மருக்கு சில நாட்களாக எதிலும் மனம் நாட்டமின்றி மனச் சோர்வுடன் காணப்பட்டார்.  அமைச்சர் நல்லசிவம்  நாட்டு நடப்பை மற்றும் முக்கிய ராஜ காரியங்களை  மன்னர் முன் வைத்தாலும், ""சரி நீங்களே பார்த்து தளபதியுடன் கலந்து ஒரு நல்ல முடிவை எடுங்கள்!'' எனச் சொல்லிவிடுகிறார்.
மன்னரின் இந்தப் போக்கு அமைச்சருக்கு ஏன் எனப் பிடிபடவில்லை. தளபதியும் அமைச்சரும் இதைப் பற்றி யோசித்தனர்.

இருவரும் மகாராணியிடம் மெல்ல விஷயத்தைச் சொன்னார்கள்.  ராணியும்.”""கொஞ்ச நாளாக இப்படித் தான் எதிலும் பிடிப்பு இல்லாமல் பேசுகிறார்.. என்ன செய்வது என்றே எனக்குத் தெரியவில்லை!'' என்றார்.
விகடகவி வெங்கண்ணா, நகைச் சுவையாக மன்னரிடம் பேசி, மகிழ்விக்க முயன்றான்.  அதெல்லாம் மன்னரிடம் எடுபடவில்லை. யாருக்கும்  ஒன்றும் புரியவில்லை.  மன்னரின் இந்த மாற்றத்துக்கு என்ன காரணம்?.....
வெங்கண்ணா, அமைச்சர், தளபதி மூவரும் குலகுரு முனிவரிடம் போய் இந்த விஷயத்தைச் சொன்னார்கள்.

முனிவர் யோசித்துவிட்டு, ""சரி, நீங்கள் மன்னரிடம் வரும் பவுர்ணமி பூஜைக்கு மரகதமலை  உச்சியில் உள்ள காளி கோவிலுக்கு நான் வரச் சொன்னேன் எனச் சொல்லுங்கள். நீங்கள் யாரும் அவருக்குத் துணையாக வர வேண்டாம். மன்னர் பாத யாத்திரையாக அரண்மனையில் இருந்து நடந்தே வரட்டும்! மன்னராக இல்லாமல் மாறுவேடத்தில் அடையாளம் தெரியாமல் தனியே வரச் சொல்லுங்கள்!'' என்றார். 

அமைச்சர், “""சுவாமி, மன்னரின் பாதுகாப்பு ?'' என்று வினவ, ""அதை நான் பார்த்துக்  கொள்கிறேன்!'' என்றார் குலகுரு.”

ADVERTISEMENT

""நல்லது குருதேவா அப்படியே செய்கிறோம்!'' என்று வணங்கிச் சென்றனர்.
மன்னரிடம் விஷயத்தைச் சொன்னார்கள்.
""என்ன பூஜை.. என்ன புனஸ்காரம்.. இதெல்லாம் வர வர சலித்து விட்டது..... ம்.... சரி. போய் வருகிறேன்..... மரகதமலை காளி கோவிலுக்கு நடந்தே போக வேண்டும்,.... அவ்வளவு தானே..? நெடுந்தூரம்தான்!....செல்ல ஒரு வாரம் பத்து நாட்கள் பிடிக்கும்.  பரவாயில்லை.. போய் வருகிறேன்!''”
மன்னர் தாடி மீசை ஒட்டிக் கொண்டு ஒரு யாத்ரீகர் போலக் கிளம்பினார்..தோளில் ஒரு துணிப் பை, தண்ணீர்க்  குடுவையுடன். கையில் ஒரு கோல்.

மரகத மலைக்குப் போகும் பாதையில் பல கிராமங்கள் குறுக்கிடும். காட்டுப் பாதை இடையில் ஒன்று வரும். சில காத தூரம் கரடு முரடான பாதையில் செல்ல  வேண்டும்.  சில நதிகளை ஓட த்தில்  பயணம் செய்து  கடக்க வேண்டும்.
முதலில் மன்னர்  பொன்பரப்பி கிராமத்தை அடைந்தார்.  செழுமையான் வயல் வெளி. எங்கும் பச்சைப் பசேல் என நாற்று நடவு நடந்து கொண்டிருந்தது. கிராமத்துப் பெண்டிர் இனிமையாகப் பாடியபடி நாற்று நட்டார்க. களத்து மேட்டில் அய்யனார் கோவில் குதிரை அடியில் அமர்ந்து மதியம் மன்னர் கட்டுச் சோறை அவிழ்த்து உண்டார். அங்கிருந்த விவசாயிகள் யாத்ரீகரை நலம் விசாரித்து அதிரசம் முறுக்கு என தின் பண்டங்கள் வழங்கினர்.  ஆய்ச்சியர் வெண்ணெய் மிதக்கத் தந்த மோரை மனம் குளிரப் பருகினார்.

பின் கிளம்பி காட்டுப் பாதைக்கு முன் இருந்த  நெய்விளக்கு கிராமத்தை  இருட்டும் முன் அடைந்தார்.  பசி எடுக்க ஆரம்பித்தது.  அங்கிருந்தவர்கள் யாத்ரீரகரை உபசரித்து இரவு அடை, கீரைக் குழம்பு வாழை இலையில் பரிமாற உண்டு ஒரு வீட்டின் திண்ணையில் உறங்கினார். அதிகாலை வெளிச்சத்தில் காட்டுப் பாதையைக் கடக்கக் கிளம்பினார்.

காட்டுப் பாதையில் இரு புறமும் மான்கள் ஓடின.  தூரத்தில் ஒரு யானைக் கூட்டம்  சுனையில் குளித்து விளையாடியது.  முயல்களும்  காட்டுப் பசுக்களும் ஓடின.  குயில் ஒன்று எங்கோ இனிமையாய்க் கூவியது.  மயில்கள் பறந்தபடி சென்றன.    ஒரு முகட்டில் கரு மேகத்தைப் பார்த்து, ஒரு மயில், தோகையை விரிக்க கண்கொள்ளாக் காட்சியை மன்னர்  கண்டு களித்தார்.

காட்டைக் கடந்து மரகத மலை அடிவாரத்தை அடைந்தார். மலைக் கிராமத்து மக்கள் இவரை உபசரித்து தேனும் தினை மாவும் வழங்கினர்.  பனை வெல்லப் பாகோடு குங்குமப்பூவை அதில் ஊறவைத்து,  இஞ்சி, எலுமிச்சை சேர்த்த சாற்றைக் குடிக்கக் கொடுத்தனர். மிகவும் சுவையாக இருந்தது.  மன்னர் மாறு வேடத்தில் ஒவ்வொரு  மலைக் கிராமமாக க் கடந்து சென்றார்.  வழியெங்கும் வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கின.  உயரத்தில் இருந்து கீழே பூமியின் ரம்மியமான காட்சி யைக் கண்டு ரசித்தார்.  குளிர்ந்த சுத்தமான காற்று நாசிக்கு இதமாக இருந்தது.

இறுதியில் மலை உச்சியில்  காளி கோவிலை அடைந்தார். அங்கே முனிவரும், மந்திரி தளபதி அரசி விகடகவி எல்லோரும் காத்திருந்தனர். அவர்கள் மலை உச்சியை வேறு ஒரு பாதையில் ரதம் மூலம் அடைந்து இருந்தனர்.
பூஜை முடிந்ததும் மன்னர் வேடத்தைக் களைந்தார். மன்னரும் அரசியும் குருவை வணங்கினர். விபூதியை வழங்கிய முனிவர், ""மன்னா வழிப் பயணம் எப்படி இருந்த து?'' என்று கேட்டார்.”

""குருவே!....  அரண்மனையில் அடைந்து கொண்டு நாளும்  அவை நடவடிக்கைகள்,  அரண்மனை அறுசுவை உணவு,   நாட்டியம், கேளிக்கை என சலித்து விட்டது! எதைக் கண்டாலும் கேட்டாலும் எரிச்சலும் கோபமும் தான் வந்தன.  இந்தப் பயணத்தால் வெளி உலகத்தின் அற்புதக் காட்சிகளைக் கண்டேன்.. இயற்கை அழகு என்னை ஆட்கொண்டுவிட்ட து.  இனி ஒவ்வொரு பவுர்ணமிக்கும் நான் நடந்தே வருவேன்  மனம் பளிங்கு போல் உள்ளது.  உற்சாகமாகவும் இருக்கிறேன்!''

மலை முகட்டில், உதித்த  முழு நிலா மனதை மயக்கியது.
மன்னரும், அரசியும் ரதத்தில் கிளம்பி விட்டனர்,
இரதம்  போனதும்  அமைச்சர், தளபதி, விகடகவி மூவரும் மன்னரின் மனச்சோர்வுக்கு நல்ல இயற்கை வைத்தியம் அளித்த குருவுக்கு நன்றியைத் தெரிவித்தனர்.

குலகுரு முனிவர், “""மனித மனம் சலிப்புக்கு உட்பட்டது..... அதனால் அவ்வப்போது தூர தேசத்து கோவில்களுக்கு யாத்திரை போகவேண்டும். கங்கை போன்ற  புண்ணிய நதிகளில் சென்று நீராட வேண்டும். மலை உச்சிகளில் உள்ள கோவிலுக்குப் படி ஏறி சென்று வரவேண்டும்.  அப்போது தான் இந்தப் பரந்த உலகில் வாழும் பல தரப் பட்ட மக்களின் வாழ்க்கை முறை, கலை கலாச்சாரம் இவற்றை அறிய முடியும்.  இது சலிப்பு எனும் ஒரு  மன நோய்க்கு நல்ல மருந்து!'' எனக் கூறினார்.”
அது வரை மன்னர் அறியாமல்  மன்னரைத் தூரத்தில் வந்தபடி காவல் காத்த முனிவரின் சீடர்களுக்கு அமைச்சர் பொற்கிழி வழங்கி கவுரவித்தார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT