சிறுவர்மணி

உண்மையான வயது!

14th Dec 2019 10:56 PM | மயிலை மாதவன்

ADVERTISEMENT


சாந்தமும், அமைதியும் தவழந்த அந்தத் துறவியைப் பார்த்ததுமே, முதியவர் ஆனந்த ரூபருக்குப் பிடித்து விட்டது! அது மட்டுமல்ல, மென்மையான துறவியின் குரல் ஆனந்த ரூபருக்கு இதமாக இருந்தது. துறவியின் சீடர்களின் ஒழுக்கமும் அவரைக் கவர்ந்தது. மேலும் ஆசிரமக் குடில், அருகில் ஓடிய நதி, மரங்கள் அடர்ந்த நதிக்கரை, பறவைகள் என அந்த சூழ்நிலை ஆனந்த ரூபரை வசீகரித்தது. மனதில் அமைதியும் ஏற்பட்டது. 
அவர், துறவியைப் பார்த்து, "" நான் சிறிது நாட்கள் இங்கு தங்கலாமா? 
''  என்று கேட்டார்.

""தாராளமாக!...'' என்றார் துறவி. 
""என்னாலான உதவிகளைச் செய்து கொண்டு இங்கே தங்க விரும்புகிறேன்.... எனது பணி என்ன என்பதைத் தாங்கள் விளக்கினால் நல்லது. மேலும் நானும் ஆசிரம வேலைகளில் பங்கு கொள்ள விரும்புகிறேன்.... ''
"" நீங்கள் உங்களால் இயன்றதைச் செய்யலாம்.... இயலாததை மறுக்கலாம்.... உங்களுக்குப் பூரண சுதந்திரம் உள்ளது!''
ஆனந்த ரூபருக்கு உணவு பறிமாரப்பட்டது. உண்டார். உறங்கினார். ஆசிரமத்தின் பணிகளில் பங்கு கொண்டார். இயன்றவரை குருவுக்குப் பணிவிடை செய்தார்.  மனம் நிம்மதியாக இருந்தது. சில வருடங்கள் உருண்டோடின.

 துறவிக்கு ஆனந்தரூபரை மிகவும் பிடித்து விட்டது. ஒருநாள் அவரை அழைத்தார். 
 ""உங்களுக்கு என்ன வயது ஆகிறது?'' என்று கேட்டார்
""நான்கு!''
""என்ன இது?.... இப்படிச் சொல்கிறீர்கள்?.... உங்களைப் பார்த்தால் அறுபது வயதிற்கும் மேல் ஆகியிருக்கும் போல் இருக்
கிறதே!....'' என்றார் குருவாகிய துறவி. 

 ""ஸ்வாமி!....இங்கு நான் வந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன!.... இங்கு  வந்ததிலிருந்துதான் நான் நிம்மதியுடன் இருக்கிறேன்!.... உண்மையில் இதற்கு முன் நான் வாழ்ந்த வாழ்க்கையில் எனக்கு எந்தப் பலனும் இல்லை... இங்கு எனது வாழ்க்கையில் ஒரு அர்த்தம் இருப்பதாக உணர்க்கிறேன்... அர்த்தமற்ற வாழ்க்கை கணக்கில் வராது. அர்த்தமுள்ள, நிம்மதி மிகுந்த வாழ்க்கையை நான் நான்கு ஆண்டுகளாக அனுபவித்து வருகிறேன். சொல்லப்போனால் இங்கு வந்த பிறகுதான் நான் ஞானமடைந்தேன்! இங்குதான் புதிய பிறப்பாக உணர்கிறேன். எனவே இந்த நான்கு ஆண்டுகள்தான் எனது உண்மையான வயது!'' என்று கூறினார் ஆனந்த ரூபர்.
குரு அவரை நோக்கிப் புன்னகைத்தார். அவரை ஆரத் தழுவிக்கொண்டார். அந்தத் துறவிதான் கெளதம புத்தர்!

ADVERTISEMENT


 

ADVERTISEMENT
ADVERTISEMENT