தேவதை தந்த பரிசு

அவந்தியூர் எனும் சிற்றூரில் பாபு எனும் சிறுவன் தன் பாட்டி அன்னம்மாவுடன் வசித்து வந்தான். பாட்டி இட்டிலி கடை வைத்திருந்தார்.பாபு பாட்டிக்கு உதவியாகப் பல வேலைகளைச் செய்வான்.
தேவதை தந்த பரிசு

அவந்தியூர் எனும் சிற்றூரில் பாபு எனும் சிறுவன் தன் பாட்டி அன்னம்மாவுடன் வசித்து வந்தான். பாட்டி இட்டிலி கடை வைத்திருந்தார்.பாபு பாட்டிக்கு உதவியாகப் பல வேலைகளைச் செய்வான்.அவனுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று உண்டு என்றால் அது ஓவியம் வரைவதுதான். ஒருநாள் அவன் அற்புதக் கனவு ஒன்றைக் கண்டான்.அதில் அழகிய தேவதை வெண்ணிற ஆடையில் தோன்றி அவனுக்குப் படத்திற்கு வண்ணம் பூசக் கூடிய அழகிய ப்ரஷ் ஒன்றை அளித்து விட்டு மறைந்து விட்டது.
 மறுநாள் காலையில் அவன் கண் விழித்துப் பார்த்தபோது கண்ணைப் பறிக்கும் வண்ண ப்ரஷ்ஷைக் கண்டான். பேப்பர்களுடன் என்ன வரையலாம் என்று அவன் யோசித்தான். அவனுக்கு மயிலின் ஞாபகம் வந்தது. அந்தப் ப்ரஷ்ஷால் மயிலை வரைய முயன்றான்.
 என்ன ஆச்சர்யம்!! பல வண்ணங்களைக் கொண்ட அந்த மயில் பறப்பதற்குத் தயாராக இருந்தது. அடுத்த நொடியில் அந்த மயில் பட படவெனத் தோகையை விரித்துப் பறந்து கோயிலின் மேல் அமர்ந்து கொண்டது. பார்த்துக் கொண்டிருந்த பாபுவிற்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை.அது மட்டுமா! இன்னும் ஓர் ஆச்சர்யம் அது தன் வாயைத் திறந்து பேசத் தொடங்கியது.
 பாபு! அந்தத் தேவதை உனக்குத் தந்தது மாய ப்ரஷ். நீ எதை வரைந்தாலும் அவை உயிர் பெற்றுவிடும். ஆனால் உன் சுய லாபத்திற்காக இதனைப் பயன்படுத்தக் கூடாது என எச்சரித்துவிட்டுப் பறந்து போனது.கொஞ்ச நேரம் சிலையாக நின்றான் பாபு. பின் இதனைப் பரிசோதிக்க எண்ணினான். என்ன வரைவது? ம்! எனக்கு ரொம்ப நாளா ஐஸ்க்ரீம் சாப்பிட ஆசை. அதையே வரையலாம் என்றவன் அந்த மாஜிக் ப்ரஷ்ஷால் ஐஸ்க்ரீம் பலவற்றை வரைந்தான். ஆனால் படத்தை விட்டு அவை அவன் கையில் வரவே இல்லை. எதுவும் தனக்கென்று சுயநலத்திற்காக வரைந்தால் அது பலிக்காது என்பது அவனுக்குப் பிறகுதான் புரிந்தது.
 அப்போது அ ந்த ஊர் மக்கள் சிலர் மரத்தடியில் பேசுவதை அவன் கேட்டான். வயலுக்குத் தண்ணீர் பாய்ச்ச வேண்டும் என்றால் நீண்ட தூரம் சென்று எடுக்க வேண்டி உள்ளது.
 அருகே ஒரு குளம் இருந்தால் எத்தனை நன்றாக இருக்கும் ? உடனே அந்த மாயப் ப்ரஷ்ஷுக்கு நல்ல வேலை வந்து விட்டது என்று சந்தோஷத்துடன் கோயிலுக்குச் சற்றுத் தள்ளி ஒரு பெரிய குளம் ஒன்றை வரைந்தான், அடுத்த நொடியில் அங்கே மடமடவெனத் தண்ணீர் நிறைந்த குளம் தோன்ற ஊர் மக்கள் அதிசயத்தில் வாயைப் பிளந்தனர்.
 இதற்குக் காரணம் பாபுவின் மாயப் ப்ரஷ் என்பதை அறிந்து பாபுவைக் கொண்டாடினர். ஊரே அவனைக் கொண்டாடியது. பாட்டிக்கோ ஒரே பெருமை. சில நாட்கள் கழித்து ஊர்மக்கள் அவனிடம் வயலை உழ மாடுகள் இல்லையே என்று வருந்த உடனே அவனும் மாடுகள் , கலப்பை என வரைய அவை உயிர் பெற்றன. நாளாக நாளாக ஊர்மக்கள் உழைக்காமல் சொகுசு வாழ்க்கை வாழ விரும்பி அவர்கள் பாபுவைத் துளைத்தெடுத்தனர்.
 இதனால் மனம் வருந்திய பாபு ஒரு முடிவெடுத்தான்......
 மறு நாள் ஊர் மக்கள் ஒவ்வொருவராகப் பாபுவின் வீட்டிற்குப் படை எடுத்தனர்.
 பாபுவின் வீடு பூட்டப் பட்டதை அறிந்து தங்கள் செய்கைக்கு உண்மையிலேயே வருந்தினர். தங்கள் பேராசையால் அந்த நல்லவனை ஊரை விட்டே அனுப்பி விட்டோமே என்று மனம் நொந்தனர். பாபுவோ தன் பாட்டியுடன் வேறு ஓர் ஊரை அடைந்தான்.
 ஜெயந்தி நாகராஜன்
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com