சூப்பர் சிவா! 6

வாட்ச் மேனைக் காணவில்லை. மரக்குரங்கு விளையாட்டு மீண்டும் ஆரம்பித்தது. தேவராஜ் "அவுட்' ஆக்க வேகம் காட்டினான். ஆனால் யாரும் ஆகவில்லை.
சூப்பர் சிவா! 6

தேவராஜுக்குக் கோபம் வந்தது!
 வாட்ச் மேனைக் காணவில்லை. மரக்குரங்கு விளையாட்டு மீண்டும் ஆரம்பித்தது. தேவராஜ் "அவுட்' ஆக்க வேகம் காட்டினான். ஆனால் யாரும் ஆகவில்லை.
 அதனால் சிவா தேவராஜைக் கேலி செய்தான். "இன்னைக்கு உன்னால யாரையும் தொட முடியாது' என்றான். தேவராஜுக்குக் கோபம் வந்தது. ஒரு கல்லை சிவாவை நோக்கி வீசினான். கல் சிவாவின் முன்னம்பல்லை பாதியாக உடைத்தது. வாயிலிருந்து ரத்தம் கொட்டியது. அதைப் பார்த்ததும் தேவராஜ் பயந்து ஓடிவிட்டான்.
 சிவா மரத்திலிருந்து இறங்கினான். பல் வலித்தது. கண்கள் கலங்கின. அழவில்லை. நண்பர்கள் சூழ்ந்துகொண்டு "என்னடா ஆச்சு?'' என்றனர். சிவா வாயைத் திறந்தான். குமார் பார்த்து, "பல்லு பாதியா உடைஞ்சி போயிருக்கு!....'' என்றான். இனிமே தேவராஜை விளையாட்டிலே சேர்த்துக்கக்கூடாது'' என்றான் ஜோசப்.
 பூங்காவிலுள்ள குடிதண்ணீர்க் குழாயில் சிவா வாயைக் கொப்பளித்தான். தண்ணீர் சிவப்பாகத் தெரிந்தது. இன்னும் இரண்டு முறை கொப்பளித்தான். தண்ணீர் சாதாரணமாக இருந்தது.
 வீட்டுக்கு திரும்பும்போது, "அப்பா, அம்மா கிட்டே சொல்லாதே...'' என்று தம்பியிடம் சிவா சொன்னான். ஆனாலும் அவன் அம்மாவிடம் சொல்லிவிட்டான்.
 "விளையாடிட்டு பல்லை உடைச்சிக்கிட்டு வந்தியா,... காலை கையை உடைச்சிக்கிட்டு வந்துராதே...'' என்று அம்மா எச்சரித்தாள்.
 மதியம் அம்மா காரக்குழம்பு வைத்திருந்தாள். வாய் எரியும் என்பதால் அவன் மோர் ஊற்றிச் சாப்பிட்டான். கூட்டு கூடத் தொட்டுக்கொள்ளவில்லை.
 மாலையில் சந்திரா அக்கா அண்ணன் கிருஷ்ணன் அவனைக் கேலி செய்தார். "என்ன பல்லா, பாதி பல்லா ஆயிட்டியா!.... இன்னொரு பல்லையும் உடைச்சிரு,... பல்லான்னு சொல்லமாட்டேன்!...'' என்றார்.
 பல் பாதியாக உடைந்தது தவிர சிவாவுக்கு பிரச்னை எதுவும் இல்லை.
 இரண்டு வாரங்களாக மரக்குரங்கு விளையாட்டு நடக்கவில்லை. பிறகு தேவராஜுடன் சேர்ந்து சிவா மரக்குரங்கு விளையாடினான்.
 
 பயிற்சி!
 தமிழ் ஆசிரியர் அறம் வளர்த்த நாதனின் மூத்த மகன் இளங்கோவடிகள் சிவாவுடன் படித்தான். சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகள் பேயர் அவனுக்கு. சிவா அவனை இளங்கோ என்றுதான் கூப்பிடுவான். இளங்கோவின் தம்பி சிவாவின் தம்பியோடு படித்தான். அவனுக்கு திருவள்ளுவன் என்று பெயர்.
 பள்ளிக்கூடத்தில் நடக்கும் முக்கியமான செய்திகளெல்லாம் இளங்கோவுக்கு முன்கூட்டியே தெரியும்! ஆசிரியர் மகனல்லவா!.... பள்ளியில் விளையாட்டுப் போட்டி நடக்கப்போகிறது என்பதை சிவாவுக்கு இளங்கோ சொன்னான்.
 இரண்டு நாட்களுக்குப் பிறகு விளையாட்டுப் போட்டி பற்றிய சுற்றறிக்கை வகுப்புகளுக்கு வந்தது. பள்ளி மாணவர்கள் அனைவரும் நான்கு அணிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தனர். தேசத் தலைவர்களான காந்தி, நேரு, போஸ், சிதம்பரனார் பெயர்கள் அணிகளுக்கு வைக்கப்பட்டிருந்தது. அணிகளுக்குக் கொடியும் இருந்தது. காந்தி அணிக்கு சிவப்பு, நேரு அணிக்கு பச்சை, போஸ் அணிக்கு மஞ்சள், சிதம்பரனார் அணிக்கு நீலம்.
 சிவாவின் பெயர் போஸ் அணியில் இருந்தது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவனுக்கு பிடித்த தலைவர். சுதந்திரப் போராட்டத்துக்கு அவர் படை திரட்டியது அவனுக்குப் பிடித்தமானதாக இருந்தது. மேலும் இளங்கோ பெயரும் போஸ் அணியில் இருந்தது. அருளின் பெயர் காந்திஅணியில். அருள் காந்தி அணி என்பதால் அந்த அணி தோற்க வேண்டும் என்று நினைத்தான் சிவா. எல்லா போட்டிகளிலும் போஸ் அணி வெற்றி பெற வேண்டுமென்று நினைத்தான். அதனால் அவனும் இளங்கோவும் எல்லா போட்டிகளுக்கும் பெயர் கொடுத்திருந்தனர்.
 அருள் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சேர்ந்திடுவான். அருளை தோற்கடிக்க வேண்டுமென்பதற்காக சிவாவும் இளங்கேவும் சேர்ந்தனர்.
 பள்ளி மைதானம் பெரியது. அதில் 4 ரவுண்டு ஓடினால்தான் 800 மீ. ஆகும். அதைப் பார்த்ததும் சிவாவுக்கு மலைப்பாக இருந்தது. ""டேய் இளங்கோ,.... நம்மால் ஓட முடியுமாடா?....''
 "ஏண்டா முடியாது. முயற்சியுடையார் இகழ்ச்சியுடையார். பயிற்சி செய்வோம்....'' என்றான் இளங்கோ.
 "பயிற்சியா?''
 "ஆமாம்... காலையில் இந்த கிரவுண்ட்ல வந்து ஓடுவோம்!...''
 "அருளை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும். அந்த சபதத்திற்காக வருகிறேன்....'' என்றான் சிவா.
 காலையில் ஆறு மணிக்கு எழுந்து சிவா கிரவுண்டுக்கு வந்து விட்டான். இளங்கோ அங்கிருந்தான்.
 "அருள் ஐந்து மணிக்கே வந்து ஓடிக்கிட்டு இருக்கான்...'' என்று இளங்கோ சொன்னதைக் கேட்டு சிவாவுக்கு உதறலாக இருந்தது. அதைப் பார்த்து இளங்கோ ஆறுதலாக சொன்னான்...""நாம் அவனை விட அதிகமாகப் பயிற்சி செய்வோம்!....''
 "அதுக்கு பலம் வேண்டாமா?''
 இளங்கோ கால் சட்டைப் பையிலிருந்து ஒரு பொட்டலத்தை எடுத்தான். பொட்டலத்திற்குள் ஊற வைத்த மூக்குக் கடலை இருந்தது.
 "இது எதுக்கு?''
 "இதை தினமும் தின்னுட்டு ஓடுவோம்!... நமக்கு பலம் கிடைக்கும்!...'' என்றான் சிவா.
 ஆளுக்கொரு கை மூக்குக் கடலையைத் தின்றனர். அவித்த கடலை என்பதால் எளிதாகத் தின்னலாம். பச்சைக் கடலையை சிவாவால் தின்ன முடியவில்லை. அருளைத் தோற்கடிக்க வேண்டும்.... அதற்கு பலம் வேண்டும் என்று நினைத்து கஷ்டப்பட்டுத் தின்றான்.
 அந்த மைதானத்தில் பலரும் ஓடி வட்டமான தடம் ஏற்பட்டிருந்தது. சிவா தடத்தில் ஓடினான். எடுத்தவுடன் வேகமாக ஓடினான். ஒரு ரவுண்ட் முடிப்பதற்குள் களைப்பாகிவிட்டது. மூச்சு வாங்கியது.
 "தொடக்கத்திலே வேகம் எடுக்கக் கூடாது.... மெதுவாக ஓடணும்.... கடைசி ரவுண்ட்லே வேகமாக ஓடணும்!.... ‘‘ என்றான் இளங்கோ.
 அடுத்த ரவுண்ட் சிவாவுடன் இளங்கோவும் ஓடினான். அருள் ஓடி முடித்துப் போய்விட்டான்.
 மூன்றாவது ரவுண்ட் ஓடும்போது கிரவுண்டில் படுத்துக் கிடந்த நாய் சிவாவின் பின்னால் ஓடி வந்தது. நாலாவது ரவுண்டு ஓடும் போதும் அந்த நாய் சிவாவின் பின்னால் ஓடி வந்தது.
 ஓடும் பயிற்சியை முடித்து விட்டு சிவா வீட்டுக்கு வந்தான். இரண்டு மணி நேரம் கழித்து அவனுக்கு வயிற்று வலி வந்தது.
 வயிற்று வலியைப் பற்றி அம்மாவிடம் சொன்னான். "என்ன சாப்பிட்டாய்?'' என்று அம்மா கேட்டாள்.
 "மூக்குக் கடலை பச்சையாகத் தின்றேன்...'' என்றான் சிவா.
 "பச்சைக் கடலை தின்றால் வயிறுதான் வலிக்கும்'' என்றார் அம்மா.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com