அம்மா!

அம்மா என்றால் அம்மாதான்!அன்பின் தெய்வம் அம்மாதான்!
அம்மா!

அம்மா என்றால் அம்மாதான்!
அன்பின் தெய்வம் அம்மாதான்!
எம்மாம் பெரிய பொறுப்பினை
ஏற்று நடத்தும் அம்மாதான்!

எனக்கு முன்னே எழுகின்றார்!
எத்தனை வேலை பார்க்கிறார்!
மனத்தில் வெறுப்பு கொள்ளாமல்
மணக்க, மணக்க சமைக்கிறார்!

அழுக்குத் துணிகள் வெளுக்கிறார்!
அழகாய்ப் பாத்திரும் துலக்குறார்!
விழிப்பாய் எல்லாம் செய்கிறார்!
வேலைக்கும் சென்று வருகிறார்!

தெரிந்த நண்பர், உறவினர்கள்
விருந்தினர் வந்தால் கவனிப்பு!
தூசு தட்டி, வீட்டைக் காத்து
பளிச்சென வைத் திருக்கிறார்!

தாயின் வேலை களிலே நாமும்
இயன்ற உதவிகள் செய்குவோம்! - அவர்
அன்பை, ஆசிகளை நாம் பெற்று
அகிலம் போற்ற வாழுவோம்!
கவிஞர் மலரடியான்

* வயிற்றுப் பேழையில் வைத்தே பத்து
மாதங்கள் சுமந்த அம்மா!
உயிரும் உடலும் கொடுத்தே பெற்று
உலகத்தைக் காட்டிய அம்மா!

பசியை உணர்ந்தே குருதியைச் சத்துப்
பாலாய்ப் புகட்டிய அம்மா!
அழுதிடும்போது காக்கையை குருவியை
கூப்பிட்டுக் காட்டிய அம்மா!

கட்டிடும் சேலையை பிள்ளை ஆடிட
தொட்டிலாய்க் கட்டிய அம்மா!
தொட்டிலை ஆட்டித் தாலாட்டுப் பாடி
தூங்கிட வைத்த அம்மா!

மண்ணும் விண்ணும் என்தாய் உனக்கு
ஈடாகாது அம்மா!
கண்ணுக்கெதிரில் கைதொட அருகில்
இருக்கும் தெய்வம் என் அம்மா!
- புலேந்திரன்



 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com