வியாழக்கிழமை 22 ஆகஸ்ட் 2019

கங்கை ஆறு!

Published: 27th April 2019 11:02 AM

கருவூலம்

(சென்ற இதழ் தொடர்ச்சி....)

யமுனை நதி!
கங்கையின் முக்கியமான துணையாறு. இந்துக்களால் மிகப் புனிதமானதாகக் கருதப்படும் ஏழு நதிகளில் இதுவும் ஒன்று. வற்றாத ஜீவநதி.
இமயமலையில் உள்ள பண்டர்பூச் சிகரங்களின் தென்மேற்குச் சரிவுகளில் 6387 மீ. உயரத்தில் அமைந்திருக்கும் யமுனோத்ரி பனிப்பாறைகளில் இருந்து யமுனை நதி தோன்றுகிறது.
அங்கிருந்து சுமார் 200 கி.மீ. தூரம் மலைகளின் ஊடாக வேகமாகப் பாய்கிறது. மலைகளில் இருந்து வெளிப்படும் யமுனையானது தூன் பள்ளத்தாக்குப் பகுதியில் சமவெளியில் இறங்குகிறது.

உத்தர்கண்ட் மாநிலத்தில் தன் பயணத்தைத் துவங்கும் யமுனை, ஹிமாச்சல் பிரதேசம், ஹரியானா, தில்லி, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வழியே 1376 கி.மீ. தூரம் பாய்ந்து, அலகாபாத்தில் உள்ள பிரயாகையில் கங்கை நதியுடன் கலக்கிறது.
பெரு நதியான யமுனையின் வடிகால் பகுதிகள் மட்டும் 3,66,223 ச.கி.மீ. அளவுக்குப் பரவியிருக்கின்றன. இதிலிருந்து இந்த நதியின் பிரம்மாண்டத்தைப் புரிந்து கொள்ளலாம்! யமுனைக்கும், இதற்கு இணையாகப் பாயும் கங்கைக்கும் இடைப்பட்ட 69,000 ச.கி.மீ. மிகவும் வளம் கொழிக்கும் பிரதேசங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
யமுனையுடன் அதன் பாதையில் டோன்ஸ், சம்பல் ஸிந்த், பேட்வா, கென், கிரி, ரிஷிகங்கா, குண்டா, ஹனுமான் கங்கா போன்ற பல நதிகள் துணையாறுகளாக சங்கமிக்கின்றன.

இதன் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள பல அணைகளில் இருந்து மின் உற்பத்தி செய்யப்படுவதுடன், வாய்க்கால்கள் மூலம் பாசனத்துக்கான நீரும் பெறப்படுகின்றன. யமுனை நதி கரைகளில் தலை
நகர் தில்லி, பாக்பட், மதுரா, ஆக்ரா, ஃபிரோசாபாத், அலகாபாத் போன்ற நகரங்கள் அமைந்துள்ளன. உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹாலும், பிரம்மாண்டமான ஆக்ரா கோட்டையும் யமுனையை ஒட்டித்தான் அமைந்துள்ளன.

மிகப் பழமையான ரிக் வேதத்திலும், அதர்வண வேதத்திலும், புராணங்களிலும் யமுனையைப் பற்றி வெகுவாக சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது. மேலும் நதி உற்பத்தியாகும் யமுனோத்திரியில் யமுனை தேவிக்கான புனிதமான யமுனோத்ரி ஆலயம் அமைந்துள்ளது.

பாண்டவர்களின் தலைநகரமான இந்திரபிரஸ்தம் யமுனை நதிக்கரையில்தான் (இன்றைய புதுதில்லி) அமைந்து இருந்தது. மாவீரன் அலெக்ஸாண்டரின் தளபதியான செலூகஸ் நிகோடரும், கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் நம் நாட்டிற்கு வந்த கிரேக்கப் பயணி மெகஸ்தனிஸýம் யமுனை நதியைப் பற்றி தங்கள் குறிப்புகளில் எழுதியுள்ளனர்.

அலகாபாத் நகரில் யமுனை, கங்கை சங்கமிக்கும் இடம் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படுகிறது. மிகப் புனிதமாக இந்துக்களால் போற்றி வணங்கப்படும் இந்த திரிவேணி சங்கமத்தில்தான் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளா கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவிற்காக நாடெங்கிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் இங்கு கூடி, சங்கம ஸ்தலத்தில் புனித நீராடுகின்றனர்.
இவ்வளவு பெருமைகள் கொண்ட யமுனை நதி இன்று பெரிதும் மாசு அடைந்துள்ள இந்திய நதிகளில் ஒன்றாக மாறிப் போனது. சமவெளிப் பகுதியில் பல இடங்களில் குறிப்பாக தில்லியைச் சுற்றியுள்ள பகுதிகளில் கழிவு நீர் கலப்பதாலும் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தொழில் மையங்களில் இருந்து வெளியேற்றப்படும் நீர் சேர்வதாலும், யமுனை நதி சில பகுதிகளில் சாக்கடையாகவே மாறிப் போயிருக்கிறது!

நதிகளை பாதுகாக்க அரசாங்கம் பல முயற்சிகள் மேற்கொண்டிருந்தாலும், நாமும் நதிகளின் தூய்மையையும், புனிதத்தையும் காக்க நம்மால் இயன்ற அனைத்தையும் செய்வது அவசியம்! நீர் வளம் காப்போம்! வளம் பல பெறுவோம்!

நிறைவு
தொகுப்பு : கே.பார்வதி, திருநெல்வேலி டவுன்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

தேவதை தந்த பரிசு
அங்கிள் ஆன்டெனா

 ஊட்டச் சத்து சுரங்கம் கொடுக்கா புளி மரம்
 

பொருத்துக...
புதிர்