நேர்மையின் பரிசு!

வரதனுக்கு வருத்தமாக இருந்தது. அன்றுதான் கடைசி நாள். பள்ளிக்கூடத்தில் கல்விச் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.
நேர்மையின் பரிசு!

வரதனுக்கு வருத்தமாக இருந்தது. அன்றுதான் கடைசி நாள். பள்ளிக்கூடத்தில் கல்விச் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில் கலந்து கொள்ள ஒவ்வொரு மாணவனும் இருநூறு ரூபாய் செலுத்த வேண்டும். பள்ளி இறுதி வகுப்பு மாணவர்களுக்கான சுற்றுலா அது. "மிகவும் பயனுடையதாக இருக்கும் தவறவிட்டுவிடாதீர்கள்! '' என்று ஆசிரியர் கூறியிருந்தார். கட்டணம் கட்ட அன்றுதான் கடைசி நாள். சுற்றுலாவில் சேர்ந்து விட வேண்டும் என்று வரதனுக்கு மிகவும் ஆசை.
 அவன் அப்பா கூலித் தொழிலாளி. அன்றாடம் வேலைக்குப் போனால்தான் காசு. போன வாரம் எங்கோ கூலி வேலைக்குச் சென்றபோது கையில் அடிபட்டுக்கொண்டு வந்து விட்டார். எந்த வேலைக்கும் போக முடியவில்லை. ரேஷன் வாங்கவே பணம் இல்லை என்று அப்பா சொல்லிக் கொண்டிருந்தார். பள்ளிச் சம்பளமும் அவன் இன்னும் கட்டவில்லை. இந்த மாத இறுதிக்குள் செலுத்தாவிட்டால் பொதுத் தேர்வுக்கு அனுமதிக்க மாட்டார்கள். என்று பயமுறுத்துக் கொண்டிருந்தார்கள். அறிவிப்புப் பலகையில் அவன் பெயரையும் வெளியிட்டு சிவப்பு மையினால் கீழ்க் கோடிட்டிருந்தார்கள். இந்த நிலையில் வீட்டில் சுற்றுலா செல்ல பணம் எப்படி கேட்பது? சும்மா இருந்து விட்டான்.
 "நாளைக்குள்ளாவது எப்படியாவது பணம் கட்டி விடுடா'' என்று சக மாணவர்கள் அவனை வற்புறுத்தினார்கள். சுற்றுலாக் கட்டணத்தை மட்டும் நீ கட்டி விடு!.... உன்னுடைய உணவு, வழிச் செலவுகளை எல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்'' என்று ஊக்கமூட்டினார்கள்.
 " என்ன செய்வது, எப்படிக் கேட்பது'..... என்று யோசித்துக்கொண்டு நடந்து வரும்போது மைதானத்தின் நுழைவு வாயில் அருகே ஒரு பர்ஸ் கீழே விழுந்து கிடந்ததை அவன் பார்த்தான். எடுத்துப் பார்த்தபோது புது இரண்டாயிரம், ஐநூறு ரூபாய்த் தாள்கள் கத்தையாக இருந்தன. பர்சில் ஏதேனும் முகவரி இருக்கிறதா என்று பார்த்தான். வங்கி ஏ.டி.எம். அட்டை, வேறு சில தாள்கள், குறிப்புகள் தவிர வேறு எதுவும் இல்லை.
 "என்னடா வரதா, ஏன் நின்றுவிட்டாய்??'' என்று கேட்டுக்கொண்டே ஓடோடி வந்தார்கள் நண்பர்கள்.
 "நம் பள்ளிக்கூடத்துக்கு வந்த யாரோதான் இதைத் தவற விட்டிருக்க வேண்டும்.... இதை எப்படியடா உரியவரிடம் சேர்ப்பது?'' என்று கேட்டான் வரதன்.
 "இது அதிர்ஷ்டம்!.... கடவுள் உனக்காகக் கொடுத்திருக்கிறார்!... உன்னுடைய பள்ளிச் சம்பளம், சுற்றுலாக் கட்டணம் எல்லாம் செலுத்திவிடு!... மீதியை வீட்டுச் செலவுக்கு வைத்துக்கொள்!... மணிபர்சை நீ கண்டு எடுத்ததை நாங்கள் யாரிடமும் சொல்ல மாட்டோம்!'' என்றான் ஒருவன்.
 "அது தவறுடா,.... பள்ளிக்கூட மைதானத்தில் கண்டெடுத்த பர்சை அலுவலகத்தில் ஒப்படைத்து விடணும்டா!... அதுதான் நியாயம்!....'' என்றான் வரதன்.
 "நீ பிழைக்கத் தெரியாதவன்டா.... அலுவலத்தில் கொடுத்தால் உரியவிரிடம் சேர்ப்பித்து விடுவார்களா?.... அப்படி கொடுக்க வேண்டும் என்று தோன்றினால் உனக்குத் தேவையானதை எடுத்துக் கொண்டு மீதியை வைத்துக் கொடுத்து விடு!! " என்று யோசனை கூறினான் இன்னொருவன்.
 வரதனுக்கு இந்த யோசனை சரியாகப் படவில்லை. பிறர் பொருளுக்கு ஆசைப் படுவது குற்றம்னு அம்மா எப்போதோ சொன்னது நினைவுக்கு வந்தது. மணிபர்சை அலுவலத்தில் ஒப்படைத்து விட்டான்.
 "இதில் பணம் அப்படியே இருக்கிறதா?.... ஏதாவது எடுத்துக் கொண்டாயா?... உண்மையைச் சொல்!...'' என்று கேட்டார் அலுவலகப் பணியாளர்.
 "அப்படியே இருக்கிறது சார்!... நான் எதுவும் எடுக்கவில்லை!....'' என்றான் வரதன்.
 அந்த பர்ûஸ எடுத்துக் கொண்டு பள்ளி முதல்வர் அறைக்குள் சென்றார் பணியாளர்.
 "பள்ளிக்கூட மைதானத்தில் ஒரு மேடை அமைப்பதற்காக ஒப்பந்தக்காரர் வந்திருந்தார். தன்னுடைய பர்சை தவற விட்டுவிட்டதாக இப்போதுதான் ஃபோன் செய்தார். அவருடையதாகத்தான் இருக்கும்!'' என்று கூறி பர்சை வாங்கி சோதித்துப் பார்த்தார். எல்லாம் சரியாக இருந்ததால் அவருக்கு உடனே ஃபோன் செய்தார்.
 மறுநாள் காலை. மணி அடித்ததும் எல்லா மாணவர்களும் அசெம்பிளியில் கூடினார்கள். இறை வணக்கப் பாடலுக்கு முன் முதல்வர் ஏதேனும் அறிவிப்பு செய்வது வழக்கம்.
 முதல்வர் வரதன் பெயரை உரக்கச் சொல்லி அழைத்தார். தயங்கித் தயங்கி முன்னே சென்று கூட்டத்தின் மத்தியில் முதல்வர் அருகில் போய் நின்றான்.
 "நேற்று நம் பள்ளிக்கூடத்துக்கு வந்த ஒப்பந்தக்காரர் தனது மணி பர்சை இங்கே தவற விட்டுவிட்டார். அதில் கத்தையாகப் பணமும் இன்னும் சில முக்கிய கடிதங்களும் இருந்தனவாம். அந்த பர்சை நமது மாணவர் வரதன் கண்டெடுத்திருக்கிறான். தனக்கு அவசரத் தேவை இருந்தும் கூட பணத்தைக் கண்டு சபலம் அடையாமல் எப்படியோ நமது அலுவலகத்தில் ஒப்படைத்து விட்டான்! தகவல் அறிந்த ஒப்பந்தக்காரர் மகிழ்ச்சியடைந்து வரதனின் நேர்மையைப் பாராட்டி அவனுடைய மேல் படிப்புக்கான செலவு அனைத்தையும் தான் ஏற்றுக் கொள்வதாகக் கூறியிருக்கிறார். வரதனின் நேர்மையைப் பாராட்டி அவன் சுற்றுலா செல்வதற்கான கட்டணத்தை நான் செலுத்துகிறேன்....'' என்றார். வரதனைப் பாராட்டும் வகையில் அனைத்து மாணவர்களும் கரகோஷம் செய்தார்கள்!
 மாயூரன்
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com