புத்தகத்தின் மதிப்பு!

​அதஸ்தாசியஸ் என்பவர் ஒரு துறவி.  அவர் மடத்தை நிர்மாணித்திருந்தார். அதில் நிறைய சீடர்கள் இருந்தனர். அந்த மடம் நன்றாக நிர்மாணிக்கப்பட்டிருந்தது. மடத்தின் நிர்வாகமும் மிக நன்றாக இருந்தது.
புத்தகத்தின் மதிப்பு!


அதஸ்தாசியஸ் என்பவர் ஒரு துறவி.  அவர் மடத்தை நிர்மாணித்திருந்தார். அதில் நிறைய சீடர்கள் இருந்தனர். அந்த மடம் நன்றாக நிர்மாணிக்கப்பட்டிருந்தது. மடத்தின் நிர்வாகமும் மிக நன்றாக இருந்தது. அந்த மடத்தில் துறவி அதஸ்தாசியஸ் ஒரு நூலகத்தை ஏற்படுத்தியிருந்தார். அங்கிருந்த நூல்கள்  பெரும்பாலும் விலை மதிப்பு மிக்கவையாக இருந்தன. அதில் ஒரு புத்தகம் மிக அபூர்வமானது. 

ஒரு நாள் அந்த மடாலயத்தில் இருந்த இளந்துறவி ஒருவர் அந்தப் புத்தகத்தைப் பார்த்தார். அதை எப்படியும் தன் வசப்படுத்திக் கொள்ள நினைத்தார். யாரும் இல்லாத நேரத்தில் அதனைத் திருடியும் விட்டார். திருட்டு நடந்த அன்றே காணாமல் போனது தலைமைத் துறவிக்குத் தெரிய வந்தது. ஆனால் அதை யார் திருடியிருப்பார்கள் என்பதை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒவ்வொருவரின் அறையையும் சோதனையிடுவதற்கும் அவரது மனம் ஒப்ப வில்லை. தனது சீடர் ஒருவருக்கு அதனால் அவ மரியாதை ஏற்படுவதை அவர் விரும்பவில்லை. 

இதனிடையே புத்தகத்தைத் திருடிச் சென்ற இளம் துறவி அதை வாங்குவதற்குரிய ஒரு சரியான தனவந்தரைக் கண்டுபிடித்து விட்டார். புத்தகத்தை தனவந்தரிடம் காண்பத்தார் இளந்துறவி. அதற்கு ஈடாக ஒரு சவரன் தங்கத்தைக் கேட்டார். 

தனவந்தர் புத்தகத்தைப் படிக்காமல் ஒரு சவரன் தங்கத்தைத் தர விரும்பவில்லை. அதனால் ""புத்தகத்தை என்னிடம் கொடுத்துவிட்டுச் செல்லுங்கள்... படித்துவிட்டு நான் ஒரு முடிவுக்கு வருகிறேன்.... அப்போதுதான் அதன் மதிப்பை என்னால் உணர முடியும்!... ''  என்று கூறிவிட்டார். 

அதற்குச் சம்மதித்த இளந்துறவியும் புத்தகத்தை தனவந்தரிடம் தந்துவிட்டுப் போனார். 

இளந்துறவி சென்றதும் தனவந்தர் அந்தப் புத்தகத்தை கையோடு எடுத்துக் கொண்டு நேராக அதஸ்தாசியஸிடம் சென்றார். ""இந்தப் புத்தகத்தின் மதிப்பைச் சொல்லுங்கள்....'' என்று கேட்டுக் கொண்டார்.  புத்தகத்தைப் பார்த்தார் அதஸ்தாசியஸ். மிக அபூர்வமான புத்தகமான அது மடத்திற்குச் சொந்தமானது என்பதை அறிந்துகொண்டார். எனினும் அதை அவர் தனவந்தரிடம் வெளிப்படுத்தவில்லை. 

தனவந்தரோ, ""என்னிடம் ஒருவர் இந்தப் புத்தகத்தை விற்க வந்தார். ஒரு சவரன்  பொற்காசையும் கேட்டார்.  நீங்கள் பெரிய அறிவாளி. இந்தப் புத்தகம் அவ்வளவு மதிப்பு பெறுமா?... அதைக் கேட்கத்தான் உங்களிடம் வந்தேன்....'' என்றார்.

அதஸ்தாசியஸூம் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், ""அப்படியா?... இந்தப் புத்தகத்திற்கு ஒரு சவரன் என்பது மிகக் குறைவு!... இதற்கு இரண்டு சவரன் தங்கம் கொடுக்கலாம்!... மேலும் புத்தகங்களிடமிருந்து பெறுகின்ற அறிவுக்கு மதிப்பு என்பதை அளவிட முடியுமா?... ஏதோ நீங்கள் கேட்டீர்கள் என்று சொன்னேன்!....'' என்றார்.

தனவந்தர் நன்றி தெரிவித்துவிட்டு  அங்கிருந்து கிளம்பினார். மறுநாள் இளந்துறவி புத்தகத்திற்கான வெகுமதியை பெறப்போனார். இளந்துறவியிடம் தனவந்தர், ""இந்தாருங்கள்!... ஒரு சவரன் தங்கம்! வைத்துக்கொள்ளுங்கள்!... உங்களைப் போன்ற ஒருவரிடம் இந்தப் புத்தகத்தைக் காண்பித்து இதன் மதிப்பு எவ்வளவு பெறும்"... என்று கேட்டேன்!.... அவர் கூடுதலாகச் சொன்னார்... எனவே தாங்கள் கேட்ட ஒரு சவரன் மதிப்பு குறைவுதான். எனவே நீங்கள் கேட்டுக்கொண்டபடி   உங்களுக்கு ஒரு சவரன் தங்கத்தைத் தருகிறேன்....'' என்றார்.

""என்னது?... என்னைப் போன்ற ஒருவரிடமா கேட்டீர்கள்? யார் அவர்?...'' இளந்துறவி படபடத்தார்!

""ஆமாம்!.... அவர் பெயர் அதஸ்தாசியஸ்!...துறவிகளின் மடத்தலைவர்!...'' என்றார் தனவந்தர்.

அதைக் கேட்டதும் இளந்துறவியின் முகம் வெளிறியது! ""அவர் வேறெதுவும் சொன்னாரா?'' என்று கேட்டார்.

""இல்லை'' ஒரே வார்த்தையில் முடித்துக் கொண்டார் தனவந்தர்.

அப்போதுதான் தனது குருவின் உயர்ந்த உள்ளம் இளந்துறவிக்குப் புரிந்தது.

"குரு நினைத்து இருந்தால் என்னைக் காட்டிக் கொடுத்திருக்கலாம். ஆனால் அன்புள்ளம் கொண்ட அவர் அதைச் செய்யவில்லை...' என மனதிற்குள் நினைத்துக் கொண்ட இளந்துறவி உடனே ""ஐயா, அந்தப் புத்தகத்தின் அருமை எனக்குத் தெரியாமல் போய்விட்டது!.... இப்போது என் எண்ணத்தை நான் மாற்றிக் கொண்டுவிட்டேன்... இனி புத்தகத்தை விற்பதாக இல்லை... தயவு செய்து அந்தப் புத்தகத்தைத் தந்து விடுங்கள்!... '' என்று மன்றாடினார்.

""உனக்கு இரண்டு சவரன் தருகிறேன்... அதுவே துறவி அதஸ்தாசியஸ் கூறிய விலை!... புத்தகம் என்னிடமே இருக்கட்டும்!'' என்றார்.

ஆனால் இளந்துறவி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. புத்தகத்தைத் திருப்பி வாங்கிக் கொண்டவர் நேராக அதஸ்தாசியஸ் இருந்த மடத்திற்குச் சென்றார். திருடிய புத்தகத்தை குருவிடம் கொடுத்து தன்னை மன்னிக்கும்படி கேட்டுக் கொண்டார். 

உடனே அதஸ்தாசியஸ், ""இதை உன் வசமே வைத்துக்கொள்!... இந்தப் புத்தகத்தை நீ பெறுவதற்கு விரும்பினாய்!... அதனால் அது உன்னிடமே இருக்கட்டும்! '' என்றார்.

""இல்லையில்லை....  இந்த புத்தகம் மடத்தில் இருந்தால்தான் அதற்கு மதிப்பு. எனவே அதை நீங்கள் பெற்றுக் கொண்டே ஆக வேண்டும்... இன்னொன்று உங்கள் பரந்த ஞானம் எனக்குக் கிடைக்க வேண்டும்... அதனால் என்னை இந்த மடத்திலேயே தங்கியிருக்கு அனுமதிக்க வேண்டும்!....'' என்றார் இளந்துறவி.

இளந்துறவியின் கேரிக்கை உடனடியாக ஏற்கப்பட்டது! அதன்பின் தனது வாழ்நாள் முழுவதையும் அந்த மடத்திலேயே கழித்தார் இளந்துறவி! அதன் முன்னேற்றத்திற்காக இயன்ற சேவைகளைச் செய்துகொணடிருந்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com