கருவூலம்: ஹரியானா மாநிலம்

இக்குளம் மிகவும் பழமையானது. மகாபாரத காலம் தொட்டு இன்று வரை இருக்கிறது.
கருவூலம்: ஹரியானா மாநிலம்

(சென்ற இதழ் தொடர்ச்சி...)

பிரம்ம சரோவர் குளம்!

இக்குளம் மிகவும் பழமையானது. மகாபாரத காலம் தொட்டு இன்று வரை இருக்கிறது. இந்த பெரிய குளம் 3300 அடி நீளமும், 1500 அடி அகலமும், 15 அடி ஆழமும் கொண்டது. இதில் புனித நீராடுவது மிகவும் சிறப்பாகக் கருதப்படுகிறது. விசேஷ காலங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீராடுகின்றனர். 

இக்குளத்தின் அருகே அர்ஜுனனுக்கு பகவான் ஸ்ரீகிருஷ்ணர் கீதோபதேசம் செய்யும் காட்சியைச் சித்தரிக்கும் வகையில் வெண்கலத்தால் செய்யப்பட்ட பெரிய தேரும் அதில் கிருஷ்ணரும், அர்ஜுனனும் இருப்பது போன்றும் சித்தரிக்கப்பட்டுள்ளது. 

கிருஷ்ணா அருங்காட்சியகம்!

கிருஷ்ணர் பற்றிய தகவல்கள் கதைகள் மற்றும் தத்துவங்கள் போன்றவற்றை விளக்கும் கலைப்பொருட்கள், சிலைகள், ஓவியங்கள், எழுத்துப் பிரதிகள் மற்றும் நினைவுப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. 

பீஷ்ம குண்டம்!

மகாபாரதப் போரில் தை மாதம்  உத்தராயணத்தில் (உத்தராயணம் - சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி நகரும் தோற்றம். )  வளர்பிறை ஏழாம் நாள் அம்புப் படுக்கையில் வீழ்ந்த  பீஷ்மர் வீடு பேறு அடைந்த இடம். இவ்விடம் இந்துக்களுக்கு மிகப் புனிதமாகக் கருதப்படுகிறது.

ஜோதிசர்

பகவான் ஸ்ரீகிருஷ்ணர் யுத்த களத்தில் அர்ஜுனனுக்கு  பகவத் கீதை அருளிய இடம். 

பிரம்ம குண்டம்!

அர்ஜுனன் பீஷ்மருக்கு தண்ணீர் தாகம் தீர்க்க தன் அம்பினால் பூமியை துளைத்து தண்ணீர் கொண்டு வந்த இடம்தான் பிரம்ம குண்டம் என்ற குளம். 

கல்பனா சாவ்லா கோளரங்கம்!

இந்திய வீராங்கனையான கல்பனா சாவ்லா நினைவாக அமைக்கப்பட்ட கோளரங்கம் இது.

இன்னும் குருúக்ஷத்திர அறிவியல் அருங்காட்சியகம், பிர்லா மந்திர், சிவன் கோயில் உள்ளிட்ட பல இடங்கள் உள்ளன.

மொர்னி மலை!

ஹரியானா மாநிலத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்களில் மொர்னி மலையும் ஒன்று. இமய மலையின் ரம்யமான இயற்கை எழில் கொஞ்சும் தோற்றத்தை இம்மலை உச்சியில் இருந்து பார்த்து ரசிக்கலாம்! மொர்னி கிராமம் சிவாலிக் மலைத்தொடரின் ஒரு பகுதியான மொர்னி மலையின் 1276 மீ  உயரத்தில் அமைந்துள்ளது. மலைச் சரிவில் உள்ள மொர்னி நீர்வீழ்ச்சி, காகர் நதி பாயும் அழகிய பள்ளத்தாக்கு,  நீர்வீழ்ச்சி, மலையடிவாரத்தில் இரண்டு ஏரிகள், பலவகையான  தாவரங்கள், ஒரு பழைய கோட்டை, 10 - ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு சிவன் கோயில் என சுற்றுலாப் பயணிகளை கவரும் பல பொழுது போக்கு அம்சங்கள் கொண்ட அருமையான இடம். இயற்கையை நேசிப்பவர்களுக்கும், மலை ஏற்றத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கும் மொர்னி மலை ஒரு வரப்பிரசாதமே!

பிஞ்சூர் தோட்டம்!

மொகலாயர்களின் கற்பனைத் திறனையும் கலை நயத்தையும் ஒருங்கே பிரதிபலிக்கும் இயற்கை எழில் கொண்ட அழகிய தோட்டம் இது! இந்த தோட்டம் 17 - ஆம் நூற்றாண்டில் ஒளரங்கசீப் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டது. 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட இத்தோட்டம் பிஞ்சூர் கிராமத்தில் உள்ளதால் பிஞ்சூர் தோட்டம் எனப்படுகிறது.

காலப்போக்கில் ஏற்பட்ட மாறுதல்களினால் இத்தோட்டம் கவனிப்பாரற்றுப் போனது. அழகிய சோலைவனமாகக் காட்சியளித்த தோட்டம் முட்புதர்கள் சூழ்ந்து பாழ்பட்டுப் போனது. அதனை யாத்வீந்திரா என்ற மன்னர் முழுமையாகப் புனரமைக்க முயற்சி செய்தார். மொகலாயர்களின் தோட்டக்கலையில் இருந்து சிறிதும் மாறுபட்டுவிடக் கூடாது என்ற கவனத்தோடு அயராது முயற்சி செய்து சீர் செய்தார். அதனால் "யாத் வீந்திரா தோட்டம்' என்றும் அழைக்கப்படுகிறது. தற்போது இத்தோட்டம் ஏழு அடுக்கு வரிசைகளுடன் மனதைக் கொள்ளை கொள்ளும் இயற்கை அழகுடன் காட்சியளிக்கிறது.

நுழைவு வாயில்ல் "சிஷ் மஹால்' எனப்படும் கண்ணாடி அரண்மனை உள்ளது. இரண்டாவது அடுக்கு வரிசையில் செங்கோட்டை அரண்மனை அமைந்திருக்கிறது. மூன்றாவது வரிசையில் சைப்ரஸ் மரங்கள், அடர்ந்த பூச்செடிகள், பழத்தோட்டங்கள் என காட்சியளிக்கிறது. 

நான்காவது வரிசையில் நீர் சூழ்ந்த அரண்மனை மற்றும் சதுர வடிவ நீர் ஊற்றுகள் உள்ளன. ஐந்தாவது அடுக்கு வரிசை மரங்கள் சூழ்ந்து மலைக்க வைக்கிறது. அதைத் தொடர்ந்து வட்ட வடிவ அரங்கம், அதன் அருகில் மியூசியம் என இத்தோட்டம் நேர்த்தியான வடிவமைப்புடன் பர்ப்பவர்களை வியக்க வைக்கிறது. 

தேசிய கள்ளிச் செடித் தோட்டம்! -பஞ்சகுலா-

பஞ்சகுலாவில் இருக்கும் கள்ளிச் செடித் தோட்டம் ஆசியாவிலேயே மிகப் பெரியதாகும்! இங்கு பல அரிய வகைக் கள்ளிச் செடிகள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு "தேசிய கள்ளிச் செடி மற்றும் சதைப் பற்றுள்ள தாவர  பூங்காக்கள் ஆராய்ச்சி மையமும்' உள்ளது.  இங்கு கள்ளிச் செடிகளின் விற்பனையும் நடைபெறுகிறது.

கலேசர் தேசிய பூங்கா!

யமுனா நகர் மாவட்டத்தில் சிவாலிக் மலைத்தொடரில் உள்ள வனப்பகுதியில் 53 ச.கி.மீ. பரப்பளவு வனம் தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பூங்கா சிறுத்தை, யானை மற்றும் பறவைகளுக்கு பிரசித்தி பெற்றது. சுற்றுலா பயணிகளுக்கு தேவையான பல வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. 

சுல்தான்பூர் தேசிய பூங்கா!

முன்பு பறவைகள் சரணாலயமாக இருந்தது இப்பொழுது பாதுகாக்கப்பட்ட தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூர்கான் மாவட்டத்தில் உள்ள இந்த தேசிய பூங்காவில் 250 வகையான பறவைகளை கண்டு களிக்கலாம். ஃபிளமிங்கோ, எகிப்து கழுகுகள், சைபீரியன் கொக்குகள், பிளாக் விங்ஸ், மஞ்சள் வாலாட்டிக் குருவி, உட்பட பல பறவகள் பார்த்து ரசிக்க தொலைநோக்கி வசதியுடன் நான்கு காட்சி கோபுரங்கள், ஒரு சிறுவர் பூங்கா, நூலகம், ஒரு விளக்க மையம், உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன. பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலம்!

இந்த இரண்டு தேசிய பூங்காக்கள் தவிர பத்துக்கும் மேற்பட்ட வனவிலங்கு சரணாலயங்களும், மான் பூங்காவும் இங்குள்ளன.

பஞ்சகுலா - மானசாதேவி கோயில்!

100 ஏக்கர் பரப்பளவில் 1815 - இல் கட்டப்பட்ட சக்தி தேவிக்கான பழமையான கோயில் இது! சிவாலிக் மலையின் அடிவாரத்தில் இருக்கும் இக்கோயிலுக்கு நவராத்திரியின் போது, ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். 

ஹரியானா மாநிலம் பலதரப்பட்ட சுற்றுலா பயணிகளுக்கும் ஏற்றது. வரலாற்றில் விருப்பம் கொண்டவர்களுக்கு தொல்லியல் தளங்கள், அருங்காட்சியகங்கள், பத்துக்கும் மேற்பட்ட பழமையான கோட்டைகள், ஆன்மிகப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு குருúக்ஷத்திரம், இயற்கையை ரசிப்பவர்களுக்கு மோர்னி மலை மற்றும் வனப்பகுதிகள் என அனைவருக்கும் ஏற்ற சுற்றுலாத் தலமாக ஹரியானா திகழ்கிறது!

நிறைந்தது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com