அரங்கம்: இரு நண்பர்கள்!

அரங்கம்: இரு நண்பர்கள்!

மதுசூதனன்  : (சத்தமாக)   டென்த் கிளாஸ் இதானே ?

காட்சி : 1
இடம் :  பள்ளி வளாகம் / வகுப்பறை 
நேரம் : ஜூன் மாதம் / காலை 7.40
மாந்தர் :  அபிஷேக்,  மதுசூதனன்
(அபிஷேக்  சாக்பீஸால் தேதி எழுதிக்கொண்டிருக்கிறான்.  மதுசூதனன் முதுகுப்பையுடன் உள்ளே வருகிறான்.)

மதுசூதனன்  : (சத்தமாக)   டென்த் கிளாஸ் இதானே ?
அபிஷேக்  :  ( சட்டென்று திரும்பி)  ப்ரோ..  ஏன் பயமுறுத்தற?  இதுவேதான்.. நியூ அட்மிஷனா ?  போன வருஷம் எந்த ஸ்கூலு? 
மதுசூதனன் : சேலம்ல படிச்சேன்..  அப்பாவுக்கு டிரான்ஸ்ஃபர் ஆனதில ஸ்கூல் மாத்த வேண்டியதாப் போச்சு.. நீ ஓல்ட் ஸ்டூடெண்ட்டா,  ப்ரோ.. ?    
அபிஷேக்  : அஃப் கோர்ஸ்.. எனக்குத் தெரிஞ்சு நான் இங்க மட்டுமேதான் படிச்சிட்டிருக்கேன்..  ஹையர் செகண்ட்ரியும் இங்கதான்.. எல்லாம் அவன் செயல்..  ( மேலே கைகாட்டுகிறான்) 
மதுசூதனன் :அப்போ உனக்கு இந்த ஸ்டாஃப்ஸ் பத்தி நல்லா தெரியும், இல்லியா?
அபிஷேக்  : ஏதோ கொஞ்சம்..  நீ போட்ருக்க கண்ணாடி பவர்-ரா?
மதுசூதனன் : ஆமா மியோப்பியா .. அதாவது கிட்ட பார்வை..
அபிஷேக்  :  மியோப்பியா -னா கிட்ட பார்வைனு எங்களுக்கும் தெரியும்..
(மதுசூதனன் சிரிக்கிறான்.)

காட்சி : 2
இடம் :  பள்ளி வளாகம் /  விளையாட்டு மைதானம்
நேரம் : ஜூலை மாதம் / மாலை 3.10
மாந்தர் :  அபிஷேக்,  மதுசூதனன்.
(அபிஷேக் மர நிழலில் அமர்ந்திருக்கிறான்.  மதுசூதனன் வியர்வை வடிய கலைத்துப் போய் வருகிறான்)

அபிஷேக்  :  மது..  உன்னை ரொம்ப நேரமா பார்த்துட்டுத்தான் இருந்தேன்.. ஷார்ட் பாஸ் நல்லா பண்ற.. பட்,  சீக்கிரம் டயர்ட் ஆகிட்டேனு நினைக்கிறேன்..
மதுசூதனன் : ஆமா.. இந்த ஊருக்கு வந்ததுக்கப்றம் காலையில வார்ம் அப் பண்றதேயில்ல..  அதனாலாயிருக்கும்..
அபிஷேக்  : ஏன் பண்றதில்ல..?
மதுசூதனன் : எங்க போய் பண்றது..  வீட்டுக்குள்ள எக்ûஸர்ஸ் பண்ண எனக்கு எப்பவுமே பிடிக்காது..
அபிஷேக்  :  அப்போ,  நீ டெய்லி காலையில ஜி.ஹெச். ரோட்டுக்கு வா.. பார்க்குக்குப் போலாம்..  ஜாக், புல் அப் எல்லாம் பண்ணலாம்..
மதுசூதனன் : நீ டெய்லி அங்கதான் போறியா ?
அபிஷேக்  : அதெல்லாம் உனக்கு எதுக்கு? வா-ன்னா வா..  அவ்ளோதான்..
(மதுசூதனன்  சிரிக்கிறான்)

காட்சி : 3
இடம் :  பள்ளி வளாகம் /  வகுப்பறை 
நேரம் : ஆகஸ்ட் மாதம் / காலை 11. 20
மாந்தர் :  அபிஷேக்,  மதுசூதனன்.
(அபிஷேக்  கையில் விடைத்தாளுடன் வந்து மதுசூதனன் அருகில் அமர்கிறான். மதுசூதனன் அபிஷேக்கின் விடைத்தாளை வாங்கிப் பிரிக்கிறான்)

மதுசூதனன்  : ச்சே..  செம்ம ஹெண்ட்ரைட்டிங்..  அடித்தல் திருத்தலே இல்ல.. திறமை -டா..
அபிஷேக்  :  ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் பாரு எவ்ளோன்னு..   பேப்பர்ல ப்ளூ-வை விட ரெட் இங்க்தான் அதிகமாயிருக்கு..  நீதான்  படிப்பாளி..  பக்காவா எழுதியிருக்கே..
மதுசூதனன்  : வீட்டுல கதை புக் நிறைய படிப்பேன்..  இங்க்லீஷ் தமிழ் ரெண்டுலேயும்.. அதனால அவ்வளவா மிஸ்டேக்ஸ் இருக்காது..  உன்னை மாதிரி குண்டு குண்டா எழுத எல்லாம் என்னால முடியாதுப்பா..
அபிஷேக்  :  எனக்கு ஏதாவது கதை புக் கொடு..  நானும் ட்ரை பண்ணிப் பார்க்கறேன்..
மதுசூதனன்  : என்ன மாதிரி புக் வேணும் ?
அபிஷேக்  :  அதெல்லாம் என்னான்னே  தெரியாதுடா..  நீயா பார்த்துக் கொடு.
(மதுசூதனன் சிரிக்கிறான்)

காட்சி : 4
இடம் :  பல இடங்கள் 
மாந்தர் :  அபிஷேக்,  மதுசூதனன்

(காஃபி ஷாப் : அபிஷேக் மதுசூதனன் அருகில் ஒரு தட்டு கேக்கை வைக்கிறான். கோயிலுக்குச் செல்கிறார்கள்... மதுசூதனன் அபிஷேக்கின் நெற்றியில் திருநீறு வைக்கிறான்....வீட்டுக்குச் செல்கிறார்கள்.,.. அபிஷேக்கும் மதுசூதனனும் தொலைக்காட்சியின் முன் அமர்ந்திருக்கிறார்கள்)

காட்சி : 5
இடம் :  அபிஷேக்கின் வீடு
நேரம் : ஜனவரி மாதம் /  இரவு 8.15

மாந்தர் :  அபிஷேக்,  மதுசூதனன்
அபிஷேக் :  ( திறன்பேசியில்) ஹலோ.. மது,  எங்கப்பா புது மொபைல் வாங்கிட்டாரு..  இப்போ அதிலயிருந்துதான் கால் பண்றேன்.. 
மதுசூதனன் : (குரல்) சூப்பர்.., நாளைக்குத்தானே வாங்கறதா இருந்துச்சு.. இன்னிக்கேவா ?
அபிஷேக் :  தெரியல..  வாங்கிட்டு வந்துட்டாரு..  
ஃபர்ஸ்ட் ஃபர்ஸ்ட்-டா என்ன கேம் இன்ஸ்டால்
பண்ணலாம்.. ?
மதுசூதனன் : (குரல்) கேம் -மா? அதெல்லாம் வேஸ்ட் ஆஃப் டைம் ... வேற எதாவது டவுன்லோட் பண்ணு..
அபிஷேக் :  வேற என்னடா இருக்கு ?  எனக்கு அதெல்லாம் ஒண்ணும் தெரியாது.. நீயே சொல்லு..
மதுசூதனன் : (குரல்) நியூஸ் ஏப் எடு..  தினமணி,  ஹிந்து மாதிரி. .  ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்..
அபிஷேக் :  ( சோர்வாக)  அப்டியா.  சரி, நீ சொல்ற..  அதையே பண்றேன்.. அறிவாவது வளரட்டும்.. 
(மதுசூதனன்  சிரிக்கிறான்)

காட்சி : 6
இடம் :  முதன்மைச் சாலை 
நேரம் : ஃபிப்ரவரி மாதம் /  மாலை 4.45
மாந்தர் :  அபிஷேக்,  மதுசூதனன்.
(அபிஷேக் மிதிவண்டியைத் தள்ளிக்கொண்டு வருகிறான். மதுசூதனன்  பக்கவாட்டில் நடந்து வருகிறான்)

அபிஷேக் :  ஏன் காலையிலேர்ந்து ஒரு மாதிரி இருக்க?
மதுசூதனன் : (சோர்வாக)  எனக்கு என்னமோ மாதிரி இருக்கு..  சொல்ல தெரியல..
அபிஷேக் : நேரடியா சொல்லுடா... 
நீ நார்மலா பேசறதே எனக்குப் புரியாது..
மதுசூதனன் : ( கவலையாக)  என்னை ஹாஸ்ட்டல்ல சேர்க்கப் போறாங்க..  நான் இதுக்கு முன்னாடி அங்கெல்லாம் இருந்ததே இல்ல..
அபிஷேக் : (  நின்று) எதுக்கு இப்ப ஹாஸ்டல் ?
மதுசூதனன் : எங்கப்பாவுக்கு ப்ராஞ்ச் மாறணும்.. வேற ஏரியா..  சோ,  எக்ஸாம் வர்றதால என்னை ஹாஸ்ட்டல்ல தங்கி படிக்கச் சொல்றாங்க.. 
அபிஷேக் : நீ என்ன சொன்ன?
மதுசூதனன் : நான் என்ன சொல்றது..  வேற வழியில்ல.. 
அபிஷேக் :  உனக்குப் பிரச்சனை இல்லேன்னா எங்க வீட்லேயே தங்கிக்கலாம்.. எங்கப்பாக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்.. உனக்கும் ஈஸி,  எனக்கும் கூடசேர்ந்து படிக்க ஒரு கம்பெனி  ஆச்சு..  ம்ம்ம்?
(மதுசூதனன் கண் கலங்குகிறான்)


காட்சி : 7
இடம் :  அபிஷேக்கின் வீடு / மாடி 
நேரம் : மார்ச் மாதம் /  இரவு 8.55
மாந்தர் :  அபிஷேக்,  மதுசூதனன்.
(அபிஷேக் படியேறி வருகிறான். மதுசூதனன் 
சலவைக் கல்லின் மீது அமர்ந்து ரூபிக் க்யூபைத் திருப்பிக்கொண்டிருக்கிறான்)

அபிஷேக் :  அப்பா நம்பவே மாட்டேங்கிறாருடா..  ரிவிஷன் டெஸ்ட்ல ஃபர்ஸ்ட் டைம் எய்ட்டி ஃபைவ் பர்ùஸண்ட் வாங்கியிருக்கிறேன்னு சொல்றேன்,  மது எங்க உக்காந்து எழுதினான்னு கேக்கிறாரு..
மதுசூதனன் : (நிமிராமல்)  அவர் சும்மா காமெடி பண்றார்..  நம்ம ராத்திரி முழுக்க படிக்கிறது அவருக்குத் தெரியும் ..
அபிஷேக் :  முன்னாடி எல்லாம் அலாரம் வெச்ச மாதிரி டாண் -னு ஒன்பதரைக்குத் தூங்கிடுவேன்..  உன்னாலதான் எனக்குப் படிக்கிறதுல இன்ட்ரெஸ்ட்டே வந்துச்சு.. 
(மதுசூதனன் அமைதியாக ரூபிக் க்யூபைத் திருப்புவதில் மும்மரமாக இருக்கிறான்.)
அபிஷேக் :  ( சோகமாக)  இன்னும் ஒரு மாசத்துல நீ போயிடுவே இல்ல..  அப்றம் நாம மீட் பண்ணவே முடியாதா ?
மதுசூதனன் : ( நிமிர்ந்து)  நோ செண்ட்டிமெண்ட்ஸ்-னு
எத்தனை தடவ சொல்லியிருக்கேன்..  அதான் வீடியோ கால்-னு ஒன்னு இருக்கே..
அபிஷேக் :  ம்ம்ஸ்ஸ்..  அதெல்லாம் பத்தாது..  உன்னைப் பிரியறதை நெனைச்சா ...
(அமைதியாகிறான். மதுசூதனன் அபிஷேக்கிடம் ரூபிக் க்யூபை வீசுகிறான். நிறங்கள் சேர்ந்திருக்கின்றன) 

காட்சி : 8
இடம் :  வெவ்வேறு இடங்கள். 
மாந்தர் :  அபிஷேக்,  மதுசூதனன்.
(கோயில் : அபிஷேக் கும் மதுசூதனனும் கரம் கூப்பி கண்களை மூடியிருக்கிறார்கள்.

தேர்வு அறை : அபிஷேக் தேர்வு எழுதுகிறான் .
மதுசூதனன் விடைத்தாளை நூலால் கட்டுகிறான். 
பள்ளி வளாகம் :  அபிஷேக்கும் மதுசூதனனும்
வினாத்தாள் பார்த்துப் பேசுகிறார்கள்)

காட்சி : 9
இடம் :  அபிஷேக்கின் வீடு / வாசல்
நேரம் : ஏப்ரல் மாதம் / மாலை 6 மணி 
மாந்தர் :  அபிஷேக்,  மதுசூதனன்.
(டெம்போ ஒன்று இரைந்துகொண்டு நிற்கிறது)

அபிஷேக் :  எல்லாம் எடுத்து வெச்சாச்சா ..  செக் பண்ணிடியா ?
மதுசூதனன்: ம்ம்ம்..எல்லாம் ஓ.கே.
அபிஷேக் :  ஒன்னு ஃபோன் பண்ணு இல்ல ஃபோன் பண்ணா ஒழுங்கா எடு.. 
மதுசூதனன் : ம்ம்ம்..
அபிஷேக் :   ரிசல்ட் பார்த்துட்டு கண்டிப்பா கால் பண்ணு..  ரெண்டு  பேரும் நல்ல மார்க்தான் எடுப்போம்..  சந்தேகமே இல்ல..
மதுசூதனன்: ம்ம்ம்..
அபிஷேக் :   ஓ.. மறந்துட்டேன் உன்னோட ஸ்ட்டோரி புக்ஸ் என் கப்போர்ட்லதான் இருக்கு..  இரு,  எடுத்துட்டு வரேன்.. 
மதுசூதனன் : வேண்டாம் அதை நீயே வெச்சுக்கோ..  உன்னோட ரூபிக் க்யூப் எங்கிட்டதான் இருந்துச்சு..  இரு,  பாக்கறேன்.. 
அபிஷேக் : வேண்டாம்..  அதை நீயே வெச்சுக்கோ..
(டெம்போ ஹாரன் ஒலிக்கிறது. மதுசூதனன் புறப்படுகிறான். அபிஷேக் கண்களில் நீர் வழியக் கை அசைக்கிறான். மதுசூதனன் கண் கலங்குகிறான்)

( திரை)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com