வியாழக்கிழமை 21 பிப்ரவரி 2019

கருவூலம்: பாண்டிச்சேரி - யூனியன் பிரதேசம்

By கே.பார்வதி, திருநெல்வேலி டவுன்.| DIN | Published: 01st December 2018 03:29 PM

புதுச்சேரி
ஒன்றியப் பகுதி - (யூனியன் பிரதேசம்) 

யூனியன் பிரதேசம் என்பது நிர்வாகத்திற்கான அமைப்பு. இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி, மாநிலங்களைப் போல் இல்லாமல் யூனியன் பிரதேசம் என்பது குடியரசுத் தலைவரால் நேரடியாக நிர்வாகம் செய்யப்படுகிறது. அதாவது, தேர்தல் நடத்தப்படாமல், குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்ட ஆளுனரோ, அல்லது தலைமை நிர்வாகியோ யூனியன் பிரதேசத்தை குடியரசுத் தலைவரின் சார்பாக நிர்வாகம் செய்வார். 

சில யூனியன் பிரதேசங்களில் சட்டப்பேரவை அல்லது அமைச்சரவை அல்லது இரண்டையுமோ அமைத்துக் கொள்ளவும், அரசியல் அமைப்புச் சட்டம் வழி வகுக்கிறது. 

அவ்வகையில் தற்போது டெல்லி மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசங்கள், தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட  சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டு சட்டப் பேரவையைக் கொண்டுள்ளது. 

ஆனால் இவற்றிற்கு சில சட்டங்களை இயற்றுவதில் குடியரசுத் தலைவர் ஒப்புதல் தேவை. 

அவ்வகையில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 30 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவை உள்ளது. 

புதுச்சேரி யூனியன் பிரதேசம் அங்குமிங்குமாக சிதறிய மாறுபட்ட நில அமைப்புடன் கூடியது. மொத்தம் 492 ச.கி.மீ பரப்பளவு கொண்டது.

இந்த யூனியன் பிரதேசம்  நான்கு மாவட்டங்களைக் கொண்டது. அவை புதுச்சேரி, காரைக்கால், ஏனாம், மாஹே முதலியவை ஆகும்.  

புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படாத நான்கு மாவட்டங்களைக் கொண்டுள்ளது. வங்காள விரிகுடாவை ஒட்டி புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் மாவட்டங்கள் உள்ளன. அரபிக் கடலைச் சார்ந்து மாஹே மாவட்டம் உள்ளது. 

புதுச்சேரி, காரைக்கால் பகுதிகள் தமிழகத்திலும், ஏனாம் நிலப்பகுதி ஆந்திர பிரதேச மாநிலத்திலும் மாஹே நிலப்பகுதி கேரள  மாநிலத்திலும் அமைந்துள்ளது.  புதுச்சேரி நகரம்தான் இந்த யூனியன் பிரதேசத்தின் தலைநகரமாகும். பாண்டிச்சேரி என்றும் அழைக்கப்படுகிறது. 

இவற்றுள் புதுச்சேரி மாவட்டம், புதுவை மாநகரம் மற்றும் 9 சிறிய நிலப்பகுதிகளைக் கொண்டதாக, நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு நடுவில் அமைந்துள்ளது. அதாவது வங்கக் கடலோரம் புதுவை மாநகரமும், அதனைச் சுற்றி 9 சிறிய நிலப்பகுதிகளும் ஒன்றுடன் ஒன்று இணையாமல் தனித்தனியாக திட்டுத் திட்டாக அமைந்துள்ளது. 

புதுச்சேரியின் வரலாறு

புதுச்சேரி பகுதி கி.பி. முதல் நூற்றாண்டிலேயே பெரிய வணிக மையமாக இருந்ததாக கிரேக்க மாலுமிகள் பயண குறிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு 2 கி.மீ. தொலைவில் உள்ள "அரிக்கன் மேடு' பகுதியில் பெரிய வணிக சந்தை இருந்துள்ளது., இங்கு அயல் நாட்டினர் வந்து வணிகம் செய்தள்ளனர். தொல்லியல் துறையினரில் ஆய்வில் இங்கு பழமையான பல கிரேக்கப் பொருட்கள் கிடைத்துள்ளன.

இந்தியாவில் மன்னராட்சி நடந்த காலத்தில் இப்பகுதி சோழர், பல்லவர், விஜயநகரப் பேரரசு, பீஜப்பூர் சுல்தான் என பலராலும் ஆட்சி செய்யப்பட்டுள்ளது.

பிரெஞ்சு, கிழக்கிந்தியக் கம்பெனி

1668 இல் வணிகத்திற்காக,பிரான்சு நாட்டைச் சேர்ந்த பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனியினர் இந்தியாவில் சூரத் பகுதியில் முதலில் குடியேறினர். பின்னர் 1674 இல் வங்கக் கடலோரம் இருந்த புதுச்சேரி பகுதியை தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்து பாண்டிச்சேரி என்று பெயரினையும் சூட்டினார்கள். மேலும் இந்தியாவில் அவர்களது கட்டுப்பாட்டில் இருந்த குடியேற்ற பகுதிகளுக்கு பாண்டிச்சேரியை தலைநகரமாக்கினார்கள். 

அதன்பின் 1725 இல் அரபிக்கடல் பகுதியில் "மாஹே' ஆற்றின் தமிழகப் பகுதியில் இருந்த மாஹே நகரத்தைக் கைப்பற்றினார்கள். 

1731 இல் வங்கக் கடலோரம் கோதாவரி நதியின் கிளை ஆறாகிய "கெளதமி கோதாவரி' கடலில் கலக்கும் இடத்தில் இருந்த ஏனாம் பகுதியை தங்கள் வசமாக்கினார்கள். 

1739 இல் காவிரி டெல்டா பகுதியில் அரசலாறு கடலில் சேரும் இடத்தில் இருந்த காரைக்கால் பகுதியை உள்ளூர் ஆட்சியாளர்களிடமிருந்து முதலில் வாடகைக்கும், பின் விலைக்கும் வாங்கி, தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்கள். 

அதன்பின் 1763 இல் கம்பெனி கட்டுப்பாட்டில் இருந்த இந்தியப் பகுதிகள் பிரான்ஸ் அரசரின் நேரடி ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது!

பிரெஞ்சு - டேனிஷ் யுத்தம்!

இதற்கிடையில் டச்சுக்காரர்கள் (டென்மார்க் நாட்டைச் சேர்ந்தவர்கள்) 1693 இல் இந்தப் பகுதிக்கு வந்தபோது "பிரெஞ்சு - டேனிஷ் யுத்தம் நடந்தது. அதில் பாண்டிச்சேரி கை மாறியது. ஆனால் 1699 இல் அவர்களுக்குள் ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி பிரான்ஸிடம் பாண்டிச்சேரியைக் கொடுத்துவிட்டார்கள். 

ஆங்கிலோ - பிரெஞ்சு யுத்தம்!

ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் தென்னிந்தியாவில் வலுப்பெறத் தொடங்கிய பிறகு பாண்டிச்சேரி பகுதியில் பிரெஞ்சுக் காரர்களின் வணிக நடவடிக்கைகள் தடுக்கப்பட்டன.  மற்றும் குறைக்கப்பட்டன. 

1742 முதல் 1763 வரை பலமுறை ஆங்கிலேயர்களுக்கும், பிரெஞ்சுக்காரர்களுக்கும் இடையே யுத்தங்கள் நடந்தது. இருதரப்பினருக்கும் வெற்றியும், தோல்வியும் மாறி, மாறிக் கிடைத்ததில், ஆட்சியும் கைமாறிக்கொண்டே இருந்தது. 1793 இல் பிரிட்டிஷாரிடம் அதிகாரம் வந்தது. 

இதனையடுத்து 1814 இல் இரு நாடுகளுக்கும் ஏற்பட்ட ஓப்பந்தத்தின்படி பாண்டிச்சேரி பிரான்ஸ் நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டது. 

அதன்பின் பாண்டிச்சேரி துரிதமாக நல்ல வளர்ச்சி அடைந்தது. 

சுதந்திர இந்தியாவும் பாண்டிச்சேரியும்!

1947 இல் இந்தியாவின் பிற பகுதிகள் பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் பெற்ற போதும் பிரான்ஸின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகள் அவர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது.

இப்பகுதிகளை இந்திய அரசிடம் ஒப்படைப்பது என்பதற்காக 1954 நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட முயற்சி 1956 இல் ஒரு உரிமை மாற்றமாகி (DE - JURE TRANSFER) முடிந்தது.

அதன்பின் 1962, ஆகஸ்டு 16 ஆம் நாள்தான் உடன்பாடு க்ஷரத்துக்கள் (INSTRUMENTS OF RECTIFICATION) நிறைவேறியது. பிரான்ஸின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட இந்தியாவில் இருந்த 4 பிரதேசங்களையும் ஒன்றிணைத்து யூனியன் பிரதேசமாக இந்தியாவுடன் இணைந்தது. 

பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தின் தலைநகரமானது புதுவையில் 23, காரைக்காலில் 5, ஏனாம், மாஹேயில் தலா 1 என மொத்தம் 30 சட்டமன்றத் தொகுதிகளால் ஆனது. பாண்டிச்சேரி என்ற பெயர் 2006 இல் புதுச்சேரி என்று மாற்றப்பட்டது. 

4 மாவட்டங்களும் கடற்கரையோரம் அமைந்துள்ளதால் சிறந்த பொழுதுபோக்குச் சுற்றுலாத் தலங்களாக அமைந்துள்ளன.
சுற்றுலாத் தலங்கள்!

1. புதுச்சேரி மாவட்டம்!

சுமார் 200 ஆண்டு காலம் பிரென்சு ஆதிக்கத்தில் தலைநகரமாக இருந்ததால் பிரென்சுக் கட்டிடக்கலை சார்ந்த கட்டிடங்கள், சர்ச்சுகள், சிலைகள், திட்டமிட்டு நிர்மாணிக்கப்பட்ட ஒன்றுக்கொன்று இணையாக அமைந்த நேர்த்தியான வீதிகள் என பாண்டிச்சேரி பிரென்சு இந்தியாவின் வரலாற்றுச் சான்றாக தனித்துவத்துடன் விளங்குகிறது. 

ஸ்ரீஅரவிந்தர் ஆசிரமம்!

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவரும், கவிஞரும், தத்துவஞானியும், யோகியும் ஆன்மீகத்தில் ஆழ்ந்து ஆத்ம அனுபவம் பெற்றவருமான ஸ்ரீஅரவிந்தரின் ஆசிரமத்திற்கு உலகம் முழுவதிலுமிருந்து ஆன்மீகத் தேடல் கொண்டவர்கள் வருகை புரிகிறார்கள். 

இந்த ஆசிரமம் இங்கு வருபவர்  மனதில் அன்பு, அருள், அமைதி, ஆனந்தம் ஆகியவற்றை  பரப்பும் ஆன்மீகப் பூங்காவாக மணம் பரப்புகிறது. மேலும் இந்த ஆசிரமம் புதுச்சேரிக்கு உலக அளவில் பெருமை சேர்க்கிறது.
ஆரோவில்!

ஸ்ரீ அரவிந்தரின் சிந்தனைகளால் கவரப்பட்டு அவருடைய சிஷ்யையாக புதுச்சேரியிலேயே வாழ்ந்த ஸ்ரீஅன்னையினால் (பிளான்சே ரச்சேர் மிர்ரா அல்பாசா - 1878 -1973) புதுச்சேரிக்கு வடக்கே 12 கி.மீ. தொலைவில் கடற்கரையை ஒட்டி உருவாக்கப்பட்டது ஒரு நகரமே ஆரோவில்!

ஆரோவில் ஒரு சமய நிறுவனம் அல்ல. எந்த மதத்தையும் சார்ந்தது அல்ல. சடங்குகளோ சம்பிரதாயங்களோ இங்கு கிடையாது.

ஆன்மீக ஈடுபாடு கொண்ட எவராயினும் நாடு, மொழி, மதம், போன்ற பாகுபாடு இன்றி இங்கு வரலாம். இது ஒரு சர்வதேச கூட்டு சமூக அமைப்பு. அரோவில் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள வானூர் தாலுக்காவில் அமைந்துள்ளது. 

இங்குள்ள "மாத்ரி மந்திர்' என்றழைக்கப்படும் வளாகம் சிறிது தட்டையான கோள வடிவமாகும். நான்கு தூண்கள் இதைத் தாங்கி நிற்கின்றன. தரையிலிருந்து 29 மீ. உயரத்தில் உள்ள இது காண்போரை கவரக்கூடியது. 

இது ஐக்கிய நாடுகள் பண்பாட்டு நிறுவனமான யுனெஸ்கோ உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச நகரமாகும். இப்போது மைய அரசின் மேற்பார்வையில் உள்ளது.  

மணக்குள விநாயகர் கோயில்!

புதுச்சேரி மக்களால் குட்டித் திருப்பதி என பெருமையுடன் கூறப்படும் "மணக்குள விநாயகர் கோயில்' கி.பி. 15 ஆம் நூற்றாண்டிற்கு முந்தையது. இன்று பொற்கோபுரத்துடன் அழகாகக் காட்சியளிக்கிறது. 

அக்காலத்தில் புதுச்சேரிக்கு வாணிபத்திற்காக வரும் கப்பல்களை "புதுச்சேரி ஆறு' என்று அழைக்கப்படும் புதுச்சேரிக்கு நடுவில் ஓடும் ஆற்றின் (கால்வாய்) கழிமுகப்பகுதியில் இருந்த துறைமுகத்தில் நிறுத்துவர். அப்பொழுது பயணத்திற்குத் தேவையான குடிநீரை, துறைமுகப் பகுதியில் இருந்த மணற்குளங்களிலிருந்து எடுத்துச் செல்வர். 

அத்தகைய மணற்குளத்துக்கு அருகில் இவ்விநாயகர் கோயில் இருந்ததால் "மணற்குள விநாயகர்' என அழைக்கப்பட்டு இப்பொழுது "மணக்குள விநாயகர்' எனப்படுகிறார். இக்கோயில் விநாயகரை பாரதியார் புதுவையில் இருந்த காலகட்டத்தில் நித்தம் வழிபட்டு வந்தார். 

தொடரும்...

More from the section

பிஞ்சுக் கை வண்ணம் - II
பிஞ்சுக் கை வண்ணம் - I
அங்கிள் ஆன்டெனா
மரங்களின் வரங்கள்!
டாமுவின் சாமர்த்தியம்!