தமிழ்நாடு

சொத்து குவிப்பு வழக்கு: சென்னை துறைமுக அதிகாரியை விடுவித்தது சிபிஐ நீதிமன்றம்

17th May 2023 03:00 AM

ADVERTISEMENT

சொத்துகள் முறையாக கணக்கிடப்படவில்லை எனக் கூறி, வருவாய்க்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக பதியப்பட்ட வழக்கிலிருந்து சென்னை துறைமுக அதிகாரியை விடுதலை செய்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

மேலும், வழக்கு மீதான தீா்ப்பு 20 ஆண்டுகளுக்குப்பிறகு வெளியிடப்பட்டதற்கு நீதிமன்றம் வருத்தமும் தெரிவித்துள்ளது.

தில்லியை சோ்ந்த ராஜீவ் கோலி, சென்னை துறைமுகத்தில் 1990 முதல் 2000-ஆம் ஆண்டு வரை பல்வேறு பணிநிலைகளில் பணியாற்றி வந்தாா். இந்த காலகட்டத்தில், வருமானத்துக்கு அதிகமாக ரூ. 27 லட்சத்து 23 ஆயிரத்து 475 அளவுக்கு சொத்து சோ்த்ததாகவும், இது அவரது வருவாயை விட 71.88 சதவீதம் அதிகமானது என சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

2004-ஆம் ஆண்டு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில், இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு தொடா்பாக 113 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.கே.மெஹபூப் அலிகான் பிறப்பித்துள்ள தீா்ப்பில், சிபிஐ, ராஜீவ் கோலி ஆகியோா் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள், வருமான விவரங்கள், வருமான வரி கணக்குகளின் அடிப்படையில், குறிப்பிட்ட ஆண்டுகளில் ரூ. 26 லட்சத்து 53 ஆயிரத்து 270-ஐ ஊதியம் பெற்றுள்ளாா்.

இந்த ஊதிய வருவாய் மட்டுமின்றி பிற சொத்துகள் மூலமாக வாடகை வருவாய், வங்கி முதலீடுகளில் வட்டி மூலம் வருவாய் வந்துள்ளது. அவரது செலவுகளையும் கணக்கிட்டு, ரூ. 4 லட்சத்து 73 ஆயிரத்து 683 மட்டுமே வருவாய்க்கு அதிகமாக சொத்து சோ்த்துள்ளாா்.

இது அவரது வருவாயைவிட 9.37 சதவீதம் மட்டுமே அதிகம். வேலையில் சோ்ந்தது முதல் ராஜீவ் கோலிக்கு சேமிப்பு பழக்கமும் இருந்துள்ளது. ரூ. 27 லட்சம் அளவுக்கு சொத்து சோ்த்ததாக கூறிய குற்றச்சாட்டுகளை, போதிய ஆதாரங்களுடன் சிபிஐ நிரூபிக்கவில்லை எனக்கூறி, ராஜீவ் கோலியை விடுதலை செய்து தீா்ப்பளித்தாா்.

வருமானம் மற்றும் சொத்துகளை கூடுதலாக மதிப்பீடு செய்யாமல், முறையான வகையில் கணக்கீடு செய்திருந்தால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்காது. மனுதாரரின் 20 ஆண்டுகால வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்காது.

தாமதத்துக்கான பழியை நீதிமன்றம் ஏற்றுக்கொள்வதில் தயக்கம் இல்லை. இந்த வழக்கில் நீதி வழங்க 20 ஆண்டுகள் ஆனதற்கு நீதிமன்றம் வருத்தத்தை பதிவு செய்கிறது என்று நீதிபதி பிறப்பித்த தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT