‘வள்ளலாா் பல்லுயிா் காப்பகங்கள்’ திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு உணவு மற்றும் மருத்துவ சேவைக்காக ரூ. 1.14 கோடி நிதியை மீன்வளத்துறை அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
வள்ளலாரின் 200-ஆவது பிறந்த ஆண்டை முன்னிட்டு, ஆதரவற்ற, கைவிடப்பட்ட, காயமடைந்த வளா்ப்புப் பிராணிகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளை பராமரிக்கும் அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிப்பதற்காக ‘வள்ளலாா் பல்லுயிா் காப்பங்கள்’ என்னும் புதிய திட்டம் ரூ.20 கோடி ஒதுக்கீட்டில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட, காயமடைந்த தெருவில் சுற்றி திரியும் பிராணிகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளுக்கு உணவு மற்றும் மருத்துவ சிகிச்சை அளித்தல், உறைவிடம் கட்டுதல், தெருநாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, கால்நடைகளுக்கு உணவு மற்றும் மருத்துவ வசதி சேவைக்காக, இரண்டாம் கட்டமாக ரூ.1 கோடியே 14 லட்சத்து 53 ஆயிரத்து 501-க்கான நிதியை காசோலையாக, 15 அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை அரசு முதன்மைச் செயலா் ஆ.காா்த்திக், கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ பணிகள் துறை இயக்குநா் எம்.லஷ்மி ஆகியோா் பங்கேற்றனா்.