மகளிர்மணி

முஸ்லிம் பெண் எழுத்தாளர் சித்தி ஜூனைதா பேகம்

11th Sep 2022 06:00 AM | மு.அ.அபுல் அமீன் 

ADVERTISEMENT

 


முதல் முஸ்லிம் பெண் எழுத்தாளரான சித்தி ஜூனைதா பேகம் 1917-ஆம் ஆண்டு பிப்ரவரியில் நாகப்பட்டினத்தில் பிறந்தார். இவருடைய பெற்றோர் ஷரீப் பே- ஹமீதா நாச்சியார்.

12-ஆவது வயதிலேயே திருமணமாகி 4 ஆண்டுகளே இல்லறத்தில் வாழ்ந்தார். 4  பெண் குழந்தைகளைப் பெற்று, 16 வயதிலேயே தனது கணவரை இழந்தார்.
மூன்றாம் வகுப்பு வரை படித்த அவர்,  மறுமணம் செய்துகொள்ளாமல் எழுத்தையும் படிப்பையும் வரையின்றி வழங்கும் தமிழ் இலக்கியத்தைப் படித்தார். அனுபவப் படிப்பையும் ஆழமாய்க் கற்றார்.

நாவல், சிறுகதைகள், கட்டுரைகளை எழுதினார். 1938-இல் இவர் எழுதிய "காதலா? கடமையா?' என்ற வரலாற்று புதினம் 18 பாகங்களைக் கொண்டது.
இந்த நாவலுக்கு மதிப்புரை வழங்கிய உ.வே.சாமிநாதய்யர், ""மும்மதியருள்ளும் தமிழ் நூல் பயின்று நூல் படைக்கும் பெண் மக்களும் உள்ளதை உணர்ந்தேன்'' என்று வியந்து பாராடடினார். இந்த நாவலே "நாடோடி மன்னன்' என்ற திரைப்படத்தின் மூலக்கதை.

ADVERTISEMENT

1946-இல் "காஜாஹசன் பசரீ' என்ற இஸ்லாமிய பெரியாரின் வரலாற்று நூலை வெளியிட்டார்.  1947-இல் "சண்பகவல்லி தேவி' என்ற குறு நாவலை வெளியிட்டார். "மகிழம்பு' என்பது அவரின் மற்றொரு நாவல்.

அவரது தொடர்கதைகள் பல பத்திரிகைகளிலும் வெளிவந்தன. " ஹலிமா' அல்லது "கற்பின் மாண்பு', " வனஜா' அல்லது "கணவரின் கொடுமை',  "பெண் உள்ளம்' அல்லது "சுதந்திர உதயம்' முதலிய கதைகளையும் எழுதினார்.
"இஸ்லாமும் பலதார மணமும்',  "பெண்கள் சினிமா பார்க்கலாமா?', "முஸ்லிம் பெண்களும் விவாக விலக்கும்', "பாராளப் பிறந்தவள் பேயாட்டம் போடுவதா?', "மண்ணில் மறைவது சில்லடியா?' முதலிய கட்டுரைகளை எழுதினார்.
இவர் நூருல் இஸ்லாம், நவயுவன், தாருல் இஸ்லாம், செம்பிறை, சாஜஹான், பிறை, சிவாஜி முதலிய இதழ்களில் எழுதிய கட்டுரைகள் ""இஸ்லாமும் பெண்களும்'' என்ற நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
சித்தி ஜூனைதா பேகம் தனது 82-ஆவது வயதில் 1998-ஆம் ஆண்டு மார்ச் 19-இல் காலமானார்.
இவரது சகோதரர்கள், குடும்பத்தினர் தமிழ் மீது பற்றுதல் கொண்டு, பல்வேறு துறைகளில் சிறந்துவிளங்குபவர்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT