மகளிர்மணி

இளம் வயதில் உலக சாதனைகள்!

26th Jan 2022 06:00 AM | வா.ஆதவன்

ADVERTISEMENT

 

உலகில் பிறந்த எல்லாருமே ஏதேனும் சாதனை புரிய வேண்டும் என்றே நினக்கிறார்கள். ஆனால் ஒவ்வொருவரின் குடும்பப் பின்னணி, பொருளாதாரநிலை, உடல், மன நலம் ஆகியவை சாதனை செய்வதற்கு தடைகளாக இருந்துவிடுகின்றன.

ஆனால் சாதனை புரிவதற்கு வயது ஒரு தடையில்லை என்று நிரூபித்திருக்கிறார் 12 வயதேயான பிரிஷா. திருநெல்வேலி வண்ணார்பேட்டையைச் சேர்ந்த கார்த்திகேயன் - தேவி பிரியா ஆகியோரின் மகளான அவர் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7 - ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

சமீபத்தில் அமெரிக்காவின் "எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்' சாதனைகளுக்காக பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார். இந்த இளம் வயதிலேயே 70 உலக சாதனைகள் செய்திருக்கிறார்.

ADVERTISEMENT

பிரிஷாவின் சாதனைகள் குறித்து அவருடைய அம்மா தேவி பிரியாவிடம் பேசினோம்....

""நானும் எனது அம்மாவும் யோகாசனம் கற்றிருக்கிறோம். என்னுடைய அம்மா யோகாசனத்தில் உதவி பேராசிரியையாக இருக்கிறார். பிரிஷாவுக்கு ஒரு வயது இருக்கும்போதே நாங்கள் அவளுக்கு யோகாசனம் கற்றுக் கொடுக்கத் தொடங்கினோம். அவளும் அப்போதிருந்தே ஆர்வமாகக் கற்றுக் கொண்டாள்.
பிரிஷாவுக்கு 5 வயது ஆகும் போதே பல்வேறு மாவட்ட, மாநில, தேசிய அளவிலான யோகாசனப் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கி, பல சாதனைகள் செய்யத் தொடங்கினாள். பல போட்டிகளில் முதலிடமும் பெற்றிருக்கிறாள். நூற்றுக்கும் மேற்பட்ட தங்கப் பதக்கங்களைப் பெற்றிருக்கிறாள்.

கண்ட பேருண்டாசனத்தை ஒரு நிமிடத்தில் 16 முறை செய்தது, சுப்த பத்மாசனம் மற்றும் கும்த பத்மாசனத்தை தண்ணீரில் நீச்சல் அடித்தபடியே செய்வது போன்றவற்றை அவளுடைய சாதனைகளாகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

யோகாசனத்தைப் போலவே நீச்சலிலும் பிரிஷாவுக்கு ஆர்வம் அதிகம். தண்ணீரில் இருந்து கொண்டே பலவிதமான யோகாசனங்களைச் செய்து காட்டியிருக்கிறாள். கண்ணைக் கட்டிக் கொண்டு நீச்சலடிப்பது அவற்றில் ஒன்று. தண்ணீருக்கடியிலும் யோகாசனம் செய்திருக்கிறாள்.

கண்களைக் கட்டிக் கொண்டு பிரிஷா நிகழ்த்திய சாதனைகளைப் பட்டியலிட்டுச் சொல்லலாம். கண்களைக் கட்டிக் கொண்டு ரூபிக்ஸ் க்யூப்களை அவளால் சரி செய்ய முடியும். கண்களைக் கட்டியபடி நான்கு வழிச் சாலையில் ஒரு கையால் சைக்கிள் ஓட்டுவது, கண்களைக் கட்டி கொண்டு படிப்பது, எழுதுவது என நிறையச் சொல்லலாம்.

சர்வதேச யோகாசனப் போட்டிகளில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு பல்வேறு பிரிவில் தங்கப் பதக்கங்கள், கோப்பைகள், உலக சாம்பியன் பட்டங்களையும் பெற்றிருக்கிறாள்.

தான் கற்றுக் கொண்டதை பிறருக்குக் கற்றுக் கொடுப்பதில் பிரிஷாவுக்கு ஆர்வம் அதிகம். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கற்றுத் தருகிறாள். பள்ளி முடிந்ததும் பிரிஷா யோகாசனம் கற்றுக் கொடுக்கப் போகிற போது நானும் துணைக்கு அவளுடன் போவேன். பார்வையற்றோர் பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு பிரிஷா யோகாசனம் கற்றுத் தருகிறாள். அப்படி பிரிஷா யோகாசனம் கற்றுத் தந்த மாணவர்களில் ஒருவர் கோவில்பட்டியைச் சேர்ந்த கணேஷ்குமார். கணேஷ் குமார் தற்போது யோகாசனத்தில் உலக சாதனை படைத்திருக்கிறார்.

கரோனா தொற்று ஏற்பட்டதில் இருந்து, பொது இடங்களில் ஒன்று சேர முடியாத நிலை ஏற்பட்டுவிட்டதால், ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு யோகாசன வகுப்புகள் எடுக்கிறாள்.

போட்டித் தேர்வுகளை எழுதக் கூடியவர்கள் படிக்கும் புத்தகங்களில் "12 வயதில் 70 உலக சாதனைகள்' செய்த பிரிஷாவை பற்றிய தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன.

இளம் வயதிலேயே நிறைய சாதனைகளைச் செய்திருப்பதால், பிரிஷாவுக்கு குளோபல் பல்கலைக்கழகம் "அதிக சாதனை புரிந்தவர்' என்ற பட்டம் கொடுத்திருக்கிறது. நியூ ஜெருசலம் பல்கலைக்கழகம் அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் கொடுத்திருக்கிறது.

இதற்கெல்லாம் காரணம், பிரிஷா எதைச் செய்தாலும் சந்தோஷமாகச் செய்வாள். ஏதேனும் ஒன்றில் ஈடுபட்டால் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபடுவாள்.
குழந்தைகளில் எல்லாருமே திறமை உடையவர்கள். அதில் ஆண் குழந்தை, பெண் குழந்தை என்ற வேறுபாடு எதுவும் இல்லை. பெற்றோர் தங்களுடைய குழந்தைகளிடம் உள்ள திறமைகளைத் தேடிக் கண்டுபிடித்து, அந்த திறமைகளை மேலும் வளர்ப்பதற்கு உதவி செய்ய வேண்டும். அவர்களுடைய திறமைகளை வெளிக்காட்டுவதற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அப்படிப்பட்ட வாய்ப்புகளை நாங்கள் பிரிஷாவுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம். அதனால்தான் அவளால் உலக அளவில் பல சாதனைகளைச் செய்ய முடிகிறது.

யோகாசனத்தில், நீச்சலில் சாதனை படைத்த பிரிஷா படிப்பில் எப்படி? என்ற கேள்வி பலருக்கும் எழுகிறது. உண்மையில் யோகாசனம் செய்தால் எந்தவொரு விஷயத்திலும் கூடுதல் கவனம் குவியும். மனம் அலை பாயாது. நினைவாற்றல் பெருகும். அதனால் பிரிஷாவுக்கு படிப்பது பிடித்தமான விஷயம்'' என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT