மகளிர்மணி

கதை சொல்லும் குறள் - 63:  எழுபதுகோடி  எதிரிகள்! 

கணேஷ் சுந்தரமூர்த்தி

ஓங்கி நின்றிருந்தது அந்த ஸ்தூபம். அதன் அடிப்பாகத்தில் ஒரு கிரானைட் கல் பதிக்கப்பட்டிருந்தது. ஸ்தூபத்தைச் சுற்றி மலர்வளையங்கள்.

ஆப்ரிக்காக் கண்டத்தின் தென்கிழக்குப் பகுதியைச் சேர்ந்த அழகுமிக்க நாடு "மாரியானா'. அங்கே சுற்றுலா  செல்வதற்காக நானும் என் கணவரும் சென்றிருந்தோம். அழகிய வனங்களும், காட்டு மிருகங்களும், இயற்கை வளமும் தன்னகத்தே கொண்ட அந்த நாட்டைக் காண உலகெங்கிலும் இருந்து உல்லாசப் பயணிகள் வருகின்றனர்.

ஒரு காலத்தில் தங்கச் சுரங்கங்களைத் தன்னகத்தே கொண்டிருந்ததால், மிகச் செல்வச் செழிப்பு மிக்க நாடாக மாரியானா திகழ்ந்திருக்கிறது. பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் அங்கே நிகழ்ந்த சரித்திரப் புகழ்மிக்க நிகழ்ச்சியைப் பற்றி எங்களுடைய வழிகாட்டி விவரிக்கத் தொடங்கினார்.

""வாருங்கள் அருகே இருக்கும் உணவகத்தில் தேநீரை அருந்திக் கொண்டே பேசுவோம்'' என்றார். நாங்களும் ஆவல் உந்த அவரைத் தொடர்ந்தோம்.

""பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே மாரியானாவில் தங்கம் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஆண்டுகள் பல கடந்து போக, அங்கே தங்கச் சுரங்கங்களில் வேலை பார்ப்பதே மக்களின் வாழ்வாதாரமாக ஆகிப்  போனது.

"கைகாரா'வும் கூலிக்காகத் தங்கச் சுரங்கத்தில் வேலை பார்க்கும் தொழிலாளியாகத்தான் இருந்தார். மாரியானாவில், பல அடிமைகளை ஆப்பிரிக்காவின் பல பாகங்களில் இருந்து கொண்டு வந்து தங்கச் சுரங்கங்களில் வேலை செய்ய வைத்தனர்.

அப்படி வந்த அடிமைகளில் ஒருவன் தான் ஜபாரி. ஒரு கட்டத்தில் கைகாராவும், ஜபாரியும் நெருங்கிய நண்பர்களானார்கள். தன் வீட்டிலிருந்து உணவு வகை
களைக் கொண்டு வந்து கைகாரா, ஜபாரிக்குக் கொடுப்பார். குளிர்காலத்திற்கு இதமானக் கம்பளி உடைகளைத் தருவார், அன்பான ஆறுதலான வார்த்தைகளைப் பேசுவார்.

ஒரு முறை ஜபாரிக்கு மலேரியா காய்ச்சல் வந்தது. அவன் பிழைப்பதே கஷ்டம் என்று மருத்துவர்கள் கைவிட்டு விட்டனர். 

அவனைக் கூட்டி வந்த அதிகாரிகளும் அவனால் மற்றவர்களுக்கும் வியாதி பரவி விடுமோ என்று அவனைக் கொல்லவும் துணிந்து விட்டனர்.

இதை அறிந்த கைகாரா துடிதுடித்துப் போனார். சொந்த வீடு வாங்குவதற்காக அரும்பாடுபட்டுச் சேமித்து வைத்திருந்த பணத்தைக் கொண்டு சென்று, ஜபாரியை அடிமையாக்கிக் கூட்டி வந்த கம்பெனிக்குச் செலுத்தி அவனை மீட்டார். 

"ஐயா, உங்களுக்கு என் உயிர் உள்ள வரை நாயாக உழைப்பேன்' என்று ஜபாரி உருகினான்.

ஜபாரியைத் தன் வீட்டுக்கு அழைத்து வந்து, வைத்தியம் பார்த்துக் கைகாரா மறுபிறவியைக் கொடுத்தார்.

கால வெள்ளத்தில், கைகாரா செல்வந்தர் ஆனார். தங்கத்தைக் கொள்முதல் செய்து, அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தார். கருணை உள்ளம், ஈகை குணம், தன்னை நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வது என்று இருந்தவரை அரசியல் தன் பக்கம் இழுத்துக் கொண்டது.

கைகாராவுக்கு இரண்டு ஆண் பிள்ளைகளும், ஒரு பெண்ணும் வாரிசாகப் பிறந்தனர். அந்தக் குழந்தைகளை வளர்த்தெடுப்பதில் ஜபாரி தன் நேரத்தைச் செலவழித்தான். கைகாராவின் மனைவி அலிசாவுக்கு ஜபாரி இல்லை என்றால் அன்றைய தினமே பெரும் சுமையாக நகரும். ஏனெனில் வீட்டில் அத்தனை வேலைகளையும் ஜபாரி இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வான்.

இதற்கிடையில் கைகாரா எங்கு சென்றாலும் ஜபாரி நிழலாக அவரைத் தொடர்வான். அதுசரி ஜபாரிக்குத் திருமணம்? அந்தப் பேச்சுக்கே இடமில்லை என்று சொல்லி விட்டான்.

முதலில் பாராளுமன்றத்தில் கைகாரா உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு படிப்படியாக முன்னேறி மாரியானாவின் பிரதம மந்திரியாகவே ஆகிவிட்டார்.

"ஐயா, உங்கள் நல்ல உள்ளத்திற்கும், உழைப்புக்கும்,  மக்கள் நலனில் நீங்கள் காட்டிய அக்கறைக்கும் நல்ல பலன் கிடைத்துவிட்டது' என்று சொல்லி, சொல்லி மகிழ்ந்தான் ஜபாரி அடுத்த தேர்தலில், மீண்டும் கைகாரா போட்டியிட்ட பொழுது, ஜபாரிக்கும் ஒரு தொகுதியில் போட்டியிட சந்தர்ப்பத்தை அளித்தார்.
"ஐயா, இந்த அடிமைக்கு ஏன் இந்த அளவு உயர்வை ஏற்படுத்தித் தருகிறீர்கள்? எனக்குப் பதவி ஆசையே இல்லை' என்றான் ஜபாரி.

"இல்லை ஜபாரி, என் கூடவே இருந்து என்னைவிட அரசியலை நீ நன்றாகக் கற்று வைத்திருக்கிறாய். அடுத்த தேர்தலில் நீயே பிரதமர் ஆனாலும் ஆகிவிடுவாய்' என்றார் கைகாரா.

"ஐயா, உங்களுடைய கிண்டலுக்கும் ஒரு அளவே இல்லையா' என்றான் ஜபாரி. அந்தத் தேர்தலிலும் கைகாராவின் கட்சியே அமோக வெற்றியை எட்டியது. அப்பொழுதுதான் யாராலும் நம்பமுடியாத, ஜீரணிக்க முடியாத நிகழ்வு ஒன்று அரங்கேறியது. ஆமாம் ஜபாரியைப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆக்கினார் கைகாரா.

என்ன முட்டாள்தனமான முடிவு என்று மற்ற அமைச்சர்கள் மனம் புழுங்கினர். வேறு தேசத்தில் இருந்து அடிமையாக வந்தவன், அவனுக்கு நாட்டைப் பாதுகாக்கும் பதவியைத் தூக்கிக் கொடுத்துவிட்டாரே என்று கோபப்பட்டனர்.

கைகாராவின் மனைவி அலிசாவுக்குக் கூட, இதில் உடன்பாடு இல்லை.

""ஏங்க, கட்சியில் எவ்வளவோ மூத்த தலைவர்கள் இருக்க ஜபாரிக்குப் போய் இந்தப் பதவியை இப்படி யாரிடமும் கலந்து யோசிக்காமல் தூக்கிக் கொடுத்துவிட்டீர்களே'' என்றாள்.

""நீ வாயை மூடிக்கொண்டு போ,  உன்னைவிட எனக்கு ஜபாரியைப் பற்றி முழுமையாகத் தெரியும்'' என்றார்.

தன் நாட்டு மக்களுக்கு மிக நல்ல ஆட்சியைக் கைகாரா வழங்கினார். பல அருமையான மக்கள் நலத்திட்டங்களை அமல்படுத்தி மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பெற்றார். ஒரு கட்டத்தில் மக்கள் அவரைத் தங்கள் வீட்டுக் குலதெய்வமாகவே வழிப்பட்டனர்.

ஆரம்பத்தில் ஜபாரி, மிக விஸ்வாசமுடையவனாகத்தான் இருந்தான். நாட்டின் பாதுகாப்பும், கைகாராவின் பாதுகாப்புக்கும் ஒரு பங்கமும் நிகழாமல் பார்த்துக் கொண்டான். அதற்கான நடவடிக்கைகளைச் சிரமேற்கொண்டான்.
மூன்று வருடங்கள் ஓடி மறைந்தன. 

பக்கத்து நாடான ஆங்கியாவுக்கு அரசாங்க விருந்தினர்களாக கைகாராவும், ஜபாரியும் சென்றனர். அங்கேதான் விதி விளையாடத் தொடங்கியது.

தங்கச் சுரங்கங்கள் நிறைந்த மாரியானாவைத் தங்கள் வசம் ஆக்கிட ஆங்கியா எவ்வளவோ முயன்றும் அது முடியாததாகவே இருந்தது. இந்த முறை ஜபாரியைத் தங்கள் பக்கம் இழுத்தால் இது சாத்தியம் ஆகிவிடும் என்று ஆங்கியா நாட்டின் பிரதமர் வியூகம் வகுத்தார்.

அன்றைக்கு நடந்த இரவு விருந்தில், ஆங்கியாவின் பேரழகியான பின்டானை, ஜபாரியுடன் பழக வைத்து, அவள் மீது அவனுக்கு ஈர்ப்பை உண்டாக்கினார்கள்.
மீண்டும் மீண்டும், மூன்று முறை ஆயுத ஒப்பந்தத்திற்குச் செல்கிறேன் என்று ஜபாரி ஆங்கியாவிற்குச் சென்றான், மூளைச் சலவை செய்யப்பட்டான்''.

""ஐயோ பிறகு என்ன நடந்தது?'' என்று நான் பதறினேன்.

வழிகாட்டி தொடர்ந்தார், ""என்ன நடக்கும்? ராணுவத்தைத் தன் அதிகாரத்திற்குக் கீழ் முழுமையாகக் கொண்டு வந்து, ராணுவப் புரட்சி என்ற பெயரில் கைகாராவைக் கைது செய்து, அவர் பதவியைப் பறித்துச் சிறையில் அடைத்தான்''.

""அடப்பாவி'', என்னை மீறிக் கூவி விட்டேன்.

""அதோடு அவன் நிறுத்திக் கொள்ளவில்லை மேடம். தன்னை ஒரு சகோதரனாக நடத்திய கைகாராவின் மனைவியையும், தன் கைகளால் வளர்த்த அவர் பிள்ளைகளையும் சுட்டுக் கொன்றான்.

கைகாராவை முச்சந்தியில் தூக்கிலிட்டான். பிறகு ஒரு சர்வாதிகாரியாக முடிசூட்டிக் கொண்டான்.

பத்து ஆண்டுகள் அவனுடைய கொடுமையான ஆட்சியில் மாரியானா மக்கள் பல கொடுமைகளை அனுபவித்தனர். பிறகு மக்கள் புரட்சி ஏற்பட்டு ஜபாரி கொல்லப்பட்டான். அவனுடைய உடலைக் கூறுபோட்டு, நாய்களுக்கும், கழுகுகளுக்கும் இரையாக்கி மக்கள் தங்கள் கோபத்தைத் தணித்துக் கொண்டனர்''.

தவறான அமைச்சரை, நண்பன் என்பதற்காகச் சரியாக யோசிக்காமல் தன் பக்கத்தில் வைத்துக் கொண்ட கைகாரா அழிந்தார். 
இந்தச் சரித்திர நிகழ்வு எழுபது கோடி எதிரிகள் பக்கத்தில் இருந்தாலும் வராத கேட்டை ஒரு  துன்மந்திரி கொண்டு வருவான் என்பதைச் சுட்டிக் காட்டுகிறது.

பழுதெண்ணும் மந்திரியிற் பக்கத்துள் தெவ்வோர்
எழுபது கோடி யுறும்.

(குறள் எண்: 639)

பொருள்:

தவறான வழிமுறைகளையே சிந்தித்துச் செயல்படுகிற அமைச்சர் ஒருவர் அருகிலிருப்பதை விட, எழுபது கோடி எதிரிகள் பக்கத்தில் இருப்பது எவ்வளவோ மேலாகும்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

அண்ணா பல்கலைக் கழகப் பதிவாளா் நியமனம்: துணை வேந்தா் விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

SCROLL FOR NEXT