மகளிர்மணி

உன்னால் முடியும் நம்பு.. நம்பு! - 3: மனஉறுதி!

கோதை ஜோதிலட்சுமி

அறிவாளிகள் வருங்காலத்திற்கும் சேர்த்தே சிந்திக்கிறார்கள். அவர்களின் சிந்தனை தங்கள் வருங்காலம் பற்றியதாக மட்டும் இருந்து விடுவதில்லை. அடுத்தடுத்த தலைமுறைகளின் சாதனைக்கு வழிகோலுவதாக இருந்துவிடுகிறது. ஒரு சமூகமே முன்னேறுவதற்கும் சாதனை படைப்பதற்கும் காரணமாக அறிவாளிகளின் சிந்தனையும் பணிகளும் அமைந்துவிடும் என்பார்கள். 
இந்தியாவைப் பொறுத்தவரை பெண்கள் பல காலமாக பல காரணங்களால் வீட்டுக்குள் முடங்கி இருக்க வேண்டிய கட்டாயத்துக்கு உட்பட்டிருந்தனர். அப்படி அடைபட்டிருந்த பெண்ணின் ஆற்றல் யாது? அவள் எப்படி தன்னைச் செதுக்கிக் கொண்டாள்? அவளின் தேவைகள் என்ன? அவள் பலமாய் எங்கே வேரூன்றி இருந்தாள்? என்ன செய்து கொண்டிருந்தாள்? என்று சற்று ஆலோசித்துப் பார்த்தால் நம்மை நாம் எந்தப் பாதையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை அறியலாம். 
வரலாற்றுக் காலமோ அதற்கும் முந்தையதாக சொல்லப்படும் காலங்களிலோ பெண் கல்வியறிவு கொண்டவளாக இருந்திருக்கிறாள் என்பதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன.  பின்னர் பல சமூகக் காரணங்களால் பெண்கள் தங்கள் வாழ்நாள் முழுமையும் வீட்டை விட்டு வெளியேறி அறியாதவர்களாக பல தலைமுறைகள் வாழ்ந்துள்ளனர். 
வீடு மட்டுமே உலகம் என்ற நிலை ஏற்பட்ட பொழுதும் பெண் தன் ஞானத்தை சுருக்கிக் கொண்டாளா? இல்லை. தன்  அறிவுக் கனல் அணைந்து விடாமல் தொடர்ந்து அவள் தன் அறிவை உயிர்ப்போடு வைத்துக் கொள்ள பல வழிகளைக் கண்டறிந்திருக்கிறாள். அவளின் கலை, ரசனை, விளையாட்டு எல்லாவற்றிலும் அதற்கான முனைப்பைக் காணமுடியும். 
சொல்விளையாட்டு, விடுகதைகள் மொழி அறிவை பட்டறிவை வளர்த்தன என்றால் கணிதத்தைப் பெண் விடாமல் அன்றாடங்களில் ஒன்றாக்கி வளர்த்துக் கொண்டிருக்கிறாள். பல்லாங்குழி முதல் பல விளையாட்டுகள், புள்ளியிட்ட கோலங்கள், முக்கோணம் சதுரம் என கணித வடிவங்களில் அவள் வரைந்த கோல முத்திரைகள் அனைத்தும் கணித அறிவின் அடிப்படைகளை சத்தமின்றி தொடர்ந்து அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்தியும் இருக்கிறாள் என்பதே  அதன் ஆதாரங்கள். 
அறிவாற்றலை தன் தலைமுறைகளுக்குக் கடத்திக் கொண்டே இருந்தால் போதும். என்றைக்கு வெளியில் செல்லும் காலம் வருமோ அன்றைக்கு இந்த சமூகத்தில் அவள் தன்னை நிரூபித்துக் கொள்ள தேவையான அறிவாற்றல் அவளிடம் இருக்கும் என்பதை தீர்க்க தரிசனமாக உணர்ந்து செயல்பட்டிருக்கிறாள். அதன் வெளிப்பாடு தான் இன்று பெண் குழந்தைகள் ஆண்டு தோறும் பள்ளிகளில் கல்லூரிகளில் முதல் மதிப்பெண் பெறுவது.  கல்வியில் முதலிடம் பிடிக்கிறார்கள்.  
மனத்திட்பம் அல்லது மனஉறுதி ஏற்பட்டுவிட்டால் சாதனை சரியாக சாத்தியப்பட்டு விடுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் சென்னையில் ஓர் இளம் காவல்துறை அதிகாரியாக ருவேதா ஸலாம் என்ற காஷ்மீரத்தைச் சேர்ந்த பெண் இருந்தார். குண்டுவெடிப்பு, வன்முறை, கல்வீச்சு, பெண்களுக்கெதிரான அடக்குமுறைகள் என்று கடினமான சூழ்நிலையில் காஷ்மீரின் குப்வாரா என்ற குக்கிராமத்தில் பிறந்தவர். 
மருத்துவரான இவர் அயராத முயற்சியோடு தளராத மனஉறுதியால் காவல் துறை அதிகாரியாக இந்தியாவின் தென்கோடியான தமிழகத்தில் பணியாற்ற வந்தார். சூழ்நிலையை வெற்றி கொள்வதற்கு மனஉறுதி முதல் தேவை என்பதை ருவேதா அழகான ஆங்கிலத்தில் சொல்லும் பொழுது கண்முன் அவர் கடந்த கடினமும் பெற்ற வெற்றியும் விரிகிறது. 
தற்போது தன் சொந்த மாநிலத்தில் சேவையைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். உண்மையில் இவர் காஷ்மீர் பெண்களுக்கான முன்னுதாரணம் மட்டுமல்ல; ஒட்டு மொத்த தேசத்திற்கும் தான்.  
உடற்பயிற்சி அல்லது யோகாசனப்பயிற்சி மேற்கொள்ளத் துவங்கும் பொழுது உடலில் முதலில் வலி ஏற்படுகிறது. அந்த வலியை தாங்கிக் கொண்டு மேலும் முயல்பவர்கள் பயிற்சியின் பலனாக உடல்வலிமை அடைகிறார்கள். இந்த அனுபவம் உடலுக்கு மட்டுமானதல்ல. மனதுக்கும் இதே வழிமுறை தான். 
மனம் தொடர்ந்து சோதனைகளை தடைகளைத் தாண்டி வலிமை பெறுகிறது. மனஉறுதி ஏற்பட்டுவிட்டால் பின் எத்தகைய தடையும் பொருட்டல்ல. நம்முடைய சமூகக் கட்டமைப்பில் பெண் இப்படியான பல தடைகளைக் கண்டவள். அவள் கடந்து வந்த பாதை அசைக்க முடியாத மனஉறுதியை ஏற்படுத்தி விடுகிறது. 
ஓட்டப்போட்டியில் பங்கு பெறுவோருக்குப் பயிற்சி அளிக்கும் பொழுது உடற்பயிற்சி ஓட்டத்திற்கான பயிற்சியோடு நிறுத்தமாட்டார்கள். மனதிற்கும் பயிற்சி தருவார்கள். ஏனெனில், பல போட்டியாளர்களோடு ஓடும் பொழுது நமக்கான பாதையில் சரியாக ஓட வேண்டும். ஆயிரம் மீட்டர் தூரம் ஓட வேண்டிய போட்டியில் பாதிக்குமேல் ஓடிய பிறகு தளர்வும் களைப்பும் உண்டாகலாம். அந்த நேரத்தில் ஓடுபவர் நினைவு வைத்துக் கொள்ள வேண்டியது கால்களால் நாம் ஓடுவதை விட மனத்தால் ஓட வேண்டும். மனம் காட்டும் வேகம் உங்கள் கால்களுக்கும் வந்துவிடும் என்று பயிற்சி தந்து மனதையும் தயார்படுத்துவார்கள்.              
மேலாண்மை எனும் கலைஅறிவியலுக்கு முன்னோடி நம் இந்தியப் பெண்கள். கணக்கற்ற தடைகள் தோன்றினாலும் அவைகளை திறம்பட சமாளித்து இலக்கை அடைவதற்கு எப்படியும் நம் பெண்கள் வழி காண்பார்கள். இந்த குணம் குடும்பம் என்ற அமைப்பைக் காத்துக் கொண்டே தன்னையும் முன்னேற்றிக் கொள்வதில் எல்லாப் பெண்களிடமும் காணமுடியும். 
முனைப்பு, மனத்திட்பம் இரண்டும் பெண்களுக்கு வளர்ப்பில் பயிற்சி அளிக்கப்பட்டு காலப் போக்கில் அவர்களின் மரபணுவில் இயல்பாக மாறிப் போயிருக்கிறது. சுதந்திரப் போராட்டக் காலங்களில் ஏறத்தாழ இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் போர்முனையில் நின்ற பெண்களைப் பார்க்கிறோம். 
நம் தமிழகத்தில் வேலுநாச்சியார் தானே களம் புகுந்தார் அவரோடு பெண்கள் படை போர்க்களத்தில் வீரம் காட்டி வெள்ளையரை வெல்லவும் செய்தனர். கணவர் இறப்புக்குப் பின் களம் கண்ட பெண்கள் வேலுநாச்சியார் தொடங்கி ஜான்சி ராணி வரை என்று பட்டியல் நீண்டு இன்றும் தொடர்கிறது என்பது நம் இந்தியப் பெண்கள் கொண்டிருக்கும் மனத்திட்பம் முனைப்புக்கும் சான்று. 
இதற்கு நம்மிடையே உதாரணமாக தேசத்தின் பெருமையாக நிற்பவர் நிகிதா கெளல். இன்றைய தலைமுறை இளம்பெண். லெப்டினன்ட் நிகிதாவின் மனஉறுதி அவரை வரலாற்றில் இடம் பிடிக்க வைத்திருக்கிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் 2019 - ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 40 பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தத் துயர சம்பவத்தையடுத்து சிலநாள்களுக்குப் பின் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் பதினெட்டு மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் ராணுவ மேஜர் விபூதி ஷங்கர் உள்பட நான்கு வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சண்டையில் தீவிரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 
டேராடூனை சேர்ந்த 34 வயது மேஜர் விபூதிக்கு பத்து மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் ஆகியிருந்தது. திருமணமாகி பத்தே மாதங்களில் வீரமரணம் அடைந்தார். "நீங்கள் என்னை விட இந்த தேசத்தைத் தான் அதிகம் விரும்பினீர்கள்' என்று கணவருக்காக கடைசி முத்தம் தந்து வழியனுப்பி வைத்தார் அவரின் மனைவி நிகிதா கெளல். அன்புக்குரிய கணவரின் மரணத்தால் கண்ணீர் சிந்திக் கொண்டு சோர்ந்து விடவில்லை நிகிதா. அத்துடன் ராணுவத்தில் பணியாற்ற முடிவெடுத்து சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி மையத்தில் சேர்ந்தார் நிகிதா. 
இழப்போ பெரிது, வயதோ சிறிது என்றாலும் சற்றும் மனம் தளராமல் முப்பத்தியொரு பெண்களுடன் பதினோரு மாதங்கள் நிகிதா தொடர் ராணுவப்பயிற்சி எடுத்து, லெப்டினென்ட் நிகிதா கெளல் என்று ராணுவ உடையுடன் நட்சத்திரத்தை அணிந்து கொண்டு முறைப்படி ராணுவ வீரர் ஆனார். 
"என்னுடைய பயணம் இப்போது தான் தொடங்கியுள்ளது. என் மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றி. என் மாமியார் தாய் மற்றும் என் பயணத்தில் பங்கு வகித்த அனைவருக்கும் நன்றிகளை உரித்தாக்குகிறேன் "என்று தெரிவித்துள்ளார். 
லெப்டினன்ட் நிகிதாவின் சொற்களுக்குள் ஒரு பொருள் தெளிவாகிறது. அவர் குடும்பத்தின் பெண்கள் உறுதுணையாக இந்த சாதனையில் முன்னேற்றத்திற்குத் துணை நின்றிருக்கிறார்கள். இந்த மனப்பான்மையோடு மனஉறுதி பெற்றுவிட்டால் இன்னும் சாதனை படைக்க களத்துக்கு நிறைய நிகிதாக்கள் வருவார்கள். நாளை நமதாகும்.  

தொடரும்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை காலம்: 9,111 ரயில் பயணங்களுக்கு ஏற்பாடு

அருணாசல பிரதேசம்: ஒரேயொரு வாக்காளா் வாக்களிப்பு

சத்தீஸ்கா்: துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் தோ்தல் பாதுகாப்பு பணி வீரா் உயிரிழப்பு

விளாத்திகுளத்தில் அதிகபட்ச வாக்குப்பதிவு

அரையிறுதியில் ஒடிஸா எஃப்சி

SCROLL FOR NEXT