மகளிர்மணி

இறகுப் பந்தாட்டத்தில் இந்தியச் சிறுமி!

26th Jan 2022 06:00 AM | - கண்ணம்மா பாரதி 

ADVERTISEMENT

 

நட்சத்திர இறகுப் பந்தாட்ட இந்திய வீரர்களான பிரகாஷ் படுகோன், கோபிசந்த், கிடாம்பி ஸ்ரீகாந்த், பிரணாய், லக்ஷ்யா சென்... வீராங்கனைகளான அஸ்வினி பொன்னப்பா, ஜ்வாலா கட்டா, சாய்னா நேவால், பி.வி.சிந்து ஆகியோர் இதுவரை சாதிக்காததை தஸ்நிம் மிர் என்ற 16 வயது இறகுப் பந்தாட்ட வீராங்கனை சாதித்துள்ளார்.

அப்படி என்ன சாதனையை தஸ்நிம் மிர் செய்துள்ளார் ?

19 வயதுக்குக் கீழ் பிரிவில் உலகின் "நம்பர் ஒன்' பெருமையைப் பெரும் முதல் இந்திய பெண்மணி, முதல் இந்தியர் என்ற இரட்டைப் பெருமைகளை தஸ்நிம் மிர் பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். பி.வி. சிந்து 19 வயதுக்கு கீழ் பிரிவின் உலகத் தரவரிசையில் இரண்டாவது ஸ்தானத்தில் இருந்தார்.

ADVERTISEMENT

இந்தியாவின் நேற்றைய இன்றைய தலை சிறந்த ஆண், பெண் இறகுப் பந்தாட்ட வீரர்கள் 19 வயதுக்கு கீழ் பிரிவில் விளையாடி முன்னேறியவர்கள்தான். அவர்களுக்கு எட்டாக் கனியாக இருந்த உலகின் நம்பர் ஒன் ஸ்தானம், தஸ்நிம்மிர்ரிடம் வந்து சேர்ந்துள்ளது.

2021-இல் மூன்று சர்வதேச இறகுப் பந்தாட்ட போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதே, தஸ்நிம் மிர்ரை இறகுப் பந்தாட்டத்தின் தரவரிசையில் பட படவென்றுமுன்னேறச் செய்து, உலகின் உச்ச நிலையான முதல் இடத்தை அடையச் செய்துள்ளது.

""நான் ஹைதராபாத்தில் இயங்கும் புல்லேலா கோபிசந்த் பயிற்சி நிலையத்தில் 2017-இல் சேர்ந்தேன். 2020-இல் குவாஹாத்தியில் "அஸ்ஸாம் இறகுப் பந்தாட்டக் கழகத்தின் பயிற்சி நிலையத்திற்கு மாறினேன். இறகுப் பந்தாட்டத்தில் ஆண்-பெண் ஆட்டத்தில் என்னுடன் ஜோடியாக விளையாடும் அயன் ரஷீத் அஸ்ஸாமில் பயிற்சி பெறுவதால், அவருடன் விளையாடி பயிற்சி பெற நான் அஸ்ஸாம் போகவேண்டிவந்தது. எனது பயிற்சியை அஸ்ஸாம் இறகுப் பந்தாட்டக் கழகத்தின் பயிற்சி நிலையத்திலேயே தொடருவேன்.

சென்ற ஆண்டு பல்கேரியா, ஃபிரான்ஸ், பெல்ஜியத்தில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றேன். இருந்தாலும் உலகின் நம்பர் ஒன்னாக வருவேன் என்று நினைக்கவில்லை. அப்படி வந்ததில் எனக்கு மகிழ்ச்சிதான்.

கனவில் கூட எதிர்பார்க்காதது கை கூடியுள்ளது ஆச்சரியம்தான்..! அடுத்த மாதம் ஈரானிலும், உகாண்டாவில் போட்டிகள் நடக்கின்றன. அதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறேன். உலகின் நம்பர் ஒன் இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமே...! சிறப்பாக விளையாடாவிட்டால் வந்த பெருமை, பட்டம் எல்லாம் கை நழுவிப் போய்விடும்.

அஸ்ஸாம் பயிற்சி நிலையத்தில் ஆண்களுடன் விளையாடுவதால் பந்தைக் கையாளுவதில் உள்ள லாகவங்களை கற்றுக் கொண்டுள்ளேன். எனது பயிற்சியாளர் இந்தோனேஷியாவைச் சேர்ந்த எட்வின் இரியாவான். நான் குஜராத்தைச் சேர்ந்தவள். என்னை இறகுப் பந்தாட்டத்திற்கு அறிமுகம் செய்து பயிற்சியும் கொடுத்தவர் எனது அப்பா இர்ஃபான் மிர். குஜராத் காவல்துறையில் அதிகாரியாக பணி புரிகிறார். அவர் இறகுப் பந்தாட்டப் பயிற்சியாளரும் ஆவார்.

எனது தம்பி முகம்மது அலி இறகுப் பந்தாட்டத்தில் குஜராத் மாநில ஜூனியர் சாம்பியன். இப்போது அஸ்ஸாமில் என்னுடன் அலி பயிற்சி பெறுகிறார். நான் 19 வயதுக்குக் கீழ் பிரிவின் தேசிய சாம்பியனாகவும் இருந்துள்ளேன். மனநலம் , உடல் வளம் வலு பெற தீவிரமாக பயிற்சிகளில் மூழ்கி உள்ளேன்'" என்கிறார் தஸ்நிம் மிர்.

தஸ்நிம் தொடர்ந்து சிறப்பாக விளையாடினால், இன்னும் சில ஆண்டுகளில் இன்னொரு பி.வி. சிந்துவாக மாறுவார்!

Tags : magaliarmani
ADVERTISEMENT
ADVERTISEMENT